திருப்பூரை அசத்திய ‘இயற்கை திருமணம்’

Read Time:5 Minute, 50 Second

திருப்பூரில் இயற்கை உரத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளில் சமையல், பனை பொருள் பரிசுகள், சிறுதானிய உணவு பொருட்கள் என்று முழுக்க முழுக்க இயற்கை பொருட்களை கொண்டு திருமணம் நடத்தப்பட்டது.

இன்றைய நவநாகரிக உலகில் இயந்திரமான ஓட்டத்தில் திருப்பூரில் இயற்கைக்கு நெருக்கமாக நடந்த திருமணம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பெரும்பாலான திருமணங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படும் நிலையில் இயற்கையை காக்க வேண்டும் என்பதற்காக லோக்கேஸ்வரன், கீதாஞ்சலி ரித்திகா தம்பதியினர் தங்களுடைய திருமணத்தில் அலங்காரம் முதல் உணவு வரையில் அனைத்துக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தினர்.

திருப்பூர் பின்னலாடை நிறுவன பின்புலம் கொண்ட லோகேஸ்வரன், கீதாஞ்சலி ரித்திகா நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இரு வீட்டாரும் பேசி தங்களுக்கு சொந்தமான நிலத்தில் திருமணத்திற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கையான முறையில் விவசாயம் செய்தனர்.

அதில் விளைந்த காய்கறிகளை மட்டுமே வைத்து அவர்கள் திருமணத்திற்கு உணவு தயாரித்துள்ளனர். திருமண மண்டபம் முழுக்க ரசாயனக் கலப்பில்லாத, இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பாரம்பரிய உணவுகளும் திண்பண்டங்களும் பரிமாறப்பட்டது. மேலும் மழை நீரில் சமையல் விருந்து அளிக்கப்பட்டது.

முற்றிலும் பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்ட இந்த திருமணத்தில் சில்வர், செம்பு பாத்திரங்கள், மக்காசோள தட்டுக்களுமே உணவு பரிமாறப் பயன்படுத்தப்பட்டது.

மரத்தால் ஆன கைவினைப் பொருட்கள், மூலிகைகள் என கிராமிய சந்தையையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, இயற்கை அங்காடிகள் மூலமாக மண்பாண்டங்கள், மூலிகை பொருட்கள், கைவினை பொருட்கள் என பலவிதமான பொருட்களின் விற்பனை அரங்குகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.

பெண் வீட்டார் சார்பில் மண மக்களுக்கு காங்கேயம் இன பசுவும் கன்றும் சீதனமாக வழங்கியது பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக அமைந்தது.

திருமண வீடுகளில் உறவுகளின் முகம் கூட காணாமல் ஸ்மார்ட் போன் விளையாட்டுக்களி மூழ்கிடும் குழந்தைகளிடம், நுங்கு வண்டி, பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை கொடுத்து சக குழந்தைகளுடன் கூடி விளையாடச் செய்தனர்.

மேலும், மண்டபத்தின் முகப்பு முதலே பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டு துணியில் எழுதப்பட்ட பேனர் வைக்கப்பட்டு இருந்தது. மண்டபம் முழுவதும் மழைநீர் சேமிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு போன்ற விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

இயற்கையான முறையில் கிராமிய மணம் கமழும் வகையில் நடைபெற்ற திருமணம் இயற்கை ஆர்வலர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

ஏராளமானோர் பங்கேற்கும் திருமணத்தில் இது போன்ற முயற்சிகள் வரும் காலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
இயற்கை திருமணம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மணமகனின் தந்தை சதாசிவம், “வழக்கமாக எங்கள் குடும்பமும், சம்மந்தி வீட்டார் குடும்பமும் இயற்கை வாழ்க்கை முறையில் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள்” என்று கூறியுள்ளார். ன்தியானம், பொது வெளியில் மரம் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியற்றை தொடர்ந்து செய்து வருகிறோம். இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை நிறைவாக இருக்கும் என்பது எங்களுடைய எண்ணமாக உள்ளது.

“அதன் அடிப்படையிலேயே நிறைவான வாழ்க்கையின் ஒரு அடித்தளமாக பார்க்கப்படும் திருமணத்தில் இயற்கையை நேசிக்கும் விதமாக அனைத்து விஷயங்களையும் செய்து, மணமக்கள் மட்டுமல்லாது திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆயிரக்கணக்கானோரும் இயற்கையின் மகத்துவத்தை அறியும் விதமான ஏற்பாடுகளை செய்தோம்.”

“திருமணத்தில் உணவு என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவதால், அதில் அதிக கவனம் செலுத்தினோம். நிச்சயதார்த்தம் முடிந்த உடனேயே செயற்கை உரங்கள் இல்லாத காய்கறிகளை விளைவித்து அதில் உணவு சமைத்தோம். வெள்ளை சர்க்கரை பயன்படுத்தாத இனிப்புகள், சேமித்து வைத்த மழை நீரில் சமைத்தது என மன நிறைவுடன் அனைத்தையும் செய்து முடித்தோம்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இயற்கையான முறை நடத்தப்பட்ட திருமணத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *