பசுமைவழிச் சாலையால் “தனியார் நிறுவனங்களுக்குப் பாதிப்பே இல்லையே?” பாலபாரதி கேள்வி

Read Time:6 Minute, 24 Second

சென்னை – சேலம் பசுமைவழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து கருத்தறிய சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது செய்யப்பட்டார்.

சென்னை – சேலம் பசுமைவழிச் சாலைக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் என 5 மாவட்டங்களில் 2,343 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும் தென்னை, கரும்பு, வாழை, நெல் எனை அனைத்துப் பொருட்களும் விளையக்கூடிய நிலங்கள், விவசாய கிணறுகள், விவசாயிகளின் வீடுகள் பல இடங்களில் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்

நெல், சோளம், கரும்பு, தென்னை என பசுமையாக காட்சியளிக்கும் விவசாய நிலத்தில் தாரை ஊற்றி சாலை போடுவதை நினைத்து கண்ணீர் சிந்தும் விவசாயிகள் ‘பசுமையை அழித்து போடப்படும் சாலைக்கு பெயர் பசுமைவழிச் சாலையா? என கேள்விகளை எழுப்புகிறார்கள். விவசாயிகளை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக 8 வழிச் சாலையா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. இது அரசு தரப்பில் மறுக்கப்படுகிறது.

இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகியுள்ளது.

திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாயிகளை சந்தித்துப் பேசியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கைது செய்யப்பட்டார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 14 பேரும் கைது செய்யப்பட்டார்கள். இதற்கு அரசியல் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலபாரதி விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், திட்டத்தினால் தனியார் நிறுவனங்களுக்குப் பாதிப்பே இல்லையே? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்த மாநில அரசும், மாவட்ட வருவாய்த்துறையும் முறையாக விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், இத்திட்டம்குறித்து மக்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும், நோட்டீஸும் வருவாய்த்துறை கொடுக்கவில்லை. அதேபோல, 8 வழிச் சாலைக்காக ஆய்வுசெய்யப்பட்ட பாதையை விட்டுவிட்டு, சிலரின் விருப்பு வெறுப்புக்காக தற்போது மாற்றுப் பாதையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.

இதனால், தற்போது சில தனியார் ஆலைகள் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் அளவீடு செய்துள்ளனர். இது, சிறு மற்றும் குறு விவசாய நிலங்களைப் பெரிதும் பாதித்துள்ளது. அரசின் பாரபட்சமான அளவீட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற முறைகேடுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று மக்களைச் சந்திக்கவிடாமல், அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை தமிழக ஆட்சியாளர்கள், காவல்துறையை வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். இது, ஜனநாயக விரோதச் செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார் பாலபாரதி.

பசுமை வழிச் சாலை திட்டத்தில் சாலை தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் பயணிக்கிறது. அம்மாவட்டத்தில் 919.24 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது.

மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி 70 முதல் 75 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை அளவீடு செய்து, முட்டுக்கல் நாட்டி வருகிறது.

சாலை தொடர்பாக சேலத்தில் கிராம மக்கள் சவுக்கு இணைதளத்திடம் பேசுகையில்,

  • சேலம்-திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரகன் செருப்புத் தொழிற்சாலை,

  • திமுக பிரமுகரின் எஸ்ஆர்எஸ் பொறியியல் கல்லூரி மற்றும்ம

  • ன்னர்பாளையத்தில் அதிமுக பிரமுகரின் க்ரஷர் தொழிற்சாலை

ஆகியவை இடிபடாமல் தடுப்பதற்காகவே விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளனர். பாரகன் செருப்புத் தொழிற்சாலை சேலத்திலிருந்து திருப்பத்தூர் செல்கையில் சாலையின் வலதுபுறம் அமைந்துள்ளது. தற்போது 8 வழிச் சாலைக்காக பாரகன் தொழிற்சாலையின் நேர் எதிரில் உள்ள ஒரு தனியார் தோட்டம் மற்றும் வன நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. அது வரை, இச்சாலையின் இடதுபுறம் வரும் 8 வழிச்சாலை, சரியாக, அச்சநாங்குட்டப்பட்டி வந்ததும், சாலையின் வலதுபுறம் சரியாக விளைநிலங்களின் ஊடே திரும்புகிறது.

இதேபோன்று சேலத்திலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள வரலட்சுமி சாகோ தொழிற்சாலை அடிபடாத வகையில் 8 வழிச்சாலைக்கான பாதை திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *