சத்துணவு முட்டை விநியோகம் செய்யும் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு லஞ்சம்!

Read Time:5 Minute, 12 Second

ஐடி ரெய்டில், தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனம் வரிஏய்ப்பு செய்தது, பண மதிப்பு நீக்கத்தின் போது கருப்பு பணத்தை மாற்ற வியூகம் செய்தது, அரசியல் கட்சிகளுக்கு லஞ்சம் வழங்கியது தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு போன்ற பொருட்களை ‘கிறிஸ்டி ஃபிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’ என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டிபாளையத்தில் இதன் அலுவலகம் உள்ளது. கிறிஸ்டி நிறுவனம் போலியான பெயர்களில் பல நிறுவனங்களை உருவாக்கி, அங்கிருந்து பொருட்களை வாங்கியதாக போலியாக கணக்கு தாக்கல் செய்து, வரி ஏய்ப்பிலும், கறுப்பு பண பதுக்கலிலும் ஈடுபட்டிருப்பதாக வருமானவரித் துறைக்கு புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனத்திலும், அதனுடன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர். அப்போது முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. ரூ. 17 கோடியும், தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியது. சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுதாதேவியின் நெற்குன்றத்தில் உள்ள வீட்டிலும் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல புகார்கள் எழுந்ததால், கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றியதாக செய்திகள் வெளியானது.

இதற்கிடையில், 2016 நவம்பரில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது நிறுவனம் பல போலி நிறுவனங்களை உருவாக்கி பணத்தை மாற்றியதாக கூறப்படுகிறது. அப்போதிருந்தே வருமானவரித் துறை கண்காணிப்பின் கீழ் வந்தது. இப்போது அதிரடியை காட்டியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை தொடரும் நிலையில் நிறுவனம் வரிஏய்ப்பு செய்தது, பண மதிப்பு நீக்கத்தின் போது கருப்பு பணத்தை மாற்ற வியூகம் செய்தது, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு லஞ்சம் வழங்கியுள்ளது என்று வருமான வரித்துறை தகவல்கள் தெரியவந்துள்ளது.

கிறிஸ்டி நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது தொடர்பாக கிடைத்த தகவல்கள் அடிப்படையில் நாங்கள் சென்னை மற்றும் நாமக்கல்லில் 100 இடங்களில் சோதனையை மேற்கொண்டோம். தொழில் விஷயமாக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூருக்கு சென்ற நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியை பிடித்து தமிழகம் கொண்டு வந்துள்ளோம். நாமக்கல் அருகே உள்ள அவருடைய பண்ணை வீட்டில் வைத்து விசாரணையை மேற்கொண்டோம் என வருமான வரித்துறையின் தகவல்கள் தெரிவிக்கிறது.
இப்போது வரையில் சோதனைகள் நடைபெற்று வருகிறது என கூறும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பை தெரிவிக்க மறுத்துவிட்டார்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெருமளவு வரிஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளது. நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவியின் வீட்டில் அவருக்கும், நிறுவனத்திற்கும் இடையிலான பரிவர்த்தனை தொடர்பான தகவல்களுக்காக சோதனையை மேற்கொண்டோம். இதில் அவருடைய பங்கு தொடர்பாக கூடுதல் தகவல்கள் எதையும் தெரிவிக்க முடியாது.

இரண்டு அமைச்சர்களுடன் அவருக்குள்ள தொடர்பு தொடர்பாகவும் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். பண மதிப்பு நீக்கத்தின் போது நிறுவனம் மாநில கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ. 245 கோடி பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளது. அவர்கள் வெற்றிகரமாக பணத்தை மாற்றியுள்ளனர் என்பது தெரிகிறது. சோதனையின் போது ஒரு இடத்தில் இருந்து 100 பென் டிரைவ்களை கைப்பற்றப்பட்டுள்ளது. அவை, நிறுவனம் எதிர்க்கட்சி உள்பட அரசியல் கட்சிகளுக்கு பணம் வழங்கியதை காட்டுகிறது என வருமான வரித்துறை அதிகாரி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *