தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு தலைசிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து!

Read Time:12 Minute, 41 Second

உலக அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு நிகராக இந்திய கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்ததும் திட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நாட்டின் 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தலைசிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்குவதற்கு, பல்கலைக்கழகங்களை தேர்வு செய்ய முன்னாள் தேர்தல் ஆணையர் கோபாலசாமி தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமனம் செய்தது. 100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் விண்ணப்பம் செய்தன. இதில் பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகிய 3 அரசு கல்வி நிறுவனங்களையும், பிட்ஸ் பிலானி, மணிப்பால் உயர்கல்வி நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் ஆகிய 3 தனியார் கல்வி நிறுவனங்களை மட்டும் குழு முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தேர்வுக்கு குழு, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐஆர்எப்) தரவரிசை பட்டியலை புறக்கணித்துள்ளது. இதில், தனியார் கல்வி நிறுவனங்களான மணிப்பால் மற்றும் பிலானி கல்வி நிறுவனங்கள் முறையே 18 மற்றும் 26 வது இடம்பிடிக்கிறது. அரசு கல்வி நிறுவனங்களில் பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் முதலிடம் பிடிக்கிறது. சென்னை ஐஐடி இரண்டாவது இடம்பிடிக்கிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட மும்பை மற்றும் டெல்லி ஐஐடிக்கள் 3 வது மற்றும் 4வது இடம் பிடிக்கிறது.
இதில், இன்னும் தொடங்கப்பட்டாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு தலைசிறந்த கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்றை மும்பைக்கு அருகே அமைப்போம் என்று நீடா அம்பானி கடந்த மார்ச் மாதம் கூறியது மட்டும்தான் தெரியும். இந்நிலையில் மத்திய அரசு தலைசிறந்த கல்வி நிறுவனமாக அந்தஸ்து வழங்கியது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகை செய்துள்ளது. தேர்வு குழுவிற்கு ஜியோ இன்ஸ்டிட்யூட் செய்துள்ள விண்ணப்பத்தில், ரூ. 9,500 கோடி ரூபாய் பயன்படுத்துகிறது. புனேயில் பல்கலைக்கழகம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகியதுமே சமூக வலைதளங்களில் ஜியோ பல்கலைக்கழகம் வைரலாகியது.

பல்கலைக்கழக மானியக்குழுவான யுசிஜியின் விதிமுறைகள், தொடங்கப்படும் கல்வி நிறுவனங்கள் என்றால் முதல் வேந்தர் மற்றும் துணை வேந்தர் மற்றும் உலக தரத்திலான பல்கலைக்கழகத்தை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் செயல்பாட்டுக்குழுவை அடையாளம் காண வேண்டும். அதனுடன் அவர்கள் அனைவரும் அதிகமான படிப்புத்தகுதியும், அதிக அனுபவமும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஜியோ பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில் இதுவரையில் இவைகுறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
ஜியோ பல்கலைக்கழகம் இடம்பெற்றது பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பினர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நிதா அம்பானிக்கு சாதமாக பா.ஜனதா அரசு செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. “இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகம் சிறந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்படுள்ளது. இதுபோன்ற அந்தஸ்து என்ன அடிப்படிப்படையில் வழங்கப்பட்டது என்பதை அரசு விளக்கவேண்டியது அவசியமானது,”என காங்கிரஸ் கூறியது.

ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆயிஷா கித்வய் பேசுகையில், “ஜியோ பல்கலைக்கழகத்திற்கு இன்னும் வளாகம் கூட கிடையாது, இணையதளம் அல்லது முன்னாள் மாணவர்கள் கிடையாது மற்றும் முக்கிய ஐஐடிகள் மற்றும் அசோக் பல்கலைக்கழகம் மற்றும் ஒபி ஜிண்டால் குளோப் பல்கலைக்கழகங்களை பின்னுக்கு தள்ளி முன்னே வந்துள்ளது. இனிதான் தொடங்கப்பட வேண்டும், ஆனால் உலகத்தரம் வாய்ந்த என்ற பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. இதனால் நோக்கத்தில் முரண்பாடு உள்ளது தெரியவில்லையா? என கேள்வியை எழுப்புகிறார்.

இதுபோன்று பல்கலைக்கழக பேராசியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், டுவிட்டர்வாசிகள் மத்திய அரசின் நகர்வை விமர்சனம் செய்து கேள்விகளை எழுப்பினர்.

தலைசிறந்த கல்வி நிறுவனம் என்றால் என்ன?

இந்தியாவில் 900-த்திற்கும் அதிகமான பல்கலைக்கழகழகங்கள், 40 ஆயிரத்திற்கும் அதிகமான கல்லூரிகள், பல்வேறு தொழில்நுட்பங்களில் டிப்ளோமா படிப்புகளை வழங்கும் சுமார் 13,000 தனித்தனி நிறுவனங்கள் உள்ளன. உலகின் அதிகமான கல்வி முறையை கொண்டிருந்தாலும், உலக தரத்தில் ரேங்க் பெரும் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் எந்தஒரு கல்வி நிறுவனமும் இடம்பிடிப்பது இல்லை.
இச்செய்தி கடந்த 20 ஆண்டுகளாக அரசு, கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்துவதாகவே இருந்து வருகிறது. இதனை தீர்க்கும் வகையில் மத்திய தலைசிறந்த கல்வி நிறுவனம் என்ற திட்டத்தை முன்வைத்தது. இதற்கு 10 அரசுப் பல்கலைக்கழகங்கள், 10 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 20 நிறுவனங்களை இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்படும். உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்திய பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்துவதே நோக்கமாகும்.

தலைசிறந்த கல்வி நிறுவனத்திற்கான (ஐஒஇ) சலுகைகள் என்ன?

இவ்வாறு தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்கள் 10 ஆண்டுகளில் உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும், கூடுதல் காலத்தில் முதல் 100 இடங்களை பிடிக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பாகும். இந்த இலக்கை அடைவதற்கு தேர்வு செய்யப்படும் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு உள்ளிட்ட எந்த ஒழுங்குமுறை அமைப்பும் கட்டுப்படுத்த முடியாது.

  • மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 30% இடங்களை வெளிநாட்டவருக்கு ஒதுக்கி கொள்ளலாம்.
  • 25% அளவுக்கு வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்.
  • அதனுடைய கல்வி நிரல்களில் (courses) 20% வரை ஆன்லைன் படிப்பாக வழங்கப்படலாம்.
  • .உலகின் 500 முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தன்னிச்சையாக ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
  • வெளிநாட்டு மாணவர்களுக்கு விருப்பம் போல கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.
  • எத்தனை ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடிப்பது என்பது தொடர்பாகவும் அதுவே முடிவை எடுக்கலாம்.
  • பாடத்திட்டங்களை மாற்றம் செய்வதில் முழு நெகிழ்வுத்தன்மையும் கொண்டிருக்கும். மொத்தத்தில் எந்தக் கட்டுப்பாடுமின்றி செயல்படும்.

நிதி உதவி

தலைசிறந்த கல்வி நிறுவனங்களாக தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்களில் அரசு நிறுவனங்களுக்கு மட்டும் அரசு 5 ஆண்டுகளுக்கு ரூ. 1000 கோடி நிதி உதவி செய்யும். இத்தொகை தனியார் நிறுவனங்களுக்கு கிடையாது. ஜியோ பல்கலைக்கழகத்திற்கு நிதி உதவி என்பது கிடையாது.

இருப்பினும் ஆராய்ச்சிகளுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசிடம் நிதிகோரிகையை வைக்கலாம்.

மத்திய அரசு விளக்கம்

விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஜியோ பல்கலைக்கழகம் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தற்போது புதிதாக தொடங்கப்பட உள்ள கல்வி நிறுவனங்கள் என கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
‘கிரீன்பீல்டு’ திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஒன்று தேர்வு செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கிரீன்பீல்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வரும் பல நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் சிறந்த நிறுவனமாக ஜியோ பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டது, சமூகவலைதளங்களில் இதுகுறித்து தவறான தகவல் பரப்பப்படுவதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேப்பர் அளவில்தான்

கல்வித்துறை செயலாளர் சுப்பிரமணியம் பேசுகையில் ‘‘ஜியோ பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக எந்த ஒரு அங்கீகாரமும் வழங்கவில்லை. அந்த நிறுவனம் பேப்பர் அளவில்தான் உள்ளது. அது இன்னமும் உருவாக்கப்படவில்லை என்பது அரசுக்கும் தெரியும். இதுபோல பேப்பர் அளவில் உள்ள 11 நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அதில் ஜியோ நிறுவனத்தின் செயல் திட்டம் ஏற்புடையதாகவும், சிறப்பாகவும் இருந்ததது. அதன் அடிப்படையிலேயே நாட்டின் மிகச்சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் அது இணைக்கப்பட்டது.

எனினும் அந்த நிறுவனம் கூறியபடி அடுத்த மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்பட்டால் மட்டுமே அந்த அங்கீகாரம் வழங்கப்படும். இந்த நிபந்தனைகளுடன் மட்டுமே நிதியுதவியும் வழங்கப்படும். அதுவரை அதற்கு உடனடியாக அங்கீகாரம் எதுவும் வழங்கப்படவில்லை’’ எனக் கூறினார்.

மத்திய அரசிடம் இருந்து மானியமாக இந்த பல்கலைக்கழகத்துக்கு ரூ.1000 கோடி கிடைக்கும் என்ற தகவலையும் சுப்ரமணியம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை தேர்வு செய்யும் விதிமுறைகளில் மூன்றாவதாக இருக்கும் க்ரீன்ஃபீல்ட் பிரைவேட் இன்ஸ்டிடியூஷன்ஸ் என்ற பிரிவின் கீழ்தான் ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தரம் என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் இதுவரை ஏற்படுத்தப்படாதவையாகவும், ஆனால் உயர் கொள்கையுடன் பொறுப்புள்ள தனிநபர் முதலீட்டாளர் நாட்டின் கல்வித் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற கொள்கையோடு வரும் போது அதனை மத்திய அரசு வரவேற்கும் வகையில் இந்த பிரிவு ஏற்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மத்திய அரசின் நடவடிக்கையை கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் டுவிட்டர்வாசிகள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *