நொய்யலில் மீண்டும் பொங்கிய நுரை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

Read Time:5 Minute, 15 Second

சாயப்பட்டறைகள் மற்றும் சலவை ஆலை கழிவுகள் நொய்யலில் கலப்பதால் ஆற்றில் நீர் வரும்போதெல்லாம் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது.

கோவையில் நொய்யல் ஆற்றில் புதன்கிழமை புதுவெள்ளம் நுரை பொங்கி காணப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருக்கும் வெள்ளியங்கிரி மலைக் காடுகளின் நீர் பிடிப்பு பகுதிகளை முக்கிய நீர் ஆதாரமாக கொண்டுள்ள நொய்யல் ஆற்றில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரித்தது. புது வெள்ளம் கால்வாய் மூலம் குளங்களுக்குத் திருப்பப்பட்டு வருகிறது.

நொய்யல் வெள்ளம் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள வெள்ளலூர் அணைக்கட்டுப் பகுதியை புதன்கிழமை கடந்து சென்றது. அணைக்கட்டில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் வெள்ளலூர் குளத்துக்குத் தண்ணீர் சென்று வரும் நிலையில், அணைக்கட்டைத் தாண்டி வெளியேறும் நீரில் வெண்மை நிறத்தில் நுரை பொங்கியது. காற்று பலமாக வீசிய நிலையில் நுரை காற்றில் பறந்து அக்கம் பக்கத்தில் வீடுகள் இருக்கும் பகுதிகளுக்குள் பரவியது.
நுரைபடும் இடங்களில் அரிப்பு ஏற்படுவதாகவும், சாயக் கழிவுகள் கலக்கப்படுவதாலேயே ஆற்றில் நுரை பொங்குவதாகவும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டினர்.

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி மணிகண்டன் பேசுகையில், கோவை புட்டுவிக்கி பாலம் அருகில் நொய்யலை ஒட்டி சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அதே பகுதியில் சலவை ஆலையும் உள்ளது. இவற்றின் கழிவுகள் நொய்யலில் கலப்பதால் ஆற்றில் நீர் வரும்போதெல்லாம் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நொய்யலாறு மாசடைந்து வருகிறது என்றார்.

நொய்யல் ஆற்றின் கிளை ஆறுகள், கால்வாய்கள் ஒவ்வொன்றாக அழிந்துவரும் நிலையில் அங்கு கழிவுநீரும் கலக்கப்படுகிறது.

அப்பகுதியை சேர்ந்த மக்கள் பேசுகையில் சுற்றுசுழல் ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், சிலர் மட்டும் கைது செய்யப்பட்டனர், சில ஆலைகள் மட்டுமே மூடப்பட்டது என குற்றம் சாட்டுகிறார்கள்.

இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை குற்றம் சாட்டும் மணிகண்டன், எங்களுடைய அமைப்பு தரப்பில் கடந்த மூன்று வருடங்களாக புகார் கொடுக்கப்பட்டும் எந்தஒரு நடவடிக்கையும் கிடையாது. இரண்டு வருடங்களுக்கு முன்னதாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாயப்பட்டறைகள் விதிகளை மீறி கழிவுகளை ஆற்றுக்குள் விடுவதாக கூறினார்கள். கடந்த வருடம் இதுபோன்ற ஆலைகளுக்கு நோட்டீஸ் விடுத்ததாக கூறினார்கள். இதுமட்டும்தான் எங்களுக்கான பதில். இப்போதும் சாயப்பட்டறை ஆலைகள் இங்கு அதிகரித்துதான் வருகிறது என குற்றம் சாட்டுகிறார்.
இப்போது நுரை பொங்கி வருவது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது, அரசு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நொய்யால் ஆறு இதுபோன்று நுரை பொங்கி வருவது ஒன்றும் புதியது கிடையாது. கடந்த ஆண்டு திருப்பூரில் இதுபோன்ற நிகழ்வு நேரிட்டது. அப்போது இப்பிரச்சினை குறித்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பணன்,

”நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலக்கவில்லை. வீடுகளின் சாக்கடைக் கழிவுகள்தான் கலந்துள்ளன. பொதுமக்கள் வீடுகளில் சோப்பு போட்டு குளித்ததால் ஏற்பட்ட நுரை கலந்ததால்தான் நொய்யலாற்றில் நுரை பெருக்கெடுத்து ஓடியது. இப்போது நுரை வடிந்து விட்டது. இதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *