கர்நாடகாவில் அனைத்து அணைகளும் அபாய நிலையை எட்டியது

Read Time:5 Minute, 21 Second

கர்நாடகாவில் தொடரும் கனமழையால் அனைத்து அணைகளும் அபாய நிலையை எட்டியுள்ளது. இதனால் தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை தொடங்கி 2 மாதங்கள் ஆன பின்னரும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தொடர் கனமழையின் காரணமாக கர்நாடகத்தில் ஓடும் காவிரி, கபிலா, துங்கா, பத்ரா, ஹேமாவதி உள்பட அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்துவதால் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 4 அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கின்றன. கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 4.60 அடி தான் பாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. நீர்வரத்து அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் அணையில் தொடர்ந்து நீரை தேக்கினால் பேராபத்து ஏற்படும் என கர்நாடக பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது. காவிரியில் முதல் முறையாக ஒரு லட்சம் கனஅடிகளை தாண்டி தண்ணீர் செல்கிறது என தகவல்தரவு தெரிவிக்கிறது. குடகு மாவட்டத்தில் காவிரியில் புதன்கிழமை தண்ணீர் வரத்து அபாய கட்டத்தை எட்டியது.

இதனால் கர்நாடக முதல்வர் குமாரசாமி, காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார்.

கடந்த மாதத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் 50 ஆயிரம் அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் 65 ஆயிரம் கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக பேரிடர் கண்காணிப்பு மைய அதிகாரி சுபா அவினேஷ் பேசுகையில், அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் அதிகமான மழை பெய்கிறது, இதனால் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைகளில் நீர்மட்டம் இப்போது அதிகமான அளவாகவும், அபாய அளவாகவும் உள்ளது.

பெரும்பாலும் அபாய கட்டத்தை எட்டிய வண்ணமே உள்ளது. நீர்மட்டம் அபாய அளவை எட்டியதும் அனைத்து ஷட்டர்களும் திறக்கப்படும். தண்ணீர் கால்வாயை சென்றடைய வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தாழ்வானப் பகுதிகள் மூழ்கும் மற்றும் வெள்ளம் நேரிடும் என்ற நிலையில் தண்ணீர் திறந்துவிடப்படும் அளவு அதிகரிக்கப்படுகிறது. மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்துக்கொண்டே இருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் என்றால் எதிர்ப்பு தெரிவிக்க முதல் நபராக வரும் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ், “கனமழை பெய்து வருவதால், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவது தவிர்க்க முடியாதது. மேகேதாட்டுவில் புதிய அணைகள் கட்டினால் இந்த நீரை தேக்க முடியும்” என தெரிவித்துள்ளார். விவசாய சங்கத் தலைவருமான மாதே கவுடா, “கர்நாடகாவில் மழை கொட்டித் தீர்க்கும் போது காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவது சிறந்த முடிவு” என பாராட்டு தெரிவித்துள்ளார்.

காலங்காலமாக காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்கக் கூடாது என பிடிவாதமாக போராடும் கன்னட அமைப்பினர் பலரும், இந்த முறை தமிழகத்துக்கு நீரை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்தால், அணைகள் தாங்காது என்பதால்தான் தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கர்நாடக அரசு நீர் திறக்க உத்தரவிட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்தகைய மழைக் காலங்களில் நீரை தேக்கும் அளவுக்கு கர்நாடகா புதிய அணைகளை கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *