கோவையில் பேரிடர் பயிற்சியால் நேரிட்ட பேரிழப்பு; போலி பயிற்சியாளர் ஆறுமுகம் யார்?

Read Time:9 Minute, 32 Second

கோவையில் கல்லூரி மாணவி உயிரிழப்புக்கு காரணமான பயிற்சியாளர் எங்களால் அனுமதிக்கப்பட்டவர் கிடையாது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

கோவை மாட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் தனியார் கல்லூரியில் செவ்வாய் கிழமை பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது, கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து விளக்கப்பட்டது. மாடியிலிருந்து குதிப்பது மற்றும் அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியின் போது மாடியிருந்து விழுந்த பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த மாணவி லோகேஸ்வரி (வயது 19) துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் வீடியோவில், 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டும் லோகேஸ்வரியை, பயிற்சியாளர் ஆறுமுகம் தள்ளுகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்துள்ளது. இதனால் தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது. மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் போலீஸ் பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்துள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தரப்பில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் இச்சம்பவம் நடைபெற்றதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. இதுதொடர்பான வீடியோ மற்றும் செய்திகள் இந்தியா முழுவதும் வைரலாக பரவிய நிலையில், தாமாக முன்வந்து மறுப்பு தெரிவித்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், “துரதிருஷ்டவசமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நாம் ஒரு இளம்பெண்ணின் உயிரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தாருக்கு இதயபூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பயிற்சியை தேசிய பேரிடர் மேலாண்மை மேற்கொள்ளவில்லை, பயிற்சியில் ஈடுபட்டு விபத்து ஏற்பட காரணமான அந்த பயிற்சியாளர் எங்களுடைய அதிகாரபூர்வ பயிற்சியாளர் கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் பழனிசாமி, உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணவர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரிக் கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளார். போலீசும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

போலி பயிற்சியாளர்

இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன், ஆலந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையின் போது தன்னை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சியாளர் என அடையாளப்படுத்திய ஆறுமுகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியார் கல்லூரிகளையே ஆறுமுகம் குறிவைத்துள்ளதும் தெரிகிறது. பயிற்சி தொடர்பாக கல்வி நிர்வாகத்திடம் 2017ல் ஒரு முறையும், 2018-ல் ஜூலை 3-ம் தேதியும் அனுமதி கோரி கடிதம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஆறுமுகம் அளித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை. கைதான ஆறுமுகம் மத்திய, மாநில அரசு ஊழியர் கிடையாது. ஆறுமுகத்தின் பின்புலம் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த ஆறுமுகம்?

Arumugam Ndma என்ற அவருடைய பேஸ்புக் கணக்கில் 2011-ம் ஆண்டு முதல் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பயிற்சியாளராக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்லூரிகளில் பயிற்சி கொடுப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். கருத்தரங்கில் பேசி பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து தெரிவிப்பது போன்றே இடம் பெற்றுள்ளது. வகுப்பறைக்கு வெளியே பயிற்சி அளிப்பது போன்ற எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. மாறாக, கோயம்புத்தூரை சுற்றிய சில முக்கிய பொறியியல் கல்லூரிகளுக்கு சென்று இக்கட்டான சூழல்களில் தங்களை எப்படி மாணவர்கள் பாதுகாத்து கொள்வது என்ற தலைப்பில் பேசியுள்ளார். இதனை கல்லூரிகளின் இணையப் பக்கத்தில் பார்க்க முடிகிறது.
இதனையடுத்து ஆறுமுகம் திட்டம் தீட்டி இதனை செயல்படுத்தியுள்ளாரா என்ற சந்தேகமும் எழுகிறது. ஆறுமுகத்தின் சார்பில் 2017-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தில், மத்திய அரசின் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சியானது அனைத்து கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. தங்களது கல்லூரியிலும் இதனை செய்ய அனுமதி வேண்டும் என கேட்டுள்ளார். பயிற்சி முழுவதும் இலவசம் என்றும் பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.50-ல் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 2016லும் இதே போன்று கடிதம் எழுதி முக்கிய கல்லூரிகளில் பயிற்சி கொடுத்துள்ளார். ஆனால் அவை அனைத்துமே தனியார் கல்லூரிகள் என்பது தெரியவந்துள்ளது. பிற கல்லூரிகளைப் போன்றே, மாணவி லோகேஸ்வரி படித்த கலைமகள் கல்லூரியும் அந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு பயிற்சிக்கு அனுமதி அளித்துள்ளது. ஆறுமுகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இடம்பெற்று உள்ள இ-மெயில் முகவரி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய செயல்பாட்டில் இருப்பது கிடையாது. மேலாண்மை ஆணையம் இணையத்திலும் சில ஜி-மெயில் ஐடியை பார்க்க முடிகிறது.

நெல்லையில் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ராஜேந்திர ரத்னா பேசுகையில், அங்கீகரிக்கப்படாத பயிற்சியாளர்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்விநிலையங்களில் பேரிடர் மேலாண்மை பற்றி பயிற்சி அளிப்பதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவை கல்லூரியில் பேரிடர் பயிற்சி அளித்த போலி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டு அவரது சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது போலி சான்றிதழ்கள்குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சகம்

போதிய பாதுகாப்பு இல்லாத பயிற்சிக்கு என்டிஎம்ஏ ஒப்புதல் அளிப்பது கிடையாது. கோவை மாணவி உயிரிழந்த கல்லூரியில் நடந்த பயிற்சியை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நடத்தவில்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு, கல்லூரி முதல்வருக்கு பாரதியார் பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியது.

நிகழ்ச்சிக்காக எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக செய்யவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. பயிற்சி நடைபெறும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ்கள் நிறுத்தம், பிற துறைகளுக்கு தகவல் தெரிவிப்பது என எதுவும் செய்யப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *