பெரும்பான்மை அரசுக்கள் அனைத்தும் நீதித்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது – செல்லமேஸ்வர்

Read Time:4 Minute, 41 Second

பெரும்பான்மையுடன் வரும் அரசுக்கள் அனைத்தும் நீதித்துறையை கட்டுப்படுத்தவே முயற்சிக்கிறது என செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுப்பெற்ற செல்லமேஸ்வர் கொச்சியில் மனோரமா செய்தி தொலைக்காட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த போது, கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலிஜியம் 2 தடவை சிபாரிசு செய்தவரை, மத்திய அரசு ஏற்காதது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

என்ன சூழ்நிலை கடிதம் எழுத தூண்டியது என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய செல்லமேஸ்வர், “தனிப் பெரும்பான்மையுடன் வரும் அரசுக்கள் எல்லாம், எப்போதும் நீதித்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில், பதவியில் இருப்பவர்கள் தங்களுடைய வலிமையை பயன்படுத்த வேண்டும், அப்போதுதான் சுதந்திரம் சமரசம் செய்யப்படமாட்டாது,” என கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் தோல்வியை தழுவினால், தேர்தல் மட்டுமே தீர்வாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேர் கடந்த ஜனவரி மாதம் இந்திய வரலாற்றில் முதன்முறை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பேசினார்கள். அப்போது உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சரமாரியாக குற்றம் சாட்டினார். இவ்விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மத்திய அரசுக்கு எதிராக கடிதம்

இதனையடுத்து மார்ச் மாதம் மத்திய அரசுக்கு எதிராக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு 6 பக்க கடிதம் ஒன்றை எழுதினார் செல்லமேஸ்வர். அதன் நகல்களை உச்சநீதிமன்றத்தின் மற்ற 22 நீதிபதிகளுக்கும் அனுப்பி வைத்தார். கர்நாடகத்தில் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணா பட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக கொலிஜியம் தேர்வு செய்தது, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை கடிதத்தில் விவரித்த செல்லமேஸ்வர், நமது சிபாரிசை மறுஆய்வு செய்யுமாறு ஒரு உயர்நீதிமன்றத்தை மத்திய அரசு கேட்பது முறையற்றது.

உச்சநீதிமன்றத்தை தவிர்த்து, உயர்நீதிமன்றங்களை மத்திய அரசு நேரடியாக தொடர்பு கொண்டு, நிலுவையில் உள்ள வழக்குகளில் என்ன உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடும் நாள், வெகு தூரத்தில் இல்லை. எந்த மாநிலத்திலும், அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையிலான நெருக்கமானது, ஜனநாயகத்துக்கு மரண ஒலியாகவே இருக்கும். நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு பற்றி எல்லா நீதிபதிகளும் அடங்கிய ஒட்டுமொத்த கோர்ட்டையும் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

ஏப்ரலில் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய செல்லமேஸ்வர் எதிர்கால தலைமுறையினருக்காக நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது மத்திய புலனாய்வு அமைப்பு சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் மத்தியில் ஆளுகிற கட்சிகளால் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் நீதிபதி செல்லமேஸ்வர் சூசகமாக சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *