உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் ‘இன்னும் பல பதக்கங்களை வெல்லமுடியும்’ ஹிமா தாஸ் உற்சாகம்

Read Time:6 Minute, 12 Second

இன்று தங்க மங்கையாக உலகம் முழுவதும் ஜொலிக்கும் ஹிமா தாஸ் அடிப்படையில் ஒரு கால்பந்து வீராங்கனை.

பின்லாந்தில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹிமா தாஸ் பந்தய இலக்கை 51.46 விநாடிகளில் அடைந்தார். ருமேனியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரியா மிக்லோஸ் 52.07 நொடிகளில் இலக்கை அடைந்து வெள்ளியை வென்றார். அவரைத் தொடர்ந்து 52.28 நொடிகளில் ஓடிய அமெரிக்கவின் டெய்லர் மேண்டன் வெண்கலம் வென்றார்.

ஹிமா தாசுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடக்கத்தில் மெதுவாக ஓட தொடங்கிய ஹிமா தாஸ், மூன்று வீராங்கனைகளுக்கு பின்தங்கிய நிலையில் ஓடினார். கடைசி 100 மீட்டரில் வேகம் காட்டி முதலிடத்தை பிடித்து தங்கத்தை தனதாக்கினார். 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி யில் முதலாவதாக இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்தவர் ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா.

இரண்டு வருடங்களுக்கு முன்னதாக விளையாட்டு போட்டிக்குள் கால் பதித்த ஹிமா தாஸ் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்டார்.

அசாம் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில்தான் அவருடைய திறமை வெளிப்பட தொடங்கியது.

ஓட்டப்பந்தையத்திற்கான போதிய மைதான வசதி இல்லாத காரணத்தினால் அவர் கால்பந்து மைதானத்தில்தான் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். எந்தஒரு வசதியும் இல்லாமல் பயிற்சி பெற்ற கடந்த வருடம் தேசிய அளவில் நடைபெற்ற ஜூனியர் விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் வெண்கலம் வாங்கினார். பாங்காங்கில் நடைபெற்ற ஆசியன் யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கொள்ள தகுதிப்பெற்றார், 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் 7 வது இடம்பிடித்தார். பின்னர் 400 மீட்டரில் தீவிரம் காட்டிய அவர் இன்று தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து, தேசம் முழுவதும் தன்னுடைய பெயரை உச்சரிக்க செய்துள்ளார்.

ஹிமா தாசும் ஒரு தங்கல் நாயகிதான்!

இன்று தங்க மங்கையாக உலகம் முழுவதும் ஜொலிக்கும் ஹிமா தாஸ் அடிப்படையில் ஒரு கால்பந்து வீராங்கனை.

அசாம் மாநிலம் நெளகாவ் மாவட்டத்தில் 16 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தை சேர்ந்தவர் ஹிமா தாஸ். ஹிமாவின் குடும்பம் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வது. அசாமில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் குடும்பங்களில் இருவரது குடும்பமும் ஒன்று. தலைநகர்
கவுகாத்தியில் நடைபெற்ற ஒரு முகாமில் பங்கேற்க வந்தபோது தான் பயிற்சியாளர் நிபுண் தாஸ், ஹிமா தாஸ் திறமையை கண்டறிந்தார்.

ஹிமா ஓடும் முறையைப் பார்த்து நம்பிக்கை ஏற்பட்டதும், அவள் சாதிக்கப் பிறந்தவள் என்பதை உணர்ந்து கொண்ட பயிற்சியாளர் நிபுண் தாஸ், அவருக்கான உதவிகளை செய்து இன்று இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளார்.

தொடக்கத்தில் கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்த ஹிமா, தனது கிராமத்திலும், மாவட்டத்தில் நடைபெறும் சிறிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று 100, 200 ரூபாய்கள் பரிசுத் தொகை பெற்றுள்ளார். கால்பந்து விளையாடும்போது நிறைய ஓட வேண்டும். இதனால் இயல்பாகவே அவரது உடல்வாகு விளையாட்டு வீராங்கனைக்கு தேவையான வலுவுடன் இருந்தது. அதுவே ஹிமா தாஸை தடகள வீராங்கனையாக மாற்ற உறுதுணையாக இருந்தது.

ஹிமாவின் பெற்றோரிடம் அனுமதி வாங்கி பயிற்சியத்த நிபுண் தாஸ், “தொடக்கத்தில் ஹிமா தாஸ் பின்தங்கியிருந்தாலும் இன்று அவள் தங்கம் வென்றுவிடுவாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது” என்று பெருமையுடன் கூறுகிறார். சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியக் கொடியை ஏந்தியவாறு தலைநிமிர்ந்து வெற்றிச் சிரிப்போடு இந்தியர்களை பெருமையடைய செய்த ஹிமாவும் ஒரு தங்கல் நாயகிதான். முதலிடம் பிடித்ததும் தேசியக் கொடியை ஏந்தியவாறு மகிழ்ச்சியுடன் ஓடிய ஹிமா, இதுதான் எனக்கானது என்று வார்த்தையால் சொல்ல முடியாத மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஹிமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள ஹிமா, இந்திய தேசத்திற்கான என்னுடைய வெற்றிப் பயணம் தொடரும், எதிர்காலத்தில் இன்னும் பல பதக்கங்களை வெல்லமுடியும் என்கிறார். ஹிமாவின் வெற்றிப் பயணம் தொடரட்டும் என வாழ்த்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *