12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி மலர்களை பார்க்கலாம்! வாங்க!

Read Time:4 Minute, 1 Second

மேற்கு தொடர்ச்சி மலைகளில், பசுமையான புல்வெளிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நிறைந்திருந்த குறிஞ்சி செடிகள் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தனது இன்முகத்தை காட்டி சிரிக்கத் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் 450 வகையான குறிஞ்சி மலர்கள் உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 59 வகையான குறிஞ்சி மலர்கள் உள்ளன.

அறிய வகை பூவாக கருதப்பட்டு வரும் நீல குறிஞ்சி பூக்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு பூத்துக் குலுங்கியது. இப்போது 12 ஆண்டுகளுக்கு பின்னர் கொடைக்கானல், ஊட்டி, மூணாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நீல குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. பசுமையான புல்வெளிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பூத்துக் குலுங்கும் இந்த குறிஞ்சி மலர்கள் இந்த ஆண்டு இறுதி வரையில் மலைப் பகுதி முழுவதும் அலங்கரிக்கிறது.

நீலக்குறிஞ்சி பூக்களை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளதால் மாவட்ட நிர்வாகங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளது. நீல குறிஞ்சி மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிக்கும் ‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு செல்ல இதுசரியான நேரமாகும். கேரள மாநிலம் மூணாற்றிலும் நீல குறிஞ்சி மலர்கள் பூத்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

குறிஞ்சி பூக்களின் சீசன் தொடங்கியுள்ளதால் தேனீக்களின் எண்ணிக்கையும் இனப்பெருக்கமும் அதிகரித்துள்ளது. வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கும். பசுமை போர்த்திய மலைகள் எங்கும் நீல நிறமாக காட்சியளிக்க உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் இயற்கையை ரசிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகையானது வெகுவாக பாதிக்கப்பட்டது, இப்போது நீல குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அம்மாநில அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. தேவிகுளம் வனத்துறை அதிகாரி லட்சுமி ராஜேஷ்வரி பேசுகையில், “அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் என வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருவார்கள் என நம்புகிறோம்,” என்று கூறுகிறார்.

தமிழகத்தில் நீல குறிஞ்சி விதைகளை சேகரித்து, வரும் நாட்களில் அதிக அளவு குறிஞ்சி செடிகளை நடவு செய்ய வேண்டும். இதன்மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேகத்தை போர்த்திக்கொண்ட மலை முகடுகள், காணும் இடமெல்லாம் பசுமை பொங்கும் இதமான சூழல் என கொடைக்கானலின் அழகை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை இப்போது நீல குறிஞ்சி மலர்கள் வரவேற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *