வாட்ஸ் அப்பை கண்காணிக்க மத்திய அரசு திட்டம் ‘உளவு பார்க்கும் நிலையை ஏற்படுத்தும்’ உச்ச நீதிமன்றம் விமர்சனம்

Read Time:3 Minute, 18 Second

சமூக வலைதளங்களில் தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களைக் கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘சமூக வலைதள தகவல் மையம்’ என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது.

இந்த கண்காணிப்பு மையத்தை அமைக்க மத்திய அரசின் பிஇசிஐஎல் நிறுவனம் சார்பில் அண்மையில் டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மஹுவா மொய்திரா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். சமூக வலைதளங்களின் தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க தனி மையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாவட்ட அளவில் இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் அரசை விமர்சனம் செய்பவர்கள் குறிவைக்கப்படுவார்கள். மத்திய அரசின் முடிவு மக்களின் அடிப்படை பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரானது. இதனால் ஜனநாயகம் கேள்விக்குறியாகும்.
மக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு மறைமுகமாக பறிக்க முயற்சி செய்கிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. இம்மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகமது நிஜாம் பாஷா ஆஜராகினர்.

மஹுவா மொய்திரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், இதுதொடர்பான நடவடிக்கைக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி மத்திய அரசு டெண்டர் கோருகிறது. சமூக வலைதள மையம் உருவாக்குவதன் மூலம் மக்களின் சமூக வலைதளங்களை கண்காணிக்க விரும்புகிறார்கள் என்றார்.

இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில்,

நாட்டு மக்களின் வாட்ஸ்–அப் தகவல்களை மத்திய அரசு உளவு பார்க்க விரும்புகிறது. இது ஒருவரை ரகசியமாக கண்காணிப்பது போன்ற நிலையைத்தான் ஏற்படுத்தும்.

டெண்டர் திறப்பதற்கான கடைசி தேதிக்கு முன்பாகவே, வருகிற 3–ந்தேதி இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும்’’ என்று தெரிவித்தனர். அதற்கு முன்பாக ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் மத்திய அரசு விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *