கறுப்பு வைரத்துக்குள் தணியாமல் கிடந்த கல்வி வேட்கை…!

Read Time:6 Minute, 24 Second

இன்று கல்வியில் தமிழகம் தலையெழுந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டு, உயிரோட்டம் கொடுத்தவர் மக்களின் முதலமைச்சர் காமராஜர் அவர்களே. அறியாமை என்ற இருட்டில் அழுந்திக் கிடந்த பாமரர்களின் இதயத்தில் கல்வி வெளிச்சத்தைப் பாய்ச்சிய கருப்பு காந்தியின் பிறந்த தினம் இன்று. 1903-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி விருதுப்பட்டியில் பிறந்த காமராஜரின் வாழ்நாள் 72 ஆண்டுகள். 1915-ம் ஆண்டு காமராஜர் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ‘வந்தே மாதரம்’ கோஷத்தை எழுப்பினார். 

தேசம் சுதந்திரம் அடையவும், தேசம் முன்னேற்றம் அடையவும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவர் ஒரு சகாப்தம்தான். 

மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கர்மவீரர் காமராஜர் அவர்களின் பெருமைகளை எழுத வேண்டும் என்றால் ஒருவர் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் எழுதலாம். காமராஜர் வாழ்ந்த விதத்தை படிக்கும் போதும், மனதிற்குள் நினைக்கும் போதும் அதிசயக் கனவு போல் கண் சிமிட்டுகிறது. 1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தமிழகத்தின் முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றுக் கொண்டார். ஏழை, எளிய பாமர மக்களின் மீது அளவற்ற அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார். அவர் கொண்டுவந்த திட்டத்தில் சிறு குறையென யாரும் சுட்டிக்காட்ட முடியாத வண்ணம் அவ்வளவு சிறப்பாக ஆட்சியை நடத்தினார். இன்றும் மக்களால் கொண்டாடப்படும் தலைவராக இருக்கிறார். 

தமிழகம் இன்று தன்னுடைய பெருமையென எவற்றையெல்லாம் கொண்டாடுகிறதோ அவற்றில் பெரும்பாலானவற்றுக்குத் தன்னுடைய வெறும் 9 ஆண்டுகள் (1954-1963) ஆட்சிக் காலகட்டத்தில் விதை போட்டவர் காமராஜர். பல்வேறு துறைகளில் அவருடைய செயல்களை பட்டியலிடலாம். அவருடைய சாதனைகளில் மிகவும் மகத்தானது கல்வித்துறையில் அவர் செய்த புரட்சிதான் என்றால் ஐயம் கிடையாது.

காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கையே ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்விமுறை ஒழிப்புதான். “சிலர் பரம்பரைத் தொழிலையே செய்து வர வேண்டும் என்கிறார்கள். நாம் கீழேயே இருக்க வேண்டுமாம். நம்மைப் படிக்காதவர்களாக வைத்திருந்து, நாம் ரோடு போடவும், கல் உடைக்கவும், ஏர் ஓட்டவும், சேறு சகதியில் நாற்று நடவும் பயன்பட வேண்டுமாம். அவர்கள் மட்டும் நகத்தில் மண் படாமல் வேலை செய்து முன்னேற வேண்டுமாம். 
எப்படியிருக்கிறது நியாயம்? நாமும் படித்து, நாலு தொழில் செய்து முன்னேற வேண்டாமா?” என்று கேட்டார். எந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கல்வித் துறையில் அதிகபட்ச வளர்ச்சியைக் கொடுத்தவர். குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் முதல் கல்விக்காக பல்வேறு சாதனைகளை செய்தார். காமராஜர் அனைவருக்குமான இலவச கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தார்.

1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப்பள்ளிகள் எண்ணிக்கை 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 637ல் இருந்து 1995 ஆக உயர்ந்தது.

இந்தச் சாதனையைப் போற்றும் வகையிலேயே 2008 முதல் கல்வி வளர்ச்சி தினமாக காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். 

மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்புக்கு அவர் ஒருமுறை பொதுக்கூட்ட மேடையில் பேசியதை உதாரணமாக கூறலாம். ‘ஏழைகளுக்கு சாப்பாடு போட்டால், அவன் பரம்பரையாக சாப்பிட்டானா? என்று கேட்பது நியாயமா? ஏழைகளின் குழந்தைகளை வாட விடுவது முறையா? அவர்களை படிக்க வைத்தால்தானே முன்னுக்கு வருவார்கள். அந்த காரியத்தை நான் செய்தால், வசதி உள்ளவர்கள், பணக்காரர்கள் கோபப்படுகிறார்கள். பணக்கார பையன்கள் படிக்கவா, நான் முதல்-அமைச்சராக இருந்து ராஜாங்கம் நடத்துகிறேன்’ என்று உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பேசினார். 

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க உதவுகிறார் போல் படம் எடுக்கலாம் என்ற முன்மொழிவை, “அடப்பாவி படமெடுக்கும் மூன்று லட்சத்தில் இன்னும் பத்து ஊர்களில் நான் பள்ளிக்கூடம்” கட்டுவேன் என நிராகரித்தவர் காமராஜர். 

இது ஏழை குழந்தைகளை கல்வியை கொடுத்து சமுதாயத்தில் உயர்த்த வேண்டும் என்ற உள்ளத்தின் வேட்கை கறுப்பு வைரத்துக்குள் தணியாமல் கிடந்தது என்பதை காட்டுகிறது. 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள். அன்றைய நாளில் அவரது இறுதி மூச்சு நின்று விட்டது. காந்தியத்தின் கடைசித் தூண் சாய்ந்தது. அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் இந்த நாட்டிற்கு ஆற்றிய தொண்டுகள் கறுப்பு வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. காமராஜர் மறைந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் அவருடைய கீர்த்தி உயருகிறதே அன்றி குறையவில்லை. இன்னும் உயர்ந்து கொண்டே செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *