2017-ல் குண்டும், குழியுமான சாலைகளால் 3,597 பேர் உயிரிழப்பு, பயங்கரவாதத்தால் 803 பேர் உயிரிழப்பு

Read Time:4 Minute, 47 Second

2017-ல் குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்பட்ட விபத்துகளில் 3,597 பேர் உயிரிழந்துள்ளனர், நாள் ஒன்றுக்கு 10 பேரது உயிரை வாங்கியுள்ளது. குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படும் உயிரிழப்பு 2016-ம் ஆண்டிலிருந்து 50 சதவிதம் உயர்ந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் மட்டும் ஒரு வருடத்தில் இதுபோன்ற சாலைகளால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையானது இருமடங்காக உயர்ந்து 726 ஆக உள்ளது என தகவல்தரவு காட்டுகிறது. ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியாவில் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 803 ஆகும். இதில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளும் அடங்குவார்கள்.

குண்டும் குழியுமான சாலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

2017-ல் – 3,597
2016-ல் – 2,324

2017-ல் அதிகமாக உயிரிழப்பு நேரிட்ட மாநிலங்கள் விபரம்:

உத்தரபிரதேசம் – 987
மராட்டியம் – 726
அரியானா – 522
குஜராத் – 228

2016-ல் அதிகமாக உயிரிழப்பு நேரிட்ட மாநிலங்கள் விபரம்:

உத்தரபிரதேசம் – 714
மராட்டியம் – 329
ஒடிசா – 208
ஆந்திரா – 131

தலைநகரான டெல்லியில் குண்டும், குழியுமான சாலை காரணமாக 2016-ல் உயிரிழப்புகள் எதுவும் கிடையாது, ஆனால் 2017-ம் ஆண்டு 8 பேர் உயிரிழந்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாக 2016-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாலைகளை நிர்வாகம் செய்யும் நகராட்சிகளில் ஊழல் மற்றும் திறமையின்மையே இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டாலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைகவசம் அணிவது கிடையாது மற்றும் விதிமுறைகளை சரியாக பின்பற்றுவது கிடையாது இதனால் தான் இதுபோன்ற உயிரிழப்புகள் நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இதுபோன்று சாலை போடப்படும் இடங்களில் நேரிடும் விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 3,878-ல் இருந்து 2017-ம் ஆண்டு 4,250 ஆக உயர்ந்து உள்ளது.

சாலை பாதுகாப்பு நிபுணர் ரோகித் பாலுஜா பேசுகையில், இவ்விவகாரங்களில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார். மத்திய சாலை போக்குவரத்து துறை அதிகாரிகள் பேசுகையில், சாலைகள் வடிவமைப்பு, சாலைகள் பராமரிப்பு மற்றும் பிரச்சனைகளை சரிசெய்வதில் அலட்சியம் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரிப்பு காரணமாக, தொடர்புடைய அதிகாரிகளுக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையிலான ஷரத்து மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. பாராளுமன்ற செயல்பாடுகள் முடங்குவதால், மசோதா நிறைவேறப்படாமல் உள்ளது என்றார்.

ஆனால் ரோகித் பாலுஜா, “தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக எப்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்பதை சட்டம் தெளிவாக எடுத்துரைக்கவில்லை. அரசு உயிருக்கு ரூபாய் 2 லட்சம் அல்லது ரூபாய் 5 லட்சம் விலை நிர்ணயம் செய்வது எப்படி இதனை சரிசெய்ய முடியும்?” என கேள்வியை எழுப்புகிறார்.

சர்வதேச சாலை கூட்டமைப்பின் தலைவர் கே. கே. கபிலா பேசுகையில், இப்போது கொண்டுவரப்படும் சட்ட திருத்தங்கள் பாதுகாப்பான சாலைகளுக்கு வழிவகை செய்யும். இவ்விவகாரத்தில் அனைத்து எம்.பி.க்களும் மசோதாவை தாக்கல் செய்ய ஒத்துழைப்பு அழிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 60 ஆயிரம் விபத்துகள் நேரிட்டதாகவும், அவற்றில் 1 லட்சத்து 46 ஆயிரம் பேர் பலியானதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *