காற்று மாசுபாட்டால் சென்னையில் 4,800 பேர் உயிரிழப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்!

Read Time:4 Minute, 10 Second

சென்னையில் காற்று மாசுபாட்டால் 2016-ம் ஆண்டில் மட்டும் 4,800 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காற்று மாசுபாடு காரணமாக, நுரையீரல், சுவாகக்கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் காற்று மாசுபாட்டால் அதிகமான உயிரிழப்புகளை சந்திக்கும் நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி மூன்றாவது இடம் பிடிக்கிறது. டெல்லியில் கடந்த 2016-ம் ஆண்டில் 15 ஆயிரம் பேர் சுவாசக் கோளாறு உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான நோய்களால் உயிரிழந்துள்ளனர். இவ்வரிசையில் முதலிடம் பிடிக்கும் சீனாவின் செங்காய் நகரில் 17,600 பேரும், இரண்டாவது இடம்பிடித்த பெய்ஜிங்கில் 18,200 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மனித உயிர்களுக்கு ஆபத்து விளைக்கும் வகையில் காற்றில் மாசு பிஎம் 2.5 அளவு அதிகரிக்கும் போது, நுரையீரல், சுவாசக்கோளாறு உள்ளவர்கள் அதிகமான அளவில் உயிரிழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் சூழல் துறை இயக்குநர் அனுமிதா ராய்சவுத்ரி பேசுகையில், “டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காற்று மாசு முக்கிய அச்சுறுத்தலாக நாள்தோறும் இருந்து வருகிறது. இதனை வெற்றிக்கரமாக சமாளிக்க கடுமையான விதிகளும், தரக்கட்டுப்பாடுகளும் அவசியம். அவை சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற மேலாண்மை செய்வதும் அவசியம்” என கூறியுள்ளார்.

காற்றில் மாசின் அளவு பிஎம் 2.5 அதிகரிக்கும் போது, மனிதர்களுக்கு இதயநோய், சுவாச நோய்கள், புற்றுநோய், குறைந்த வயதில் திடீரென இறப்பை தழுவுதல் போன்றவை ஏற்படுகிறது. பனிக்காலத்தில் காற்றில் மாசு அதிகரிக்கும் போது, நுரையீரல், இதயநோய், சுவாசநோய் உள்ளவர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவார்கள். ஆசிய நாடுகளில் காற்று மாசுபாடு மோசமாக காணப்படுகிறது. 2016-ல் சீனா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 13 முக்கிய நகரங்கள் காற்று மாசுபாட்டின் ஆபத்தில் சிக்கி இருக்கிறது.

டெல்லியில் மட்டும் 2016-ம் ஆண்டில் காற்று மாசு காரணமாக, ஏற்படும் சுவாச நோய், நுரையீரல் நோய், புற்றுநோய் போன்றவற்றால், 14 ஆயிரத்து 800 பேர் இறந்துள்ளனர். மும்பையில் 10 ஆயிரத்து 500 பேரும், கொல்கத்தாவில் 7 ஆயிரத்து 300 பேரும், சென்னையில் 4 ஆயிரத்து 800 பேரும் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாடுகளில் சீனா மட்டுமே காற்றில் மாசின் அளவை கட்டுப்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளும், கொள்கை முடிவுகளும் எடுத்து செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவிடம் அதுபோன்ற ஸ்திரமான கொள்கைகள் எதுவும் கிடையாது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் காற்று மாசை குறைக்கும் வகையில், சிறந்த கொள்கைகளும், செயல்படுத்தும் முறைகளும் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான கூட்டு பிராந்திய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என காற்று மாசுபாடு தொடர்பான ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *