அதிமுக, திமுக, ஒப்பந்தக்காரர்கள் சுரண்டல் கூட்டணி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

Read Time:7 Minute, 10 Second

அரசியலில் எதிரிகளைப் போலக் காட்டிக்கொள்ளும் திமுக, அதிமுக ஊழல் செய்வதிலும், கருப்புப் பணத்தை மாற்றுவதிலும் மட்டும் ஒன்றாக கைகோத்துள்ளன என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் எஸ்.பி.கே நிறுவன உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வரும் வருமானவரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கக்கட்டிகள் குறித்த விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இவை அனைத்தும் முறையாக ஈட்டிய சொத்துகள் அல்ல என்பதிலிருந்தே தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதைப் புரிந்துகொள்ள முடியும்.

எஸ்.பி.கே நிறுவன உரிமையாளர் செய்யாத்துரை, அவரது மகன் நாகராஜ், அவர்களின் தொழில் பங்குதாரர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைகளில் இதுவரை 150 கோடி பணம், 120 கிலோ தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் இல்லத்தில் இவ்வளவு பணம் ரொக்கமாக வைத்திருக்க வேண்டிய தேவையே இல்லை.

சாலை அமைக்கும் பணிக்கும், ரொக்கப்பணம் மற்றும் தங்கக்கட்டிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதிலிருந்தே கைப்பற்றப் பணம் மற்றும் தங்கக்கட்டிகள் அதிகாரத்தில் உள்ள வேறு யாருக்கோ சொந்தமானவை என்பதை ஐயத்திற்கு இடமின்றி தெரிந்து கொள்ளலாம். வருமானவரி சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட செய்யாத்துரை, அவரது மகன் நாகராஜுக்கு உள்ள அரசியல் மற்றும் தொழில் தொடர்புகளை ஆராய்ந்தாலே அந்தப் பணம் யாருக்கு சொந்தம் என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியம், உறவினர் ராமலிங்கம், சேகர் ரெட்டி ஆகியோரும், எஸ்.பி.கே உரிமையாளர்களும் தொழில் கூட்டாளிகள் என்பதுடன், அவர்கள் கூட்டாகச் சேர்ந்து தான் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 7 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைப் பணிகளை இந்தக் கூட்டணி தான் செய்திருக்கிறது.

இப்போது கூட ரூ.7940 கோடி மதிப்புள்ள சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கூட செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்.பி.கே நிறுவனத்துக்குத் தான் வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே அவருக்கும், ஆட்சியாளர்களுக்கும் உள்ள தொடர்பையும், கைப்பற்றப்பட்ட பணம் யாருக்கு சொந்தமானதாக இருக்கக்கூடும் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

தமிழகத்தின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் இன்று வரை வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் எஸ்.பி.கே நிறுவனம், சேகர் ரெட்டி, எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியம், உறவினர் ராமலிங்கம் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதற்கு காரணம் அவர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள ஊழல் கூட்டணி தான் என்பதை மறுக்க முடியாது. இக்கூட்டணியில் திமுகவும் இணைந்துள்ளது.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் தலைவர்களும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களின் வரிப் பணத்தை ஊழல் செய்து சுரண்டுதல், அவ்வாறு சுரண்டி சேர்த்த கருப்புப்பணத்தை வெள்ளையாக மாற்றுதல் உள்ளிட்ட பணிகளைத் தான் செய்து வருகின்றனர். அரசியலில் எதிரிகளைப் போலக் காட்டிக் கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்வதிலும், கருப்புப் பணத்தை மாற்றுவதிலும் மட்டும் ஒன்றாக கைகோத்துள்ளன.

ஓட்டுக்கு ரூ.200, ரூ.300 கொடுத்து வெற்றி பெற்ற அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எந்த அளவுக்கு கூட்டணி அமைத்து ஊழல் செய்கின்றன என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இவர்களைத் தேர்ந்தெடுத்ததற்காக வருத்தப்பட வேண்டும். இனிவரும் தேர்தல்களிலாவது எந்தக் கட்சி பணம் கொடுத்தாலும் அதற்கு மயங்காமல் மக்களுக்காக நன்மை செய்யும் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வருமானவரிச் சோதனையில் சிக்கியுள்ள நிறுவனத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலருக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் இந்தச் சோதனையில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சேகர் ரெட்டி, ராமமோகன்ரெட்டி முதல் சசிகலா குடும்பத்தினர் வரை இதுவரை நடத்தப்பட்ட வருமானவரி சோதனைகளில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோல், இந்தச் சோதனையையும் முடித்துக் கொள்ளாமல் இந்த நிறுவனத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள தொடர்பு, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் நடந்த ஊழல்கள், கருப்புப் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளது ஆகியவை குறித்து வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளைக் கொண்ட பல்முனை விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க மத்திய ஆட்சியாளர்கள் ஆணையிட வேண்டும்”என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *