மராட்டியத்தில் பிரதமர் மோடிக்கு வாக்களித்த விவசாயிகள்தான் தற்கொலை – சிவசேனா விமர்சனம்

Read Time:4 Minute, 41 Second

மராட்டியத்தில் தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளில் பெரும்பாலானோர் பிரதமர் மோடிக்கு வாக்களித்தவர்கள்தான் என சிவசேனா விமர்சனம் செய்துள்ளது.

மராட்டியத்தில் விவசாயிகள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.5 விதம் உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்தும் விவசாயிகள் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பால் டேங்கர் லாரிகளை நிறுத்தி வருகிறார்கள். பாலை பண்ணைக்கு வழங்காமல் பொதுமக்களுக்கும் கொடுத்து வருகிறார்கள். சாலையில் பாலை ஊற்றியும் போராட்டம் நடத்துகிறார்கள். இப்போது விவசாயிகளின் போராட்டத்திற்கு சிவசேனா ஆதரவை தெரிவித்துள்ளது, பா.ஜனதா அரசுக்கு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் வெளிவந்துள்ள தலையங்கத்தில், “இப்போது விவசாயிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் விவசாய சங்க தலைவர் ராஜூ சேத்தியால் தொடங்கப்பட்டது என்பதற்காக நிராகரிக்க கூடாது.

விவசாயிகள் எந்தவொரு குறிப்பிட்ட மதம், ஜாதி அல்லது அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கிடையாது. மாநிலத்தில் கடந்த 4 வருடங்களில் மட்டும் 3000 விவசாயிகள் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பிரதமர் மோடிக்கு வாக்களித்தவர்களாவர். விவசாயிகள் கடந்த வருடம் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி முழு அடைப்பு மேற்கொண்டது, அரசுக்கு அவமரியாதையாகும். இப்போது பால் உற்பத்தி விவசாயிகள் மேற்கொண்டு உள்ள போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு எப்படி உதவிசெய்ய முடியும் என்பதைதான் அரசு சிந்திக்க வேண்டும்.
பா.ஜனதா அரசு ஒருபுறம் விவசாயிகளின் போராட்டத்தை முடக்க பார்க்கிறது, மறுபுறம் விவசாயம் வாழ்க என கோஷம் எழுப்புகிறது.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 27 என அரசு நிர்ணயம் செய்து உள்ளது, ஆனால், விவசாயிகளுக்கு இன்னும் ரூ. 16-18 மட்டுமே வழங்கப்படுகிறது.

கோவா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பால் விவசாயிகளுக்கு லிட்டருக்கு ரூ. 5 மானியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று மராட்டியத்திலும் வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள், இதில் என்ன தவறு இருக்கிறது. புல்லட் ரெயில் திட்டத்திற்கு அரசு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறது. புல்லட் ரெயில் திட்டத்திற்காக கடன் வாங்கவும் யோசிக்கிறது. ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கு 5 ரூபாயை கூட்ட தயக்கம் காட்டுகிறது. பிரதமர் மோடி விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதாரவிலையை உயர்த்தியுள்ளார். இது மராட்டியத்தில் உள்ள விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா? அளிக்காதா? என்பதை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விளக்க வேண்டும்.

“பிரதமர் மோடிக்கு வாக்களித்த விவசாயிகள் அனைவரும் மனஉளைச்சலில் உள்ளார்கள். அதனால்தான், பாந்த்ரா-கோந்தியா பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் விவசாயிகளால் பா.ஜனதா தோற்கடிக்கப்பட்டது. பால்கர் சட்டசபைத் தொகுதியில் குறைந்த வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.” பெட்ரோலிய பொருட்கள் விலை உயரும் போது பொதுமக்கள் சகித்துக்கொள்கிறார்கள், ஆனால் பால் கொள்முதல் விலையில் அதிகரிப்பு என்பது வாழ்வு மற்றும் இறப்பு சார்ந்த விஷயமாகும். புல்லட் ரெயில் திட்டம் மற்றும் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தில் பிடிவாதமாக இருக்கும் அரசுக்கள் விவசாயிகளுக்கு நியாயம் வழங்குவது எப்போது? என கேள்வியை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *