மராட்டியத்தில் 3 மாதங்களில் 639 விவசாயிகள் தற்கொலை – பா.ஜனதா அரசு

Read Time:6 Minute, 55 Second

மராட்டியத்தில் 639 விவசாயிகள் தற்கொலை செய்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க மத்திய மற்றும் மராட்டிய அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

விவசாயிகள் வறட்சி மற்றும் பயிர்க் கடன் சுமை காரணமாக தற்கொலை செய்வது தொடர்கதையாக உள்ளது. இது மராட்டிய மாநிலத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், மாநில சட்ட மேலவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். கடந்த மார்ச் மாதம் முதல் மே வரை மாநிலத்தில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்? அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நஷ்ட ஈடு என்ன? விவசாயிகள் தற்கொலையை தடுக்க மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்பன குறித்த தகவல்களை அவர்கள் கேட்டிருந்தனர்.

அவற்றுக்கு வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் பதிலளித்துப் பேசுகையில், மாநிலத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் மூன்று மாதங்களில் 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொண்டவர்களில் 188 பேர் மாநில அரசின் பயிர்க் காப்பீடு மற்றும் இதர பலன்களைப் பெறத் தகுதியானவர்களாவர். அவர்களில் 174 பேரின் குடும்பத்தினருக்கு அதற்குரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 122 பேரின் மரணம், இழப்பீடு அளிப்பதற்கான வரம்புக்குள் வரவில்லை.

அதனால், அவர்களது குடும்பத்தினருக்கு பெரிய அளவில் உதவிகள் அளிக்க இயலவில்லை. இதர 329 பேரின் தற்கொலை சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மகாராஷ்டிர சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டே, விவசாயிகளின் நலனைக் காக்க மாநில பா.ஜனதா அரசு தவறிவிட்டது. விவசாய கடன் தள்ளுபடி, சேதம் அடைந்த பயிர்களுக்கு உதவி தொகை, விளைப்பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதார விலை என அனைத்து நிலையிலும் மாநில பா.ஜனதா அரசின் திட்டங்கள் தோல்வியை தழுவிட்டது. கடந்த ஆண்டு மட்டும் 1,500 விவசாயிகள் கடன் சுமையால் உயிரை மாய்த்தனர் என்று கூறினார்.

மராட்டிய மாநில அரசு கடந்த வருடம் 84 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடியை அறிவித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 2018 மார்ச் வரையில் ரூ. 13,782 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மராட்டிய அரசு, ரூ. 23,102.1 கோடி மதிப்பிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு அனுமதியையும் வழங்கியுள்ளது. மராட்டியத்தில் 2014-ம் ஆண்டில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

இந்நிலையில் 639 விவசாயிகள் தற்கொலை செய்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் விவசாயத் துறை செயலாளர் மற்றும் மராட்டிய மாநில தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது. மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 13,000 விவசாயிகள் உயிரிழந்து உள்ளார்கள், இதில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 1,500 விவசாயிகள் உயிரிழந்து உள்ளார்கள் என்பதையும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக மத்திய மற்றும் மராட்டிய அரசுக்கள் திட்டங்களை அறிவித்துள்ளது. ஆனால், விவசாயிகள் தற்கொலை என்ற துரதிஷ்டவசமான செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளது என்று கூறியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகளின் திறன் தொடர்பாக கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், விவசாயிகளின் அடமான நிலங்களை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிக்கையை கோரியுள்ளது.

மத்திய, மாநில அரசுக்கள் அறிவிக்கும் திட்டங்களின் இலக்கை அடைவதற்கு சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

விவசாயிகள் தற்கொலை விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக தலையிடுவது இது முதல் முறை கிடையாது. 2012-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் விதார்ப்பா பிராந்தியத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பாக நோட்டீஸ் விடுத்தது. அவ்வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் விதார்ப்பாவில் மட்டும் 528 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு இதே விவகாரத்தில் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா, சத்தீஷ்கார், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விடுத்து இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *