தமிழகத்தில் வருமான வரித்துறையின் மிகப்பெரிய வேட்டை! ரூ.170 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கியது

Read Time:5 Minute, 0 Second

எஸ்பிகே நிறுவனங்களில் வருமான வரித்துறையின் சோதனையில் மிகப்பெரிய வேட்டைகளில் ஒன்றாக ரூ.170 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் எஸ்.பி.கே. நிறுவன உரிமையாளர் செய்யாத்துரை, அவருடைய மகன்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 30–க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கக்கட்டிகள் குறித்த விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

செய்யாத்துரை, தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை செய்யாத்துரையே செய்து வருகிறார். இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முக்கிய சாலை அமைக்கும் பணிகளும், கட்டுமான பணிகளும் நடப்பதால் அங்கு அலுவலகங்களும் உள்ளன. அங்கும் சோதனைகள் நடைபெற்றது.

சோதனைகளின் போது கார்களில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மாலை முடிவுக்கு வந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் சோதனை இதுவரையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய வேட்டைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சோதனையில் ரூ.170 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

வரிஏய்ப்பு செய்ததையும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் தங்களுடையது என நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது மற்றும் இதற்கான வரியை செலுத்துவதாகவும், அபராதத்தை செலுத்துவதாகவும் கூறியுள்ளது என சென்னை வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கிறது என பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. துணை ஒப்பந்தங்களை வழங்குவது, பணியாளர்கள் வேலை மற்றும் தார் வாங்குவதில் செலவை நிறுவனம் அதிகரித்து காண்பித்துள்ளது, லாபத்தை குறைத்து காட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் தங்கம் போக, பல்வேறு முக்கியமான ஆவணங்கள், டைரிகள், குறிப்புகள் மற்றும் ஹார்டுடிஸ்க் பதிவுகளும் சிக்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரையில் நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டவையை விட மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது எனவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நிறுவனம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தொடர்பான தகவல் கிடைத்ததும் வருமான வரித்துறை அதிரடியான சோதனையை நடத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. 3.

அரசு ஒப்பந்தங்களை பெறும் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 5 நெடுஞ்சாலைகளுக்கு 4,800 கோடிக்கான ஒப்பந்தங்களை தனது உறவினர்களுக்கு தந்து ஊழல் செய்ததாக முதல்வர் எடப்பாடி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரிடம் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கடந்த ஜூன் மாதம் புகார் மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *