ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

Read Time:3 Minute, 34 Second

துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வியை எழுப்பியுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய மனைவி பி.விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு, தன் சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் மற்றும் அவர்களது குடும்பத்தினர், தொழில் பங்குதாரர்கள், பினாமிகளின் ஆகியோரது பெயர்களிலும் பெரும் தொகையை முதலீடு செய்துள்ளார். ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.

ஆனால் வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார்.
சேகர்ரெட்டியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்த டைரியில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.4 கோடி கொடுத்ததாக குறிப்புகள் உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக மார்ச் 10-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் 3 மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொது ஊழியருக்கு எதிராகப் புகார் அளித்தால் உடனடியாக விசாரணை நடத்தவேண்டிய கடமை உள்ளதால், ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆர்.எஸ்.பாரதியின் புகார் மனு தலைமைச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து ஐகோர்ட்டு, புகார் மனுவை அனுப்பி வைத்தால் மட்டும் போதுமா? விசாரணை நடத்த வேண்டாமா? புகார் கொடுத்து மூன்று மாதங்கள் ஆன நிலையிலும் ஏன் விசாரணை நடத்தவில்லை? சேகர் ரெட்டியின் டைரியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரும் உள்ளதாக ஆர்.எஸ்.பாரதி மனுவில் குறிப்பிட்டுள்ளதால் வழக்கை சிபிஐ விசாரனை நடத்த ஏன் உத்தரவிடக்கூடாது? என கேள்விகளை எழுப்பியது.

அரசு தலைமை வழக்கறிஞர் இவ்விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உயர்நீதிமன்றம், வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *