நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன?

Read Time:4 Minute, 38 Second

பாராளுமன்றத்தில் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அனுமதி அளித்துள்ளார். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் என்றால் என்ன? என்பதை பார்க்கலாம். பாராளுமன்ற மக்களவையில் பெரும்பான்மை இருந்தால்தான் ஒரு அரசு செயல்பட முடியும். தொடர்ந்து ஆட்சியிலிருக்க பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையிலான நம்பிக்கையில்லா தீர்மானம் அவையில் எடுத்துக்கொள்ளப்படும். பாராளுமன்றத்தில் அரசுக்கு பெரும்பான்மை இல்லையென எம்.பி.க்கள் உணர்ந்தால், அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். அவர்கள் கொண்டுவரும் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஆட்சியிலிருக்கும் கட்சி பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் உறுப்பினர் காரணம் எதுவும் தெரிவிக்கவேண்டிய அவசியம் கிடையாது.
நம்பிக்கையில்லா தீர்மானம் செயல்படுவது எப்படி? மக்களவை உறுப்பினர் யார் வேண்டுமென்றாலும் தீர்மானத்தை கொண்டுவரலாம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவையில் மட்டுமே அரசுக்கு எதிராக கொண்டுவர முடியும், மாநிலங்களவையில் முடியாது. மக்களவையின் நடைமுறை விதிகள் 198-ல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நடைமுறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு முன்னதாக தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் சபாநாயகரிடம் கொடுக்கப்பட வேண்டும், அவையில் அதனை அவர் வாசிப்பார். அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு குறைந்தப்பட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.

தீர்மானம் தொடர்பாக எப்போது ஆலோசிக்கப்படும் என்பதை சபாநாயகர் தீர்மானம் செய்வார். தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 நாட்களுக்குள் தேதி ஒதுக்கப்பட வேண்டும். தீர்மானம் தோல்வியுற்றால், தீர்மானத்தை கொண்டுவந்தவர்களிடம் அதுதொடர்பான தகவலை தெரிவிக்கவேண்டும். அரசு தீர்மானத்தின் போது பெரும்பான்மையை நிரூபிக்க தவறிவிட்டது என்றால், பதவி விலக வேண்டும்.

பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு மக்களவையில் தனிப்பெரும்பான்மை உள்ளது. 543 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் பா.ஜனதாவிற்கு மட்டுமே 272 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளை சேர்த்தால் 315 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால் அரசுக்கு எந்தஒரு எச்சரிக்கையும் கிடையாது. 2019 பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி சேர்கிறது. இப்போது கொண்டுவரப்படும் தீர்மானம் தங்களுடைய பலம் என்னவென்று உணர்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பு.
எண்ணிக்கையை தவிர்த்து கூட்டணிக்கான நிலைப்பாடும் இதில் பிரதிபலிக்கும் என பார்க்கப்படுகிறது. எந்த வரிசையிலும் நிற்காத ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் எங்கு சேர்கிறது என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. 2003-ம் ஆண்டுக்கு பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. அப்போது சோனியா காந்தி, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தார், ஆனால் அரசு பெரும்பான்மையுடன் வெற்றியை தனதாக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *