தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அழிக்க துடிக்கும் மோடி அரசு!

Read Time:5 Minute, 27 Second

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 – RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும்.

அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதாக பா.ஜனதா மீது விமர்சனம் உள்ளது. இதனிடையில் மத்தியில் ஆளும் பா.ஜனதா, தகவல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் பதவி காலங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறது.

மோடி அரசு, இந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரும் திருத்தங்கள் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்பட செய்துள்ளது. மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் சுய அதிகாரத்தை தேற்கடிக்கும் வகையில் அரசு திருத்தத்தை மேற்கொள்கிறது. அதன்படி, மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான சட்டப்பூர்வமான பாதுகாப்பை முற்றிலும் அகற்ற முற்படுகிறது என்பது தெளிவாகிறது.
இப்போது, மத்திய மற்றும் மாநிலங்களில் உள்ள தகவல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் பதவி காலம் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்படுகிறது. மத்திய தேர்தல் ஆணையர்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள தேர்தல் ஆணையர்கள் ஆகியோருக்கு இணையாக தகவல் ஆணையர்களின் அதிகாரம் இருக்கிறது. இப்போது மேற்கொள்ளும் திருத்தமானது மத்திய மற்றும் மாநிலங்களில் உள்ள தகவல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் பதவி காலங்கள் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் என்று மசோதா கூறுகிறது.

மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் ஆணை மற்றும் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்திற்கு முற்றிலும் வேறுபட்டதாக கூறுகிறது. “ஆகையால், அவர்களின் நிலை மற்றும் சேவை நிலைமைகள் பகுத்தாய்வு செய்யப்படும்,” என்று திருத்தம் கூறுகிறது.

மசோதாவின் நோக்கத்தின்படி, மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் சம்பளம், சலுகைகள், பதவி காலம், நிபந்தனைகள் மத்திய அரசால் பரிந்துரை செய்யப்படும். அவர்களுடைய பதவி காலத்தையும் மத்தியே அரசே பரிந்துரை செய்யலாம், இதனால் 5 ஆண்டுகாலம் என்பது நிலையாகாது. ஆர்.டி.ஐ. ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் சம்பளம் மற்றும் பதவி காலத்தை மத்திய அரசு முடிவு செய்ய அனுமதிப்பது, தகவல் ஆணையர்களின் தன்னாட்சியை முற்றிலுமாக அழிப்பதாகும்,” என்று கூறியுள்ளார்.
இதே போன்று ஆர்வலர் சைலேஷ் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், “மிகவும் சிறப்பான ஆர்.டி.ஐ. சட்டத்தை நாம் கொண்டு வந்துள்ளோம், அதில் யாரும் மாற்றம் கொண்டுவர முடியாது. சிறப்பான செயல்படுத்தல் முறை அவசியமானது, அதில் நாட்டம் கொள்ள வேண்டும்,” என கூறியுள்ளார். காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த மசோதாவை எதிர்க்கிறது. பாராளுமன்ற மக்களவையில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் பா.ஜனதா எளிதாக மசோதாவை தாக்கல் செய்துவிடும், ஆனால் மாநிலங்களவையில் மெஜாரிட்டி கிடையாது, எனவே முடங்கும்.

மார்க்சிஸ்ட் கம்பூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி ஸ்திரமாக எதிர்ப்போம் என கூறியுள்ளார். சமூக ஆர்வலர்கள் தரப்பில் மத்திய அரசின் நகர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சி தலைவர்களும், மத்திய அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரும் திருத்தம் என்பது அந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் விதமாக இருக்கும் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உண்மையை தெரிந்துக் கொள்ளும் உரிமையுள்ளது. ஆனால், பா.ஜனதா மக்களிடம் இருந்து உண்மையை மறைக்க வேண்டும், அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் கேள்வி கேட்கக்கூடாது என்பதில் நம்பிக்கையை கொண்டுள்ளது, திருத்தம் செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டத்தை பயனில்லாததாக்கும். இந்த திருத்தத்தை ஒவ்வொரு இந்தியரும் எதிர்க்கிறார்கள்,” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *