நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் ஆன்-லைனில் விற்பனை! அதிரடி ஆபர்!!

Read Time:7 Minute, 42 Second

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், இ-மெயில் ஐடி என அனைத்தும் ஆன்-லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.

‘டிஜிட்டல் இந்தியா’ என்ற கோஷத்துடனான நகர்வில் தனி மனிதனின் தகவல் பாதுகாப்பு என்பது பெரும் ஐயத்துடனே செல்கிறது. ஆதார் குறித்தான தகவல்கள் அரசு இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற மாணவர்களின் தகவல்கள் வெளியாகியது மற்றும் விற்பனை செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

இப்போது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக மத்திய அரசின் சிபிஎஸ்இ நடத்தும் நீட் தேர்வு மாணவர்களின் தகவல்கள் ஆன்-லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.

இப்போது உங்களால் இரண்டு லட்சம் ரூபாய் செலுத்த முடிந்தால் போதும், இந்த வருடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் முழு தகவல்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.
இணையதளத்தில் நீட் தேர்வு எழுதியவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், இ-மெயில் ஐடி விற்பனை செய்யப்படுகிறது. இது டிஜிட்டல் இந்தியா விளம்பரத்துறையில் எந்த எல்லைக்கு செல்லப்படுகிறது என்பதை காட்டுகிறது. இதில் அரசு அதிகாரப்பூர்வமான தகவல் தரவுகளில் இருந்து இதுபோன்ற தகவல்கள் எப்படி வெளியாகிறது என்பதுதான் மிகவும் சிக்கலான பிரச்சனையாகும். இதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ள தி வையர், விபரங்களை வெளியிட்டுள்ளது.

‘official-medical-student-data.com’ என்ற இணையதளம் மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இப்போது இணையதளத்தை பார்க்க முடியவில்லை.

நீங்கள் இணையதளத்தில் பதிவு செய்து உள்ளே சென்றால், அவர்களுடைய தொழில் தொடர்பான தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தகவல் தரவு தேவையில் எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். எங்களுடைய தகவல் தரவுகள் மிகவும் விலை உயந்தவை. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. காரணம் என்னவென்றால் எங்களுடைய தகவல் தரவுகளை குறைந்த அளவிலானவர்களே அணுக முடியும், மாற்றத்திற்கான நல்ல நோக்கத்தை கொண்டிருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் தகவல்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை தி வையர் அணுகியுள்ளது. விற்பனை செய்வதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக வாட்ஸ்-அப்பில் தகவல்களை வழங்கியுள்ளது. மாணவர்களின் செல்போன் எண்களில் கடைசி மூன்று எண்கள் மட்டும் அழிக்கப்பட்டு இருந்தது உள்ளது. அவர்களுடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் வியூகம். தனக்கு கிடைத்த தகவல்களை கொண்டு தி வையர் மாணவர்களிடம் பேசியுள்ளது, அப்போது அவர்கள் நீட் தேர்வு எழுதியவர்கள் என உறுதியானது.
அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் என்று மாணவர்களும் உறுதி செய்து உள்ளார்கள். மாணவர்களின் தகவல்களை விற்பனை செய்யும் இணையதளம், அதனை வாங்பவர்களின் நம்பிக்கையை பெற்றதும் ரூ. 2.4 லட்சம் கேட்கிறது. அதனை கொடுக்கும் போது 2 லட்சம் மாணவர்களின் தகவல்கள் வழங்கப்படுகிறது. ஒரு மாணவருடைய தகவல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தகவல் வெளியானது எங்கிருந்து?

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசின் சிபிஎஸ்இ நடத்துகிறது. 2018-ம் ஆண்டு நீட் தேர்வை சுமார் 13 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். ஆனால் இப்போது இணையதளத்தில் 2.4 லட்சம் வரையிலானோர் தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. இவ்விவகாரத்தில் தகவலை திருடிய இணையதளத்தை நடத்துபவர்கள், பாதுகாப்பு குறைபாடு அல்லது தகவல் கசிவை தங்களுக்கு சாதகமாக சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கலாம் என்று மட்டும் தெரிகிறது.

தகவல்களை விலைக்கு வாங்குபவர்கள் யார்?

ஏற்கனவே தனியார் பல்கலைக்கழகங்களில் இருந்து செய்திகள், அழைப்புகள் வருவது தொடர் கதையாக இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்களுக்கு தேவைப்படலாம். தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்களை எங்களுடைய கல்லூரியில் சேருங்கள், அல்லது மருத்துவம் தொடர்பான படிப்பில் சேருங்கள் என வலியுறுத்தலாம். நீட் தேர்வை அடுத்து வருடக்கணக்கில் அத்தேர்வுக்காக பயிற்சியளிக்க புது, புது கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படுகிறது.

இதுபோன்ற நிறுவனங்கள் நாங்கள் சிறப்பான பயிற்சியை மேற்கொள்கிறோம் என மாணவர்களை எளிதாக அணுக இத்தகைய தகவல்கள் தேவைப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு ஆய்வு செய்த போது மாணவர்கள், “ஆமாம் எனக்கு ஒரு பயிற்சி பள்ளியில் இருந்து போன் வந்தது” என்று கூறியுள்ளனர்.

மற்றொரு மாணவர் பேசுகையில் “கடந்த ஒரு மாதமாக தினமும் நாளொன்றுக்கு சுமார் ஐந்து போன்களாவது வருகின்றது. இதில் சேர்ந்து கொள், அதில் சேர்ந்து கொள் என்று கேட்கிறார்கள்,” என்று கூறியுள்ளார். ஏற்கனவே எம்.பி.ஏ. படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எழுதியவர்களின் தகவல்கள் வெளியாகியது. இப்போது வெளியாகியுள்ள தகவலில் சிபிஎஸ்இ கேள்விகளை எதிர்க்கொள்ள நேரிடும்.

சட்டப்படி இது சரியா, தவறா?

இந்தியாவை கடந்த மூன்று ஆண்டுகளாகவே தனியுரிமை மீறல்கள் மற்றும் தகவல்தரவு கசிவுகள் அலை தாக்கிதான் வருகிறது.

இந்திய தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகள் 43A மற்றும் 72A தகவல்கள்தரவுகள் கசிவுகள் தொடர்பான காரணிகளை கொண்டுள்ளது, ஆனால் இதுவரையிலும் இப்பிரிவுகள் சரியான பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய் கிழமையன்று மாணவி எழுதிய கடிதம் ஒன்றை பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டார். பிரதமர் மோடி மாணவியின் தனிப்பட்ட தகவல்கள் இ-மெயில் ஐடி மற்றும் செல்போன் எண்ணை மறைக்க மறந்துவிட்டார்.

இக்கடிதத்திற்கு நன்றி கூறிய மோடி, அப்பெண்ணின் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை மறைக்க மறந்துவிட்டார். இதுவும் ஒருவகையில் தனிப்பட்ட தகவல் வெளியீடுதான்.

இப்போது நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் வெளியாகியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுமா? தண்டனை வழங்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *