‘பப்பு’ என்றாலும் வெறுக்க மாட்டேன் ‘அப்லாஸ்’ வாங்கிய ராகுல்!

Read Time:4 Minute, 40 Second

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பிரதமர் மோடி, பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய முதிர்ச்சியான அணுகுமுறையால் அப்லாஸ் வாங்கினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பா.ஜனதாவினர் ‘பப்பு’ என்று கேலியாக கூறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திர மோடி, ராகுல் காந்தியை சிறுவன் என்று குறிப்பிட்டார். அப்போது ராகுலை ஒட்டிக்கொண்டதுதான் பப்பு என்ற பெயர். இப்போது வரையில் அவரை பப்பு என்றுதான் விமர்சனம் செய்து வருகிறார்கள் பா.ஜனதாவினர். பின்னர் பிற பா.ஜனதா ஆதரவு ஊடகங்களாலும் இப்பெயர் அவருக்கானது என பிரபலப்படுத்தப்பட்டது. இன்றைய இணையதள பயன்பாட்டில் ராகுலை பப்பு என்று குறிப்பிட்டு ட்ரோல்களும், மீம்ஸ்களும் வெளியாகிறது. சமீபத்தில் கூகுள் இணையதள தேடலில் கூட பப்பு என்ற இந்தி வார்த்தையை தேடினால் ராகுல் காந்தியின் புகைப்படம்தான் வந்தது. அவ்வளவு வேகமாக பிரசாரம் செய்யப்படுகிறது.

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டு பா.ஜனதாவினர் இன்று வரையில் கேலியாக பயன்படுத்தும் பப்பு என்பதைகூட நான் பெரியதாக எடுப்பதில்லை என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 4 வருடங்களாக தன்னை மையப்படுத்தும் பெயரை உடைத்து எறியும் வகையில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார். இன்று ராகுல் பூகம்பம் வெடிக்குமா? என்று கேலியாக இணையதளத்தில் தொடங்கிய கேள்வியை, உடைக்கும் வகையில் முதிர்ச்சியான உரையை வெளிப்படுத்தினார்.

பிரதமர் மோடியை உரையில் நேருக்கு நேராக விளாசிய ராகுல் காந்தி, உங்களால் என்னுடைய கண்களை பார்க்க முடியாது என்றார்.

“அவர் சிரிப்பதை என்னால் பார்க்க முடியும். ஆனால் அவரிடம் பதட்டம் நிலவுகிறது, என்னைவிட்டு வேறு எங்கோ பார்க்கிறார். என்னால் புரிந்துக்கொள்ள முடியும். அவரால் என்னுடைய கண்களை பார்க்க முடியாது. பிரதமர் மோடியால் உண்மையாக இருக்காததால் நான் பார்க்க முடியும்,” என்று ராகுல் பேசுகையில், பிரதமர் மோடியின் முகத்தில் சிரிப்புடன், வேடிக்கையான ரியாக்‌ஷன் எழுந்தது. ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ‘உங்களால் என் கண்களை பார்த்து பேச முடியாது’ என்ற போது மோடியின் உடல்மொழியில் சிறுவிதமான பதற்றம் நிலவியது.

பிரதமர் மோடியையும், பாரதீய ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்த ராகுல் காந்தி, தன்னுடைய பேச்சு முடிந்ததும் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியையும் வெளிக்காட்டினார். ராகுல் காந்தி வேகமாக, பிரதமர் மோடியின் இருக்கையை நோக்கி சென்ற போது எல்லோரு மிகவும் ஆச்சர்யமாக பார்த்தார்கள். அப்போது பிரதமர் மோடியை கட்டி அனைத்து, கைகுலுக்கினார் ராகுல் காந்தி. பிரதமர் மோடியிடம் பேசிய ராகுல் காந்தி “நீங்கள் என்னை பப்பு என்று அழைத்தாலும் நான் உங்களை வெறுக்கமாட்டேன், உங்களுக்குள் இருக்கும் வெறுப்பை நீக்கிவிட்டு அன்பையே விதைப்பேன்,” என்று கூறியுள்ளார். ராகுல் காந்தியின் இப்பேச்சுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒருதரப்பினர் ராகுலை விமர்சனம் செய்தாலும், இன்று இணையத்தில் அவருடைய பூகம்பம்தான். 4 வருட காலமாக தன்னை பின்தொடர்ந்து வரும் பப்பு என்ற கேலியான விமர்சனத்தை ஒரே உடையில் உடைத்துள்ளார் ராகுல் காந்தி.