பா.ஜனதாவை பதவியில் இருந்து வெளியேற்றி இந்த நாட்டை பாதுகாப்போம் – மம்தா பானர்ஜி

Read Time:5 Minute, 57 Second

பா.ஜனதாவை மத்தியில் பதவியில் இருந்து வெளியேற்றி இந்த நாட்டை பாதுகாப்போம் என்று மம்தா பானர்ஜி முழங்கியுள்ளார்.

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று பெரும் பணியை கையில் எடுத்துள்ளார் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி. இதில் மூன்றாவது அணியா? காங்கிரசுடன் செயல்படுவதா? என்ற முக்கியமான முடிவையும் அவர் எடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பா.ஜனதாவிற்கு எதிரான ஆட்டத்தில் மம்தா பானர்ஜி முக்கியமானவர் என்பதை காங்கிரஸ் மறுக்காது.

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே மம்தா பானர்ஜி, பா.ஜனதாவிற்கு எதிரான பிரச்சார முழக்கமாக ‘2019-ல் பா.ஜனதா இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற கோஷத்தை அறிமுகம் செய்தார். மத்தியில் ஆளும் பாஜக ஜனநாயகத்தையே வேரோடு அழிக்கிறது . 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து பா.ஜனதாவை ஆட்சியிலிருந்து வெளியேற்ற பாடுபடும் என்று தெரிவித்தார். அதற்கான பணிகளையும் செய்து வருகிறார்.

ஊழல்களுக்கு மத்தியில் காங்கிரஸை வெளியேற்றுவோம் என்ற கோஷத்துடன் 2014 பாராளுமன்ற தேர்தலை பா.ஜனதா எதிர்க்கொண்டது.

இப்போது அதேபோன்று பா.ஜனதாவை மத்தியில் பதவியில் இருந்து வெளியேற்றி இந்த நாட்டைப் பாதுகாப்போம் என்று மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முழங்கியுள்ளார். 1993 மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்ற போது 13 இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 21-ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இன்று இக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் உள்ள பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மம்தா பானர்ஜி பேசுகையில், 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் வெற்றிபெறும். இதற்காக வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சபதம் ஏற்க வேண்டும். ஆகஸ்ட் 15-ம் தேதி நமது தேசியக்கொடியை அனைத்து தொண்டர்களும் கையில் ஏந்தி, சபதம் எடுத்து, அடுத்த 2019-ம் ஆண்டில் டெல்லி செங்கோட்டையில் பாரதீய ஜனதாவினர் யாரும் தேசியக் கொடியை ஏற்றவிடக்கூடாது என்று சபதம் ஏற்க வேண்டும்.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியை நடத்துவோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்து அந்தப் பேரணியை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்துவோம்.

மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது நமது நோக்கமில்லை, இலக்கும் இல்லை. மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வெளியேற்ற வேண்டும். அவர்களிடம் இருந்து இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும். மிட்னாபூரில் பா.ஜனதாவினர் மிகப்பெரிய அளவில் கூட்டம் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் போடப்பட்டு இருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. ஒரு பந்தலைக் கூட ஸ்திரமாக அமைக்க முடியாத பாஜகவினர் எப்படி நாட்டைக் கட்டமைக்கப்போகிறார்கள்.

இப்போது நாம் ஹிட்லர் ஆட்சியில் வாழ்கிறோம். வன்முறையாளர்கள் தேசத்தை வழிநடத்துகிறார்கள். மக்கள் மத்தியில் தலிபானிஸத்தை பா.ஜனதா உருவாக்குகிறது. பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ள நல்ல மனிதர்களை நான் எப்போதும் மதிப்பேன், ஆனால் சிலர் மோசமான விளையாட்டை விளையாடுகிறார்கள். கும்பல் தாக்குதலுக்கு எதிராக மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால் வெறுப்பையும், வதந்தியையும் பரப்பும் அவருடைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?

பா.ஜனதாவிற்கு நாடு முழுவதும் எழுந்துவரும் அதிருப்தியால், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், தமிழகத்தில் மக்களவைக்கான இடங்கள் குறைந்து வருகின்றன. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, பா.ஜனதாவுக்கு இந்த முறை 325 வாக்குகள் இருந்தன. உறுப்பினர்கள் ஆதரவு இருந்தது. ஆனால், அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு 100 இடங்கள் வரை குறையக்கூடும்.

மேற்கு வங்காளத்தில் சதிதிட்டம் மற்றும் வன்முறையை உருவாக்க பா.ஜனதாவை அனுமதிக்கமாட்டேன். நாம் அனைவரும் அதனை அனுமதிக்க கூடாது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை சிறையில் அடைப்பார்கள், அப்படியென்றாலும் நான் சரண் அடைய மாட்டேன் என்றார்.