நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜனதாவிற்கு பயத்தை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகளுக்கு வெற்றியே!

Read Time:8 Minute, 45 Second

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் மோடி வெற்றிப்பெற்று இருக்கலாம், ஆனால் எப்போதும் போல் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலை தெரிவிக்கவில்லை.

பிரதமர் மோடியின் தலைமையிலான 4 வருட ஆட்சிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் எந்தஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது ஏற்கனவே தெரிந்தது. பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக 325 உறுப்பினர் வாக்களித்தனர். 126 பேர் ஆதரவாக வாக்களித்தனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்கும் பா.ஜனதாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் வெற்றி பெறுவோமா? என்ற எளிமையான கணக்குகூடவா எதிர்க்கட்சிகளுக்கு தெரியாமல் இருந்து இருக்கும்.

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிரான தாக்குதலை முன்வைக்க சரியான தளமாகதான் எதிர்க்கட்சிகள் பார்த்தன. அந்தவகையில், தெலுங்கு தேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சரியாக பயன்படுத்தியது காங்கிரஸ்.

நம்பிக்கையை பெற்ற ராகுல்

இதுவரையில் பா.ஜனதாவால் ‘பப்பு’ என்று கேலியாக அழைக்கப்பட்டுவந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எழுப்பிய கேள்விகள் உண்மையாகவே பூகம்பமாக வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த நோக்கமும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மத்திய அரசு கடுமையான தாக்குதலை முன்வைக்க வேண்டும், ராகுல் காந்தியை ஒரு தலைவராக அடையாளம் காட்ட வேண்டும் என்பது மட்டும்தான். இதில் காங்கிரஸ் வெற்றியடைந்தது என்றே சொல்லலாம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நம்பிக்கையான மற்றும் ஆக்ரோஷமான பேச்சு; பிரதமர் மோடியை தழுவி யாரையும் வெறுக்க மாட்டோன் என்றது பாராளுமன்றம் மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையே எழுப்பியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா அரசுக்கு எதிராக நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமென்றாலும் பேசியிருக்கலாம், அது வெறும் செய்தியாக மட்டுமே பார்க்கப்படும். ஆனால் 2019-ல் பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் பிரதமர் மோடி அரசுக்கு எதிரான கடுமையான, வலிமையான குற்றச்சாட்டுகளை பாராளுமன்றத்தில் எடுத்து வைக்க சரியான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை பெற்றுள்ளார் என்பது மறுப்பதற்கு கிடையாது.

இப்போது இதனை எப்படி தேர்தல் தளத்திற்கு மாற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் முன்பு இருக்கும் முக்கியமான சவாலாகும்.

‘ஜகா’ வாங்கிய பிரதமர் மோடி

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தாலும் காங்கிரஸ் கொடுத்த அடியே சரியானதாக பார்க்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “உங்களை போன்று நாங்களும் ஆட்சியை நடத்தி இருந்தால் இந்தியாவில் ஜனநாயகம் எப்போதோ அழிந்து இருக்கும், நாங்கள் ஜனநாயகத்தை பாதுகாத்து வைத்துள்ளோம்,” என்றார். எதிர்க்கட்சிகள் கடுமையான விவாதத்தை முன்னெடுத்த பின்னர், பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். எப்போதும் போல தன்னுடைய பேச்சு திறமையை மையப்படுத்தினார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளில் இருந்து தப்பிக்கும் வகையிலே பிரதமர் மோடியின் பேச்சு இருந்தது.

தன்னுடைய அரசின் வெற்றி என்று பட்டியலிட்ட பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் எழுப்பிய முக்கியமான கேள்விகள் தொடர்பாக எந்தஒரு பதிலையும் தெரிவிக்க முன்வரவில்லை. எப்போதும் போல தேர்தல் பிரசாரம் போன்றே இருந்தது. இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அமைதியையே கொண்டிருந்தார் (சட்டம் ஒழுங்கு விவகாரம் மாநிலங்கள் சம்பந்தப்பட்டது என மத்திய அரசு கூறிவருகிறது). சர்ச்சைக்குரிய ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக எதுவும் பேசவில்லை (ஒப்பந்தம் எவ்வளவு தொகைக்கு செய்யப்பட்டது என்பது தெரியவராமலே இருக்கிறது).

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்ததும் பிரான்ஸில் இருந்து பதில் வந்தது(பிரதமர் மோடி பேசுவதற்கு முன்னதாக). தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவரிடம் பதில் கிடையாது. பொருளாதார விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்திய பிரதமர் மோடி, சமூக அக்கறையெல்லாம் எதிர்க்கட்சிகளின் “நம்பிக்கையற்ற” அரசியலின் ஒரு பகுதி என்று நிராகரித்துவிட்டார்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்த மோடி அரசு இப்போது ‘பல்டி’ அடித்துவிட்டது. இதனால் கோபத்தில் இருக்கும் தெலுங்கு தேசம் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி, அவ்விவகாரம் தொடர்பாக வெறும் 5 நிமிடங்கள்தான் பேசினார். அதுவும், ஆந்திர மாநில அரசு தோல்வியை மறைக்க முயற்சி செய்தது என குற்றம் சாட்டிவிட்டார்.

பிரதமர் மோடி எப்போதும் போல மொத்த நேரத்தையும் காங்கிரஸ் கட்சியை குறிவைத்து தாக்குதலைதான் முன்வைத்தார். காங்கிரசுக்கு பதவி ஆசைதான் அதிகமாக உள்ளது என்ற பிரதமர் மோடி, ராகுல் காந்தி என்னை கட்டிபிடித்ததே ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்றுதான் என்றே குற்றம் சாட்டினார். ஆனால் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ‘ஜகா’ வாங்கி, நான் ஏழைத் தாயின் மகன், ராணுவத்தை அவமதிக்காதீர்கள் என்றெல்லாம் பேசினார். இதுதொடர்பாக மீடியாக்கள் வெளியிட்டு, சமூக வலைதளங்களில் பகிர்வு செய்த செய்திகளுக்கு மக்களுடைய ‘ரியாக்‌ஷன்’ எப்படி இருக்கிறது என்றே பார்த்துக்கொள்ளாலாம்.

பா.ஜனதாவிடம் தென்பட்ட பயம்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிப்பெற்றுவிட்டோம் என்று பா.ஜனதா தலைவர்கள் வெளிப்படையாக மார் தட்டலாம். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குற்றச்சாட்டுக்களை எழுப்பி ஆக்ரோஷமான தாக்குதல்களை முன்வைக்கும் போது, பயம் கலந்த நடுக்கம் பா.ஜனதாவிடம் தென்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் பதில் பேச்சால் அதிலிருந்து தப்பித்ததாக நினைக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. பா.ஜனதாவிடம் ஒரு பயத்தை ஏற்பட செய்ததே, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிதான்.