நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக திணறல்! 4 எம்.பி.க்கள் பா.ஜனதாவிற்கு ஆதரவு அளிக்கவில்லை…

Read Time:8 Minute, 33 Second

பாராளுமன்றத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த போது அதனுடைய கூட்டணி கட்சியான சிவசேனா விலகிவிட்டது. ஆனால் கூட்டணியில் இடம்பெறாத அதிமுக, தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து. அதிமுக ஆதரவு கொடுத்திருக்கவில்லை என்றால் 325 என்ற வலுவான நிலை பா.ஜனதாவிற்கு கிடைத்து இருக்காது.

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிக்கும் வகையில் பா.ஜனதா பலம் கொண்டிருந்த வகையில் அதிமுகவின் நிலைபாடு என்னவாக இருக்கும் என்று எந்த ஒரு முக்கியத்துவமும் எழவில்லை. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவை இயக்குவதே பா.ஜனதாதான் என்ற விமர்சனம் இருந்து வருகிறது. எனவே, அக்கட்சியின் நிலைபாடு என்னவென்று யாரும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்துக் கொள்ளாது அல்லது வாக்களிக்காது என்றே சற்று எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய அரசுக்கு எதிரான பேச்சு

பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் பேசுகையில் மாநில நலன்களை மையப்படுத்தி, மத்திய அரசுக்கு எதிராகவே பேசினர். பிறக்கட்சிகளை போன்று பாராளுமன்றத்தில் மாநிலங்கள் எப்படி புறக்கணிக்கப்படுகிறது என்பதை அதிமுகவும் சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்தது.
தமிழகத்துக்கு 2015ம் ஆண்டு ஏற்பட்ட பேரிடர் பாதிப்பு, வர்தா புயல் பாதிப்புகளுக்கு போதிய அளவிலான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைக்காதது; தமிழகத்துக்கு தேவையான நிதி குறைவாகவே அளிக்கப்படுவது; நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு, தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு; சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது மக்களின் விருப்பத்துக்கு எதிரானது; மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு என்று அதிமுக தன்னுடைய குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு என்பது தாய்-குழந்தை உறவை போன்றது. குழந்தையின் தேவை என்ன என்பதை அறிந்து தகுந்த நேரத்தில் கொடுப்பவள் தாய். ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது,’ என்று கூறிய அதிமுக, கும்பல் தாக்குதல் தற்போது பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது, இதுபோன்ற சம்பவங்களை மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது என்று கூறி கை கழுவிவிட முடியாது என மத்திய அரசுக்கு தகவலை பதிவு செய்தது.

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசிய அதிமுக, இறுதியில் வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. இதனையடுத்து அதிமுக மற்றும் பா.ஜனதாவின் கூட்டணியை இது உறுதி செய்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

தம்பிதுரை விளக்கம்

விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், “பா.ஜனதாவை முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்திய பொதுமக்களின் ஆணைக்கு மதிப்பளிக்கவே அதிமுக, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. பொதுமக்களின் உணர்வுகளுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும். இன்னும் ஆறு மாதங்களுக்கு பின்னர் தேர்தலுக்கான நடைமுறைகள் வரும், இப்போது பா.ஜனதாவின் 5 ஆண்டு ஆட்சியை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? இது தமிழகத்திற்கும் பொருந்தும், அங்கு அதிமுக பொதுமக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது, 5 வருட ஆட்சியை நிறைவுபெற அனுமதிக்க வேண்டும்,” என கூறியுள்ளார்.
அதிமுக திணறல்

பா.ஜனதாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தால் விளைவுகள் நேரிடும் என்ற நிலைபாடு அதிமுகவை ஒட்டிக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் தொடர்புடையதாக கூறப்படும் எஸ்.பி.கே குழு மற்றும் அதன் உரிமையாளருக்கு எதிரான வருமான வரித்துறை சோதனையை அடுத்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தது. ஏற்கனவே முதல்-அமைச்சரின் உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கே நெடுஞ்சாலை ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது என திமுக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளது. தமிழகத்தில் பொதுப்பணித்துறை முதல்-அமைச்சர் பழனிசாமி வசமே உள்ளது. மாநில அதிமுக அரசை பா.ஜனதா இயக்குகிறது என குற்றம் சாட்டப்படும் நிலையில், இப்போது தேவையே இல்லாத நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக அளித்துள்ளது.

இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பா.ஜனதாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் இடையே ஒருமித்த கருத்தும் கிடையாது என தகவல்கள் வெளியாகியது.பா.ஜனதாவிற்கு ஆதரவு தெரிவிக்க சில எம்.பி.க்கள் தயக்கம் காட்டினர் என்று அதிமுக தரப்பு தகவல் தெரிவிப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சிவசேனாவே விலகும் போது நாமும் விலகிக்கொள்வதே பாதுகாப்பானது என உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு மாறாக உயர்மட்ட அளவில், பா.ஜனதாவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு எம்.பி.க்களிடம் தம்பிதுரையால் எடுத்துரைக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டு இருந்தது.
பா.ஜனதாவிற்கு எதிராக வாக்கு

இதற்கிடையே சில எம்.பி.க்கள் பா.ஜனதாவிற்கு எதிராக வாக்களித்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியது.

பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மொத்தம் 312 எம்.பிக்கள் உள்ளனர். சிவசேனா வெளிநடப்பு செய்ததால் 18 எம்.பி.க்கள் எண்ணிக்கை போக 294 எம்.பிக்களானது. அதிமுகவின் 37 எம்.பி.க்களையும் சேர்த்தால் மொத்தம் 331 வாக்குகள் ஆளும் கூட்டணிக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 325 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பா.ஜனதா எம்.பி. விர்தல் ராட்டியா உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கீர்த்தி ஆசாத் வெளிநாடு சென்றதால் வாக்களிக்கவில்லை. இதுபோக, அதிமுகவை சேர்ந்த 4 எம்.பிக்கள் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் ஏன் வாக்களிக்கவில்லை என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.