சிறந்த நிர்வாகம் கேரளாவிற்கு முதலிடம், தென் மாநிலங்கள் அசத்தல்!

Read Time:3 Minute, 26 Second

இந்தியாவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலங்களில் கேரளம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் பொது விவகாரங்கள் மையம் (பிஏசி) என்ற அமைப்பு, சமூக-பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மாநில அரசுகளின் செயல்பாடுகளை தரமதிப்பீடு செய்து அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

2018 ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை, பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அமைப்பு வெளியிட்டது.

அத்தியாவசிய உள்கட்டமைப்பு, மனித வளர்ச்சிக்கான ஆதரவு, சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சட்ட ஒழுங்கு போன்ற 10 கருப்பொருளை முக்கியமாக கருத்தில் கொண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆய்வில் கேரள மாநிலம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தெலங்கானா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன. தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகம் மற்றும் தெலுங்கானா முதல் வரிசையில் இடம்பிடித்துள்ளது. மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களில் அரசின் நிர்வாக செயல்பாடுகள் மோசமான நிலையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 கோடிக்கும் குறைவான மக்கள்தொகையை கொண்ட சிறிய மாநிலங்களில், நிர்வாக செயல்பாடுகளில் இமாசலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, கோவா, மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் நிர்வாக செயல்பாடுகள் மோசமான நிலையில் உள்ளன. தனியார் அமைப்புகள் தரும் தகவல்கள் ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதால், அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளம், இமாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் அனைத்து வயது குழந்தைகளும் வாழ்வதற்கான சூழல் நன்றாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்ஹா பேசுகையில், சிறார்கள் வறுமையின் பிடியில் வாழ்வதற்கு அவர்களின் சூழ்நிலையை குறைகூற முடியாது, அவர்கள் நல்ல சூழலில் வளர்வதற்கான வாய்ப்புகளை அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.