‘தேசவிரோதி’ என்றாலும் உங்களுடைய குரலை எழுப்புங்கள்! உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

Read Time:3 Minute, 26 Second

வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு வழக்குகளை விசாரித்து, நிதீத்துறை மீது வெளிப்படையாக தன் கருத்துகளை முன்வைத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செலமேஸ்வர் ‘தேசவிரோதி’ என முத்திரையிடப்படுவது தொடர்பாக பேசுகையில், பயம் மற்றம் அச்சம் காரணமாக கருத்தை தெரிவிக்கவில்லை என்றால் ஜனநாயகத்தின் உயர்நாடிக்கு எதிரானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“1960 மற்றும் 1970-களில் அரசாங்கத்தை விமர்சித்த மக்கள் சிஐஏ உளவாளிகள் என்று அழைக்கப்பட்டனர். 1990-களில் உலகமையமாதலை அடுத்து அரசின் கொள்கைகள் மற்றும் அரசை விமர்சிப்பவர்களை சிஐஏ முகவர்கள் என்று அழைக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இப்போதைய நாட்களில் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு தேசவிரோதிகள் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்று முத்திரையிடப்படும் நடைமுறையானாது ஒரு தேசத்துடன் நின்றுவிடவில்லை, உலகம் முழுவதும் பரவலாக இருந்தது.

இந்தியா அல்லது உலகம் முழுவதுமாக இருக்கட்டும் அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற விவகாரத்தில் ஒத்துப்போகும். அவர்களுடைய ஒருதலைப்பட்சமான எண்ணம், அவர்கள் சரியானவர்கள் என்பதுதான். அவர்களுடைய கருத்துக்கு எதிர்ப்பு இருந்தால், எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு பெயரிடப்படும்;தாக்குதல் நடத்தப்படும். நீண்ட நேரம் நாம் ஸ்டீம் பாத் எடுத்துக்கொண்டால், வெப்பம் காரணமாக நம்முடைய தோல் எப்போது உரியும் என்பது நமக்கு தெரியாது. இதுபோன்ற நிலைதான் நம்முடைய குரலை எழுப்பவில்லை என்றாலும் ஏற்படும்.

ஒரு விஷயம் தவறாக செல்லும் போது அதற்கு எதிராக பேசாமல் இருக்கும் நபர்தான் அதனால் ஏற்படும் விளைவில் பாதிக்கப்பட கூடிய முதல்நபராக இருப்பார். எனவே, பொதுப் பிரச்சனைகளில் எந்தவித பயமும் இல்லாமல் தங்களுடைய நிலையை வெளிப்படுத்த வேண்டும், பெரும்பான்மையான கருத்துக்கு எதிராக இருந்தாலும்சரி அதனை தெரிவிக்க வேண்டும்,” என கூறியுள்ளார் செலமேஸ்வர்.

விஜயவாடாவில் முன்னாள் அமைச்சர் வத்தே சோபதீஸ்வர ராவ் எழுதிய புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய போது மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தார். எல்லாவற்றையும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் விமர்சித்து பேசுபவர் செலமேஸ்வர். நீதிபதியாக இருந்த போது, வரலாற்றில் முதல்முறையாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக பரபரப்பு புகாரை கூறி பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், நீதித்துறையில் மத்திய அரசின் தலையீட்டை வெளிப்படையாக எதிர்த்தவர் செலமேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.