கருப்புப் பணம் குறித்த அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு மறுப்பு

Read Time:3 Minute, 43 Second

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கருப்புப் பணம் குறித்த கேள்விக்கு அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதுகுறித்து தகவல் வெளியிடுவது என்பது நாடாளுமன்றத்தின் உரிமையை மீறும் செயலாகும் என்று கூறியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடைபெற்ற போது 2011-ம் ஆண்டு கருப்பு பணம் குறித்து ஆய்வு செய்ய டெல்லியை சேர்ந்த தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை நிறுவனம் (என்.ஐ.பி.எஃப்.ஏ.பி.), தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி குழு (என்.சி.ஏ.இ.ஆர்.) மற்றும் பரிதாபாத்தை சேர்ந்த நிதி மேலாண்மை தேசிய நிறுவனம் (என்.ஐ.எஃப்.எம்.) நியமனம் செய்யப்பட்டது.

கணக்கில் வராத வருமானத்தின் அளவை கண்டறிதல், பண மோசடி பரிவர்த்தனை (கருப்பை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள்) அவற்றை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வாறு நடத்துகிறார்கள் போன்றவற்றை ஆராயும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மூன்று நிறுவனங்களும் கருப்புப் பணம் தொடர்பாக ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அரசுக்கு 2013 டிசம்பர் 30, 2014 ஜூலை 18, 2014 ஆகஸ்ட் 21-ல் அறிக்கைகளை தாக்கல் செய்தது.

இப்போது வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கும் இந்தியர்களுக்கு சொந்தமான கருப்புப் பணம் குறித்து இந்நிறுவனங்களால் அளிக்கப்பட்ட 3 அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிடிஐ செய்தியாளர், மத்திய நிதியமைச்சகத்திடம் இந்த அறிக்கைகள் தொடர்பான தகவல்களை கோரியிருந்தார். இதற்கு மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில், இந்த அறிக்கைகள், நிதித்துறைக்கான நிலைக்குழுவிடம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கைகளை நிதித்துறைக்கான நிலைக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், அறிக்கைகள் தொடர்பான நகல்களை வெளியிடுவது என்பது பாராளுமன்றத்தின் உரிமையை மீறும் செயலாகும். அதுமட்டுமில்லாமல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(சி) பிரிவின்கீழ், இந்த தகவலை அளிப்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குளோபல் பினான்ஷியல் இண்டெக்ரிடி எனும் நிறுவனம் 2005-2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரூ.52.97 லட்சம் கோடி (770 பில்லியன் டாலர்கள்) அளவிலான கருப்புப்பணம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது என்று கணக்கிட்டு கூறியது. அதே காலகட்டதில் ரூ.11.35 லட்சம் கோடி (165 பில்லியன் டாலர்கள்) கருப்புப்பணம் இந்தியாவை விட்டு வெளியேறியது என்றும் கூறியது. ஆனால் இவ்வளவு கறுப்புப்பணம் இந்தியாவில் உருவாகிறது என்பது போன்ற உறுதியான மதிப்பீட்டுத் தகவல்கள் இதுவரையில் அதிகாரபூர்வமாக கணிக்கப்படவில்லை.