மேட்டூர் அணை நிரம்பியது, 80 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை; கர்நாடகாவில் கனமழை

Read Time:3 Minute, 50 Second

மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து, அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பியது. இதையொட்டி கடந்த 2 வாரங்களாக அந்த அணைகளில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர்வரத்தால் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தது. நேற்று மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

அணையின் 84 ஆண்டுகால வரலாற்றில் 39-வது ஆண்டாக அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

1934-ம் ஆண்டில் திறக்கப்பட்டது மேட்டூர் அணை, இதற்கு முன்பாக 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 120 அடியை எட்டியது. தமிழகத்தின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை, கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையைப் போல இரு மடங்கு கொள்ளளவைக் கொண்டது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அணை நிரம்பி உள்ளது.

அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கும் அளவு நேற்று இரவு 10 மணியளவில் அதிகரிக்கப்பட்டது
மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் மற்றும் பாசன தேவைக்கு வினாடிக்கு 80ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி பாய்ந்தோடும் 12 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிப்பது, நீச்சல் அடிப்பது, நீர்நிலை அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தொடரும் கனமழை

கர்நாடகாவில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளும் கடந்த வாரமே முழு கொள்ளளவை எட்டியது. அங்கிருந்து உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, மடிக்கேரி, பாகமண்டலா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதே போல மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 42,050 கன அடி நீரும், கபினி அணைக்கு வினாடிக்கு 31,340 கன அடி நீரும் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 52,500 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 31,150 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக தமிழகத்துக்கு வினாடிக்கு 83,650 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும்.