ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் நிலத்தடி நீரில் கடுமையான மாசுபாடு!

Read Time:2 Minute, 50 Second

ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் நிலத்தடி நீரில் கடுமையான மாசுபாடு ஏற்பட்டுள்ளது என மத்திய நிலத்தடி நீர் வாரியம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் தூத்துக்குடியில் நிலத்தடி நீரின் தன்மையை ஆய்வு செய்ய அரசாங்கம் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வியை எழுப்பிய சசிகலா புஷ்பா எம்.பி., இதுதொடர்பாக விரிவான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார். கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் நிலத்தடி நீரின் தரத்தை கண்டறிவதற்காக, மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு நடத்தியது.

அந்த தொழிற்பேட்டை பகுதியில் இருந்து பல நீர் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டன. ஆய்வின் முடிவில், பெரும்பாலான நீர் மாதிரிகளில், வரையறுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக உலோக மாசுகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. காட்மியம், குரோமியம், மாங்கனீசு, இரும்பு, ஆர்செனிக் போன்ற உலோகங்கள் வரையறுக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள ஆய்வறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் இரும்பு, நிக்கல், காட்மியம், புளூரைடு ஆகிய உலோக மாசுக்கள் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்தார்.

நிலத்தடி நீர் மற்றும் காற்றில் அதிக அளவு மாசுக்களை உண்டாக்குவதால் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22–ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து 28–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலை மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆலை நிர்வாகம் நீதிமன்றம் சென்றுள்ளது.