பா.ஜனதா ஆட்சியில் பசு பெயரில் அதிகரிக்கும் கொடூரம் ‛பிரதமர் மோடி மவுனம் கலைப்பது எப்போது?’

Read Time:16 Minute, 32 Second

குருட்டுத்தனமான மத பாரபட்சத்தால் வழிநடத்தப்படும் குண்டர்கள்; பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நில்லாது அதனை நியாயப்படுத்தும் ஒரு சூழலில் அப்பாவிகள் கொடூரமான முறையில் அடித்துக்கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28) தன்னுடைய நண்பர் அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் (ராஜஸ்தான் மாநிலம்) அருகேயுள்ள லாலாவாண்டி காட்டுப் பகுதி வழியாக வெள்ளி இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரையும் கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது, பசுக்களை கடத்தி செல்வதாக கூறி தாக்கியது. அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். அவரை கொடூரமான முறையில் தாக்கிய கும்பல் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸ் காயம் அடைந்த அக்பர் கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், விசாரணையை நடத்தியுள்ளது. 4 மணிக்கு அக்பர் கான் உயிரிழந்தார்.

போலீஸ் அலட்சியம்

இந்த கொலை தொடர்பாக ராம்கார்க் போலீஸ் நிலையத்தில் சனிக்கிழமை அன்று எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர். தகவலின்படி, கும்பல் தாக்குதல் தொடர்பாக உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த நாவல் கிஷோர் சர்மா போலீசுக்கு நள்ளிரவு 12:41 தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் 1.15 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது. காயம் அடைந்த அக்பர் கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக அவரிடம் விசாரணையை போலீஸ் மேற்கொண்டுள்ளது. பின்னர், காலை 4 மணியளவில் உள்ளூர் சுகாதாரத்துறை மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அக்பர் கான் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு 1.15 மணிக்கு சென்ற போலீஸ் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு சுமார் 3.45 மணி நேரங்கள் எடுத்துள்ளது. கும்பல் தாக்குதலில் காயம் அடைந்த அக்பர் கானின் புகைப்படம், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்பதை காட்டுகிறது. போலீஸ், அக்பர் கானை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து தாக்கியது என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீசுக்கு 4 மணி நேரம் பிடித்த நிலையில், அவருடைய பசுக்களை மட்டும் பாதுகாப்பு மையத்திற்கு விரைவாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க தெரிந்துள்ளது.

அக்பர் கானை தாக்கியது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் தான் என்று கூறப்படுகிறது. இதில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் குண்டர்களும், போலீசும் குற்றவாளிகள்தான் என்பதை காட்டுகிறது. விசாரணையை மேற்கொண்டு வரும் போலீஸ் மூவரை கைது செய்துள்ளது. தாக்குதல் தொடர்பாக ராஜஸ்தான் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

ராகுல் காந்தி கண்டனம்

பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு போலீஸ் காட்டிய அலட்சியம் தொடர்பான செய்தியை டுவிட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, உயிருக்கு போராடிய அக்பர் கானை 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 3 மணிநேரம் போலீசார் எடுத்துள்ளார்கள் ஏன்? அவர்கள் செல்லும் வழியில் டி-ப்ரேக் எடுத்துள்ளனர். இதுதான் மோடியின் ஒரு மிருகத்தனமான இந்தியா, இங்கு மனிதநேயம், வெறுப்பால் அகற்றப்பட்டுள்ளது, மக்கள் நசுக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

உச்சநீதிமன்றம் கண்டனம்

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறிய நிலையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்தது. “பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மாவட்டம் தோறும் உயர் அதிகாரியை சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்ய உத்தரவிட்டது. பசு பாதுகாவலர்கள் என தங்களை கூறிக்கொள்பவர்கள் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நியமனம் செய்யப்படும் அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.”

இந்த உத்தரவை ராஜஸ்தான், அரியானா, உத்தரபிரதேசம் பின்பற்றவில்லை என்று காந்தியின் பேரன் தூஷார் காந்தியின் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 17–ந் தேதி விசாரணை நடைபெற்ற போது, இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டது. இதை தடுக்க தனியாக சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் 21-ம் தேதி அல்வாரில் அக்பர் கான் கொல்லப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பான பிரதான வழக்குடன் சேர்த்து, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28–ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மோடி ஆட்சியில் வன்முறை அதிகரிப்பு

2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர், பசு பாதுகாப்பு, மாட்டிறைச்சி போன்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் அதிகரித்துதான் காணப்படுகிறது. பசு பாதுகாப்பு, மாட்டிறைச்சி தொடர்பாக மீடியாக்களில் வெளியான செய்திகளை ஆய்வு செய்து கடந்த 2017-ம் ஆண்டு ‘இந்தியாஸ்பெண்ட்’ மீடியா வெளியிட்ட தகவலில், 2010-ம் ஆண்டு இதுபோன்ற தாக்குதல்களில் 86% இஸ்லாமியர்கள் கொள்ளப்பட்டுள்ளனர். அதாவது, 63 தாக்குதல்களில் கொள்ளப்பட்ட 28 பேரில் 86% சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். 97% வன்முறை சம்பவங்கள் 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு நடந்ததுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

2017 ஜூலைக்கு பின்னரும் பசு பாதுகாப்பு, மாட்டிறைச்சி என்ற பெயரிலான வன்முறை சம்பவங்கள் இந்தியாவில் அதிகரித்துதான் வருகிறது.

இந்தியா முழுவதும் கும்பல் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் இதுதொடர்பாக தகவல்தரவை மத்திய அரசு கொண்டுள்ளதா? என்ற கேள்விக்கு மத்திய அரசு, ஜூலை 18-ம் தேதி பதிலளிக்கையில், “தேசிய குற்ற ஆவண காப்பகத்திடம் (என்சிஆர்பி) கும்பல் தாக்குதல் தொடர்பாக குறிப்பிடத்தக்க வகையில் தகவல் இல்லை,” என தெரிவிக்கப்பட்டது. 2014 முதல் 2018 மார்ச் 3-ம் தேதி வரையில் 9 மாநிலங்களில் 40 கும்பல் தாக்குதல் வழக்குகளில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 217 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பசு பாதுகாப்பு, மதவாதவம், ஜாதிய வெறுப்பு அல்லது குழந்தை கடத்தல் என என்ன நோக்கத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக எந்த தகவலும் கிடையாது.

மாட்டிறைச்சி சாப்பிட கூடாது

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும் கும்பல் தாக்குதல் விவகாரம் காங்கிரஸ் கட்சியால் எழுப்பப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தெளிவான பதிலை தெரிவிக்கவில்லை எனவும் விமர்சனம் செய்யப்பட்டது.

கும்பல் தாக்குதல் சட்டம் ஒழுங்கு விவகாரம் மாநிலங்களை சார்ந்தது என மத்திய அரசு விலகுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமிய இறைச்சி வியாபாரியை அடித்துக் கொன்று சிறை சென்று திரும்பியவர்களுக்கு சமீபத்தில் மத்திய மந்திரி ஜெயந்த் சின்ஹா மாலை மரியாதை அளித்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது, பின்னர் வருத்தம் தெரிவித்தார். இதுபோன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை நடத்தியது பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அல்வார் தாக்குதல் விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாகிய நிலையில், தெலுங்கானா மாநிலம், கோஷமால் தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசுகையில், “இறைச்சிக்காக பசுக்கள் வெட்டப்படுவதை நிறுத்தும் வரையில் இதுபோன்ற கும்பல் தாக்குதல்கள் தொடரத்தான் செய்யும்,” என்று கூறியுள்ளார். புதிய மசோதாக்களை அறிவிக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கும் விதத்தில் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டார். வீடியோவில் பேசும் அவர், இதுபோன்ற வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்றால், பசுவை தேசிய விலங்காக அறிவித்து கௌரவப்படுத்த வேண்டும். அதனை பாதுகாக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

மேலும் அதற்கென தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மேற்பார்வை மேற்கொள்ள வேண்டும். அதுவரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரும். அவர் (ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்டவர்) ஏன் கொலை செய்யப்பட்டார் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஊடகங்களில் வெளியான தகவலின்படி பசு கடத்தல் குற்றத்துக்கு அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பசுக்கள் கொல்லப்படும்போது யாரும் போராட்டம் நடத்தவில்லை. எனினும், பசு பாதுகாவலர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, ஊடகங்கள் பசு பாதுகாவலர்கள் மீது பழி கூறுகின்றனர் என்றார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்த்ரேஷ் குமார் பேசுகையில், ‘மாட்டிறைச்சி சாப்பிடவில்லை என்றால், கும்பல் தாக்குதல் நிறுத்தப்படும்’ என்று கூறியுள்ளார். இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய கையில் ஒரு சட்டம் கொண்டிருந்தால் அரசியலமைப்பு எதற்கு என்ற கேள்விதான் எழுகிறது.

மவுனம் கலையுங்கள்

குருட்டுத்தனமான மத பாரபட்சத்தால் வழிநடத்தப்படும் குண்டர்கள்; பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நில்லாது அதனை நியாயப்படுத்தும் ஒரு சூழலில் அப்பாவிகள் கொடூரமான முறையில் அடித்துக்கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் மந்திரிகளும், எம்.எல்.ஏ.க்களும் அவர்களுடைய அறிக்கையின் வாயிலாக பசு பாதுகாப்பு என்பதை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கிறார்கள்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கும்பல் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் வெளி உலகிற்கு தெரியவேண்டும் என்று விரும்புகிறார்கள் எனபது கவனிக்க கூடியது. வீடியோவிலும் பதிவு செய்து பரவ விடுகிறார்கள். இதனை எச்சரிக்கை விடுக்கும் சாதனமாக பயன்படுத்துகிறார்கள் என்பதையே காட்டுகிறது. இப்போது அல்வார் தாக்குதலில் ஈடுபட்டவர்களும் நாங்கள் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் ஆட்கள் என மிரட்டியுள்ளனர். ராம்கார்க் பா.ஜனதா எம்.எல்.ஏ. கியான் தேவ் அகுஜா பேசுகையில், அல்வார் விவகாரத்தில் போலீஸ் விசாரணை தொடர்பாக கேள்வியை எழுப்பினார்.

நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், எப்போது பசு பாதுகாவலர்கள் வேண்டுமென்றே இலக்காக்கப்படுகிறார்கள் என்றார். கடந்த 2017-ம் ஆண்டு இதேபோன்று ஒரு சம்பவம் நடைபெற்ற போது ‘பசுக்களை கடத்தினால் உங்களை கொல்வோம்,’ என மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் பசு பாதுகாப்பு, மாட்டிறைச்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாமலே செல்கிறது. இது மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலே இருக்கிறது.

இதுபோன்ற சமூக விரோத சக்திகளுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையை விடுக்கவில்லை என்றால், இதுபோன்ற கொடூரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் பிரதமர் மோடி அவர்களே!. 2017-ல் “பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் மனிதர்களைப் படுகொலை செய்வதை ஏற்க முடியாது” சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் மோடி நீங்கள் முழங்கிய மறுநாளே ஜார்க்கண்டில் மாட்டிறைச்சியை எடுத்து சென்றதாக அலிமுதீன் என்கிற அஸ்கார் அன்சாரி அடித்துக் கொலை செய்யப்பட்டார். உங்களுடைய வார்த்தைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அது வெறுமனே உதட்டிலிருந்து வந்த சம்பிரதாயமான வார்த்தைகள்தான் என்று அவர்களுக்கு தெரிகிறது. இவ்விவகாரத்தில் உங்களுடைய மவுனத்தை கலைத்து சரியான நடவடிக்கையையே தேசம் எதிர்நோக்குகிறது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிரான ஸ்திரமான நடவடிக்கையில்லாமல், ஆதரிக்கும் வகையில் சென்றால் நீங்கள் கூறும் புதிய இந்தியா, மிருகத்தனமான இந்தியாவாகத்தான் இருக்கும்.