‘யாருடைய உதவியும் வேண்டாம்’ மீன்விற்கும் கல்லூரி மாணவி

Read Time:5 Minute, 39 Second

கல்லூரியில் படித்துக்கொண்டே மீன் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வரும் மாணவியை கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் தொடுபுழாவைச் சேர்ந்த ஹனன் (19 வயது) தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்லும் நேரம் போக மாலை நேரங்களில் தம்மணம் பகுதியில், மீன் விற்பனை செய்து தனக்கான வருமானத்தை ஈட்டிவருகிறார். மாணவின் ஹனன் தொடர்பான செய்தி மாத்ருபூமி நாளேட்டில் சிறப்பு கட்டுரையாக வெளியாகியது. ஹனன் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மலையாள திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் அவருடைய செயலை புகழ்ந்து, உதவி செய்ய முன்வருவதாக தெரிவித்தனர்.

ஹனனின் முயற்சிக்கு ஒருதரப்பில் பாராட்டு குவிந்தாலும், மறுதரப்பில் சமூக வலைதளங்களில் விமர்சனமும் எழுந்தது. அவருடைய செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுப்பிய நெட்டிசன்கள் ஹனின் நடவடிக்கை போலியானது, செய்தியும் போலியானது என்று விமர்சனம் செய்ய தொடங்கினர். இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் தொடங்கியது.

ஹனன் படிக்கும் கல்லூரி நிர்வாகம், அவருடைய தோழிகள், உறவினர்கள் அனைவரும் மாத்ரூபூமி நாளேட்டில் வந்த செய்தி உண்மையானதுதான் என்று கூறியுள்ளார்கள். ஹனன் உண்மையில் வறுமையாக குடும்பத்தை சேர்ந்தவர். அவரைய பொருளாதார நிலையால் மாலை நேரத்தில் மீன் விற்கிறார். அந்த செய்தி போலியானது கிடையாது என்று குறிப்பிட்டார்கள். இருப்பினும் சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் ஹனனை புண்படுத்தும் வகையில் இருந்தது. இதனையடுத்து ஹனனுக்கு ஆதரவு அதிகரித்தது.

கேரள மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் ஹனனுக்கு ஆதரவு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில், ‘‘ஹனனை புண்படுத்தும் வகையில் தவறான கருத்துக்களை பரப்புபவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். ஒரு பெண் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறார். ஆனால், நீங்கள் பருந்துபோல அவரை கொத்துகிறீர்கள். ஹனனின் கடின உழைப்புக்கும் வாழ்க்கையில் முன்னேறவும் வாழ்த்துக்கள். இளமைக் காலத்தில் பிரதமர் மோடியும் இதுபோல் கடினமாக உழைத்து நல்ல நிலைக்கு வந்தவர் என்பதை அனைவரும் உணர வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.

ஹனனுக்கு ஆதரவு தெரிவித்த கேரள மகளிர் ஆணைய தலைவர் எம்.சி. ஜோசப்பைன், கொச்சியில் சென்று அவரை சந்திப்பதாகவும், கடினமான உழைக்கும் பெண்களை கொச்சைப்படுத்துவது கண்டனத்துக்குரியது என குறிப்பிட்டுள்ளார். மலையாள திரைப்பட இயக்குநர் அருண் கோபி, தான் அடுத்து இயக்க உள்ள திரைப்படத்தில் ஹனனுக்கு வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் அவரையும் குறிவைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது, ஆனால் அருண் கோபி தன்னுடைய நிலைப்பாட்டில் ஸ்திரமாக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தன்மீது எழுப்பப்படும் விமர்சனங்களாலும், சந்தேகங்களாலும் மிகவும் வேதனைக்கு உள்ளாகிய ஹனன் அழுது கொண்டு கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். அதில் “ எனக்கு யாரிடம் இருந்தும் எந்தவிதமான உதவியும் தேவையில்லை. என்னை தனிமையில் விடுங்கள். என்னுடைய வாழ்க்கையை ஓட்டுவதற்கு நியாயமான முறையில் உழைக்க என்னை அனுமதியுங்கள்” என்று தெரிவித்தார். இதற்கிடையே ஹனனுக்கு கேரள மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

கேரள மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன், சமூக வலைதளங்களில் மோசமான பிரசாரத்தை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார். மாணவியால் பெருமை கொள்கிறேன், அரசு அவருக்கு ஆதரவாக நிற்கும். ஒட்டுமொத்த மாநிலமும் அவருக்கு உதவியாக இருக்க வேண்டும். இதுபோன்று எதிர்க்கட்சி தலைவர்களும் மாணவிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அரசின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஹனன், ‘என்னுடைய பணியான மீன் விற்பனையை நான் தொடர வேண்டும்’ என்று கூறியுள்ளார். சுயமாக உழைத்து முன்னேற துடிக்கும் மாணவியை ‘ட்ரோல்’ செய்பவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துக்கொண்டால் போதும்