பிரதமர் மோடியின் புல்லட் ரெயிலைவிட வேகமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

Read Time:4 Minute, 38 Second

நாட்டிலேயே முதன்முறையாக மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த செப்டம்பரில் நடைபெற்றது. பிரதமர் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் விவசாயிகளிடம் எதிர்ப்பை சந்தித்து வருகிறது, இதனால் நிலம் கையகப்படுத்தலில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு ஜப்பான் 88 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி செய்கிறது. 0.1 சதவீதம் என்ற மிகவும் குறைவான வட்டியில் ஜப்பான் கடன் கொடுக்கிறது.

இந்த கடன் தொகையை 50 ஆண்டுகளில் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் 15 ஆண்டு சலுகை காலமும் அளிக்கப்படுகிறது.

மும்பை – அகமதாபாத் இடையே 598 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையாகவும் 27 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையாகவும் 13 கி.மீ. தூரம் தரையிலும் பாதை அமைக்கப்படுகிறது. சுரங்கப் பாதையில் 7 கி.மீ. தூரம் கடலுக்கு அடியில் பாதை அமைய உள்ளது. புல்லட் ரயிலின் வேகம் மணிக்கு 320 கி.மீ. ஆகவும் அதிகபட்ச வேகம் 350 கி.மீ. ஆகவும் இருக்கும். இப்போது வேடிக்கையான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிரதமர் மோடியின் புல்லட் ரெயிலைவிட, இப்போது பயன்பாட்டில் இருக்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வேகமாக செல்கிறது என சிஏஜி தணிக்கையில் தெரியவந்துள்ளது

புல்லட் ரெயிலின் வேகம் மணிக்கு 320 கி.மீ., ஆனால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏற்கனவே 403 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் ரெயில்வே தகவல்களின்படி புல்லட் ரெயிலைவிட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வேகமாக செல்கிறது. இந்தியன் ரெயில்வே தொடர்பாக சிஏஜி மோற்கொண்ட தணிக்கையின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசத்தில் “2016 ஜூலை 9-ம் தேதி அலகாபாத் தூரந்தோ எக்ஸ்பிரஸ் பதக்பூர் ரெயில் நிலையத்தை காலை 5:53 மணியளவில் அடைந்துள்ளது. அங்கிருந்து அலகாபாத்திற்கு காலை 6:10 மணியளவில் சென்றுள்ளது. இதன்படி 17 நிமிடங்களில் ரெயில் 116 கிலோ மீட்டரை கடந்துள்ளது, அதனுடைய வேகம் 409 கி.மீ. ஆகும்” என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரயாக் ராஜ் எக்ஸ்பிரஸ், ஜெய்பூர்-அலாகாபாத் எக்ஸ்பிரஸ் மற்றும் டெல்லி-அலாகாபாத் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிகளின் பயண விபரங்களை பரிசீலனை செய்து சிஏஜி அறிக்கை வெளியாகியுள்ளது.

“2016-17-ம் ஆண்டுகளில் மூன்று ரெயில்கள் முறையே 354, 343 மற்றும் 144 நாட்களுக்கு இயக்கப்பட்டுள்ளது, இந்த ரெயில்கள் பதக்பூர் மற்றும் அலகாபாத் இடையிலான 116 கிலோ மீட்டர் தொலைவை கடக்க 53 நிமிடங்களுக்கு (முறையே 25, 29 மற்றும் 31 நாட்கள்) குறைவாகவே எடுத்துள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, அனுமதிக்கப்பட்டுள்ள வேகமான 130 கிமீ. வேகத்தில் சென்றால் ரெயில்கள் இரு ரெயில் நிலையங்களுக்கு இடையிலான தொலைவை கடக்க 53 நிமிடங்கள் பிடிக்கும். ஆனால் அதற்கு குறைவான நேரங்களிலே ரெயில்கள் சென்றுள்ளது என்பது தணிக்கையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், ஐசிஎம்சி (Integrated Coaching Management System ) மற்றும் என்டிஇஎஸ்சியில்(National Train Enquiry System) தவறான தரவு உள்ளீடுகள் பதிவு செய்யப்பட்டது, பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரெயில்வேயில் ரெயில்கள் வந்து செல்லும் நிகழ்நேர நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இந்த தரவுகள் பயன்படுகிறது. தரவுகளில் முரண்பாடு ரெயில்களின் தவறான வருகையை காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.