‘இந்தியாவிற்கு வந்துவிடுகிறேன்’ லண்டனில் மல்லையா அலறல்…

Read Time:8 Minute, 50 Second

இந்திய பொதுத்துறை வங்கிகளில் கடன் மோசடி செய்துவிட்டு இங்கிலாந்து ஓடிய விஜய் மல்லையாவிற்கு எதிராக அமலாக்கப்பிரிவு எடுத்துள்ள நடவடிக்கையால், அவர் நாடு திரும்பும் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு லண்டன் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவிற்கு எதிராக இந்தியாவில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு தனித்தனியாக விசாரித்து வருகிறது. பல்வேறு வங்கிகள் சார்பில் தொடர்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார். அமலாக்கப்பிரிவும், சிபிஐ நீதிமன்றமும் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை விஜய் மல்லையாவை எளிதாக இந்தியாவிற்கு நாடு கடத்த முடியாத நிலையில் இரு விசாரணை முகமைகளும் அதன்கான முயற்சியாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

விசாரணை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றத்தில் நடக்கிறது. இங்கிலாந்தில் இருந்துக்கொண்டு கடனை திருப்பிச் செலுத்துவது குறித்து வாய் திறக்காமலும், வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும் வாய் சவுடால் விடுத்துவந்தார்.

அமலாக்கப்பிரிவு அதிரடி

இந்தியாவிற்கு திரும்புவது தொடர்பாக விஜய் மல்லையா தரப்பில் சாதகமான பதில் வராத நிலையில், அமலாக்கப்பிரிவு புதிய சட்டத்தின்கீழ் வழக்கை முன்னெடுக்க கோரிக்கையை முன்னெடுத்தது.
வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையிலான அவசரச் சட்டத்தை கையில் எடுத்தது அமலாக்கப்பிரிவு (புதிய பொருளாதார குற்றவாளிகள் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் ஜுலை 25-ல் நிறைவேற்றப்பட்டது). மும்பை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் (பிஎம்எல்ஏ) மனுதாக்கல் செய்த அமலாக்கப்பிரிவு விஜய் மல்லையாவிற்கு எதிராக புதிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மல்லையா இந்தியாவிற்கு திரும்பவில்லை என்றால் ரூ. 12,500 மதிப்பிலான அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தது. இதனையடுத்து ஆகஸ்ட் 27-ம் தேதி மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவருவது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்திலும் விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது.

ஏற்கனவே விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய பிரிட்டன் உயர் நீதிமன்றம் அந்நாட்டு அமலாக்கப்பிரிவுக்கு உத்தரவிட்டது. அனுமதியை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. இதற்கிடையே அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிப்பு என்ன?

நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையின்படி, தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக மல்லையா அறிவிக்கப்படும் பட்சத்தில் அவரது 12,500 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கப்பிரிவு உடனடியாக பறிமுதல் செய்ய முடியும். ஆகஸ்டு 27-க் தேதி மல்லையா நேரில் ஆஜராகாவிட்டால் அவர் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சொத்துகள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. புதிய சட்டத்தின்கீழ் அமலாக்கப்பிரிவு பொருளாதார குற்றவாளிகளின் வெளிநாட்டு சொத்துக்களின் மீதும் கை வைக்கலாம். இச்சட்டத்தின் கீழ் வழக்கை எதிர்க்கொள்ளும் முதல் நபர் விஜய் மல்லையா ஆவார்.
மல்லையா அலறல்

இந்திய விசாரணை முகமைகளை கவலையோடு எதிர்பார்க்கும் நிலையில் மாத கணக்கில் வைத்திருந்த விஜய் மல்லையா, அமலாக்கப்பிரிவின் நடவடிக்கையில் ஆட்டம் கண்டுவிட்டார். அமலாக்கப்பிரிவு பிடியை இறுக்கிய நிலையில் இந்தியாவிற்கு வரவேண்டும் என்ற நிலையில் விஜய் மல்லையா தள்ளப்பட்டார். இங்கிலாந்து நீதிமன்றத்தில் நாடு கடத்துவது தொடர்பான வழக்கிலும் பின்னடவை சந்திக்கும் நிலை ஏற்படும் என மோப்பம் பிடித்த விஜய் மல்லையா இந்தியாவிற்கு திருப்பி விடுகிறேன் என தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மல்லையா மீண்டும் இந்தியா திரும்ப விரும்பம் தெரிவித்துள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பொருளாதார குற்றவாளிகளுக்கான புதிய சட்டத்தின்படி சொத்துக்களை இழக்க வாய்ப்புகள் உள்ள நிலையில் திரும்பி வருகிறார். ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வான அறிவிப்பு மல்லையா தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

புதிய சட்டம்

இந்தியாவில் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி நாடு திரும்ப மறுத்துவிட்டனர். இந்நிலையில் வெளிநாட்டுக்குத் தப்பியோடிய பொருளாதார மோசடி குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. அதன்படி, வெளிநாட்டிற்கு ஓட்டம் பிடிப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு தயார் செய்தது, அவசரச்சட்டமாக கொண்டு வந்தது.
இதுதொடர்பான மசோதா மக்களவையில் ஜூலை 19-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. மசோதா மாநிலங்களவையில் ஜூலை 25-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி, 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு வழக்கை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுபவர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்ப மறுப்பவர்கள் போன்றவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யமுடியும். குற்றவாளி என தண்டனை அறிவிக்கப்படாமலே அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும், கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பி செலுத்தவும் இந்த மசோதா அனுமதி வழங்குகிறது.

பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பணமோசடி தடுப்பு சட்டத்தின் மூலம் அமலாக்கத்துறை பறிமுதல் செய்யும். கடன் கொடுத்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு மீதி தொகையை அவர்களிடம் திருப்பி கொடுக்கும்.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷிக்கு எதிராகவும் புதிய சட்டத்தை அமலாக்கப்பிரிவு கையில் எடுத்துள்ளது.