ஜிமெயிலில் ‘கான்பிடென்சில் மோட்’ பயனாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

Read Time:3 Minute, 46 Second

ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்பட்ட ‘கான்பிடென்சில் மோட்'(Confidential Mode) இப்போது பாதுகாப்பு தொடர்பான அச்சத்தின் மையமாகியுள்ளது. தனியுரிமைக்கு மிகப் பெரிய ஆபத்துக்களை விளைவிக்கக்கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் சேவையில் கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தப்பட்டது.

புதியதாக கொண்டுவரப்பட்ட ‘கான்பிடென்சில் மோட்’ பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதாவது, இந்த சிறப்பம்சத்தை பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலை பெறுபவர் மற்றொருவருக்கு அதை பார்வர்ட் செய்யவோ, பிரிண்ட் எடுக்கவோ முடியாது.

காபி, பேஸ்ட்டும் செய்யமுடியாது. தேவையென்றால், அந்த மின்னஞ்சலுக்கு காலாவதி நேரத்தையும், பாஸ்வேர்டையும் கூட அமைத்துக்கொள்ளலாம். ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு கான்பிடென்சில் மோட் வசதியாக காணப்பட்டாலும் , கூகுள் இல்லாத பிற மெயில் சேவை தளத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு செய்தி ‘லிங்’ ஆக செல்கிறது. அவர்கள் லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சிறப்பம்சங்கள் கவனம் பெற்றாலும், இதனால் பயனாளர்களின் தனியுரிமைக்கு மிகப் பெரிய ஆபத்துக்கள் உள்ளது என அமெரிக்காவை சேர்ந்த மின்னணு சார்ந்த விடயங்களுக்கான உரிமைக்காக செயல்படும் அரசுசாரா அமைப்பான இ.எஃப்.எஃப் (Electronic Frontier Foundation)கூறியுள்ளது.
வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற செயலிகள் அளிக்கும் ‘என்க்ரிப்ஷன்’ என்னும் அதிமுக்கியமான விடயத்தை ஜிமெயிலின் ‘கான்பிடென்சில் மோட்’ கொடுப்பதில்லை என்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட இரு நபர்களுக்கிடையே பரிமாறப்படும் தகவல்களை அந்த இணையதளம்/ செயலியை நடத்துபவர்கள் உள்ளிட்ட எவரும் காண முடியாது, இது ‘கான்பிடென்சில் மோடில்’ கிடையாது.

மேலும், ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சலை, பிரிண்ட், காபி-பேஸ்ட், பார்வர்ட் செய்யமுடியாது என்றாலும் அதை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடுக்கமுடியாது என்றும், காலாவதியான மின்னஞ்சல்களையும் கூகுளால் எந்நேரமும் படிக்க முடியும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மூன்றாம் தரப்பில் மெயில் பயன்படுத்துவோருக்கு ‘லிங்’ ஆக தகவல் செல்லும் போது ஹேக்கிங் செய்யப்படும் பெரும் எச்சரிக்கையும் உள்ளது என எச்சரிக்கப்படுகிறது.

மின்னஞ்சலுக்கு பாஸ்வேர்டு கொடுப்பதன் மூலம் அதை பெறுபவரின் ஒப்புதலின்றியே அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் கூகுளுக்கு தெரியவருவதாகவும் இ.எஃப்.எஃப் கூறியுள்ளது.

இருப்பினும், பயனர்களின் தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம் என கூறும் கூகுள் நிறுவனம், இதுபோன்ற மோசடிகளை கண்டறிய தொழில்நுட்ப நெறிமுறைகளை உருவாக்கி உள்ளோம் என கூறியுள்ளது.