ஆதாருக்கு இதுதான் உங்கள் பாதுகாப்பா? சவால்விட்ட ‘டிராய்’ தலைவரின் தகவல்களை அம்பலப்படுத்திய பிரான்ஸ் ஹேக்கர்!

Read Time:6 Minute, 51 Second

சமூக வலைதளத்தில் ஆதார் எண்ணை வெளியிட்டு உங்களால் என்ன செய்யுமுடியும்? என சவால் வெளியிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மாவின் மொத்த தகவலையும் அம்பலப்படுத்தி பிரான்ஸ் ஹேக்கர் பதிலடியை கொடுத்துள்ளார்.

ஆதார் என்னும் 12 இலக்க அடையாள அட்டை எண், அரசு சேவைகளுக்கும், சமூக நல திட்டங்களுக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இப்படி ஆதார் எண்களை இணைப்பதால், தனிநபர் பற்றிய ரகசியம் கசிய வாய்ப்பு இருப்பதாக பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே அரசு இணையதளங்களில் ஆதார் தொடர்பான தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே “ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கும் சட்டமும், பயோமெட்ரிக் முறையும் அரசியல் சாசனப்படி செல்லுபடி ஆகாது” என அறிவிக்க கோரி பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து ஆதார் தொடர்பான தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கு ஆதார் விவகாரத்தில் நெருக்கடியை கொடுக்கும் விதமான சம்பவம் வெளியாகியுள்ளது.

டிராய் தலைவர் சவால்

இப்போது, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக இருப்பவர் ஆர்.எஸ். சர்மா. ஆதார் தொடர்பான தகவல்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஆர்.எஸ். சர்மா சமூக வலைதளத்தில் சவால் ஒன்றை விடுத்தார். ஆர்.எஸ். சர்மா முன்னதாக ஆதார் ஆணையம் (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம், யுஐடிஏஐ ) பணியாற்றி டிராய்க்கு திரும்பியவர்.

டுவிட்டரில் தன்னுடைய ஆதார் எண்ணை பதிவிட்ட ஆர்.எஸ். சர்மா, “என்னுடைய ஆதார் எண்ணைப் பதிவிட்டுள்ளேன். முடிந்தால் எண்ணைப் பயன்படுத்தி என்ன பாதிப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை கூறுங்கள், என்னுடைய தனிப்பட்ட தகவல்களை எடுங்கள் பார்க்கலாம்,” என்று சவால் விடுத்தார். துணிச்சலாக சவால் விடுத்ததும் அவரை பாராட்டி ரீடுவிட் செய்யப்பட்டது. தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்பதால்தான் இவ்வாறு சவால் விடுத்துள்ளார் எனவும் கருத்து தெரிவித்து, பலரும் லைக் செய்தனர். அது அநேக நேரம் நீடிக்கவில்லை.

பிரான்ஸ் ஹேக்கர் பதிலடி

பிரான்ஸ் நாட்டை ஆன்லைன் வல்லுநர் எலியட் ஆன்டர்சன், ஆர். எஸ். சர்மாவின் அனைத்து விவரங்களையும் அடுக்கடுக்காக வெளியிட்டார். சர்மாவின் புகைப்படம், வீட்டு முகவரி, பிறந்த தேதி, மாற்று தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பிரான்ஸ் ஹேக்கர் ஆன்டர்சன் வெளிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். “உங்களுடைய முகவரி, பிறந்ததேதி, தொலைபேசி எண், புகைப்படம் அனைத்தையும் வெளியிட்டுவிட்டேன். இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இப்போது, ஆதார் எண்ணை பொதுவெளியில் பதிவிட்டது தவறு என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்,”என எலியட் ஆன்டர்சன் குறிப்பிட்டு இருந்தார்.

இதோடு நிறுத்திக்கொள்ளாத ஆர்.எஸ். சர்மா, “என்னுடைய மொபைல் எண்ணை எடுப்பது என்னுடைய சவால் அல்ல. இந்த ஆதார் எண்ணை வைத்து எனக்கு என்ன பாதிப்பை உண்டாக்க முடியுமா? என்பதுதான். இதில் ஒன்றும் வெற்றி இல்லை. மீண்டும் முயற்சி செய்யுங்கள்,” என்று குறிப்பட்டார்.

இதற்கு பதில்கொடுத்த ஹேக்கர் ஆன்டர்சன், “நீங்கள் உங்களுடைய ஆதார் எண்ணை வங்கிக்கணக்கோடு இணைக்கவில்லை. நீங்கள் ஆதார் எண்ணைக்கு கொடுத்தது உங்களுடைய மொபைல் எண் கிடையாது. அது உங்களுடைய தனிச்செயலாளருடையது,” மேலும் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார்.

மேலும், ஆர்.எஸ். சர்மாவின் பான் எண் அனைத்தையும் பதிவிட்டு உங்களுடைய ஜிமெயில் பாஸ்வேர்டு, பயனாளர் பெயர் ஆகியவற்றை மாற்றிவிடுங்கள், மிகவும் பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது என்று எச்சரித்துள்ளார் ஹேக்கர் ஆன்டர்சன்.

பிரதமர் மோடி உங்களுடைய ஆதார் எண்ணை தெரிவிக்க முடியுமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் ஹேக்கர் ஆன்டர்சன்.

இதனையடுத்து பாராட்டு தெரிவித்த டுவிட்டர்வாசிகள் எல்லாம் ஆர்.எஸ். சர்மாவை விமர்சித்து அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கத் தொடங்கினார்.

மத்திய அரசுக்கு நெருக்கடி

ஆதார் தகவல் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்த நிலையில் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக இந்த சவால் முடிந்துள்ளது, பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் நீதிமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு தொடர்பாக வெளியிட்ட சவாலை பிரான்ஸ் நாட்டில் இருந்து ஹேக்கர் ஒருவர் 5 மணிநேரத்தில் முறியடித்து அனைத்து தகவல்களையும் வெளியிட்டுவிட்டார். ஆனால், சவால் இன்னும் சிலநாட்களுக்கு இருக்கும் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ். சர்மா.