‘உங்களுடைய கனவு நாயகியாக இருக்க விரும்பவில்லை’ உடை குறித்து விமர்சித்த ரசிகருக்கு பிரியா பவானி சங்கர் பதிலடி

Read Time:4 Minute, 1 Second

உடை குறித்து விமர்சனம் செய்த ரசிகருக்கு ‘உங்களுடைய கனவு நாயகியாக இருக்க விரும்பவில்லை’ என நடிகை பிரியா பவானி சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரைக்கு சென்றவர் பிரியா பவானி சங்கர். சின்னத்திரையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவர், வைபவ் ஜோடியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்தார். அவருடைய நடிப்பு பேசப்பட்ட நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக, கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். இந்த படம் பல தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானது வரையில் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிரியா பெரும்பாலும் குடும்ப பாங்கான ஹீரோயினாகவே பார்க்கப்பட்டார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், புரஃபைல் தற்போது மாத்தியுள்ளார். கருப்பு நிற சற்று கிளாமரான உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்து இருந்தார். இதனையடுத்து பரியா பவானி சங்கர் இப்படி ஒரு ஆடை அணிந்தது ஏற்கத்தக்கது அல்ல என்று இன்ஸ்டாகிராமில் பொங்க ஆரம்பித்துவிட்டனர். ரசிகர் ஒருவர் பதிவிட்ட கருத்தில் “எனது கனவு நாயகியாக உன்னை நான் நினைத்திருந்தேன். நிறைய நம்பியிருந்த நிலையில், நீ இப்படி செய்வாய் என நினைக்கவில்லை. இனி நீ என் கனவு நாயகி இல்லை,” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடிகொடுத்த பிரியா பவானி சங்கர் “உங்க அக்கறைக்கு மிக்க நன்றி. இதுபோன்ற எண்ணம் கொண்ட ஒரு ஆணின் கனவுக்கன்னியாக வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. உங்கள் விருப்பப்படி எல்லாம் என்னால் வாழ முடியாது. உங்கள் விருப்பதிற்கு ஏற்ற கனவுக்கன்னியை தேடிக் கொள்ளுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.

விரிவான விளக்கத்தையும் கொடுத்துள்ள பிரியா, இது தலைகணத்துடன் கொடுக்கப்பட்ட பதில் கிடையாது. என்னுடைய மதிப்பு மற்றும் கலாச்சாரம் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வதை எதிர்க்கவே முயற்சித்துள்ளேன். சற்று ட்ரான்ஸ்பரென்டான என்னுடைய படம் கலாச்சாரத்திற்கான ஆயுதமாக எடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய படத்தில் எச்சரிக்கையாக எதையும் நான் பார்க்கவில்லை. உங்களைப் போன்று படத்தை ஜூம் செய்து பார்ப்பவர்கள், முட்டாள்தனாமாக எடுத்துக் கொள்வார்கள், முட்டாள்தனமாக பேசுவார்கள் மற்றும் இப்படி பிறரை மதிப்பீடுபவர்கள் உயர்ந்த கலாச்சாரத்தை கொண்டுள்ளவர்களா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

உடை அணிவது காரணமாக நடிகைகள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாவது புதியது கிடையாது. இதற்கு முன்னதாக நடிகைகள் அமலா பால், சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா மற்றும் பிறர் இதுபோன்ற ட்ரோல்களை எதிர்க்கொண்டுள்ளனர்.