மழைநீர் சேகரிப்பு மட்டுமே சென்னைக்கான நீர்தேவைக்கு கைகொடுக்கும்!

Read Time:10 Minute, 32 Second

சென்னையின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு எமனாக உருவெடுக்கும் ‘கான்கிரீட் சாலைகள்’. நீர்த்தேவையை மழைநீர் சேகரிப்பால் மட்டுமே தீர்க்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரலாற்றில் இல்லாத தண்ணீர் பிரச்சினையை எதிர்க்கொண்டு வரும், சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும் என்று நிதி ஆயோக் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் ஓர் ஆண்டுக்கான சராசரி மழையின் அளவு 1200 மில்லி மீட்டராகும். இந்த மழைப் பொழிவு இரண்டு காலகட்டங்களாக, அதாவது தென்மேற்குப் பருவமழை காலம் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) 400 மி.மீ., வடகிழக்குப் பருவமழைக் காலம் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) 800 மி.மீ. என்ற அளவிலும் சராசரியாகப் பெய்கிறது.

இக்காலக்கட்டங்களில் மட்டும் சென்னையில் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, நீர் மட்டமும் உயர்கிறது. 2016-ல் தமிழகம் முழுவதும் போதிய மழைப்பொழிவு கிடையாது. சென்னையில் 2017-ல் மழைப்பொழிவு கைகொடுத்தது, இருந்தாலும் அதிகமான நீர் வடிகால் மூலமாக வங்ககடலில்தான் சேர்கிறது. பெருநகரமான சென்னையில் இன்று அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவருகிறது. ஆறு, குளம், ஏரி என அனைத்து வகையான நீர் ஆதாரங்களும் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறிவருகின்றன.
சென்னையின் இப்போதைய குடிநீர் ஆதாரங்கள் கார்ப்பரேஷன் குழாயும், லாரியும் மட்டுமே. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீட்டின் தண்ணீர்த் தேவைக்கு பெரிதும் நம்பியிருப்பது ஆழ்துளைக் கிணறுகளைதான். ஆழ்துளைக் கிணறுகளை் அமைக்கும்போதே 300 அடி முதல் 800 அடி ஆழத்துக்கு குழாய்களை இறக்குகிறார்கள். அதிக அளவு ஆழம் தோண்டினால், தங்கள் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் என்று நினைத்து, இப்படி செய்கிறார்கள். ஆனால், சில ஆண்டுகளிலேயே தண்ணீர் சரிவர கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்துக் கொள்வதற்காக, அதே வீட்டில் வேறு இடத்தில் மீண்டும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பரிதாபத்தை ரொம்ப சாதாரணமாகப் பார்க்க முடிகிறது.

சென்னையில் இப்போது ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது, இதன் காரணமாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை நாம் கண்கூடவே பார்க்க முடிகிறது.

மழைநீர் சேமிப்பு

நீர்ப்பற்றாக்குறையை எதிர்க்கொண்டும் வரும் நிலையில் மழைநீரை சேகரிப்போம் என்ற விழிப்புணர்வுக்கு எப்படி காது கொடுக்கிறோம், என்பது மரம் வளர்ப்போம் திட்டம் போன்றுதான் செல்கிறது. சென்னையில் பசுமை குறைந்து வருவது போன்றுதான் நீர்மட்டமும் பாதிப்பை எதிர்நோக்குகிறது.

தமிழகத்தில் 2003-ம் ஆண்டில் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டது. இப்போது இது முறையாக முன்னெடுக்கப்படுவது கிடையாது. அப்படியே சில இடங்களில் சேமிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் முறையான பராமரிப்பு இல்லாமல் பயனற்றதாக செல்கிறது. கட்டமைப்புகளும் முறையாக அமைக்கப்படுவது கிடையாது, ஆவணமாக மட்டுமேதான் இருக்கிறது.

அதிகரிக்கும் கான்கிரீட் சாலைகள்

சென்னையில் நீர்மட்டம் குறையும் நிலையில் புதிய எதிரியாக ‘கான்கிரீட் சாலைகள் அதிகரிப்பு’ எழுந்துள்ளது.
சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைப்பதால், தெருக்களில் நீர் தேங்காமல் தடுக்கலாம். ஆனால், மழை நீர் கசிந்து பூமிக்குள் இறங்க வாய்ப்பு கிடையாது. நிலத்தடி நீர் எவ்வளவு எடுக்கப்படுகிறதோ, அவ்வளவு நீரை பூமிக்கு திருப்பி தருவதில்லை. இதனால் பயன்படுத்துதல் மற்றும் திருப்பி தருவதற்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வருவதால், கடல் நீர் நிலத்தடி நீரில் கலக்கிறது. சென்னையில் கான்கிரீட் சாலைகள் அமைப்பு விஸ்தரித்துக் கொண்டே செல்கிறது.

மழைநீர் சேமிப்பால் மட்டுமே உதவ முடியும்

இப்போதைய சூழ்நிலையில் நீர் பற்றாக்குறையை ஈடுசெய்ய நம்முன் இருக்கும் ஒரே தீர்வு மழைநீர் சேகரிப்பு மட்டுமே.

2003 ஆண்டே மழைநீர் சேமிப்புக்கான கட்டுமானம் கட்டாயம் என்றாலும், இதனை நிறுவலின் போது நிபுணத்துவம் இல்லாமை மற்றும் தொடர்ச்சியாக பராமரிக்கப்படமையால் அதனுடைய நோக்கத்தை எட்டமுடியாத நிலை ஏற்படுகிறது. ‘மழை மையம்’ (Rain Centre) இயக்குநர் சேகர் ராகவன் டிடி நெக்ஸ்ட் பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசுகையில் “மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை மேற்கொள்ளப்பட்டாலும் அதனுடைய பராமரிப்பு தொடர்பான கேள்விகள் எழுகிறது.

60 சதவிதத்திற்கு அதிகமான கட்டிடங்களில் பயனுள்ள வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படவில்லை. அதிகமான வீடுகளில் மழைநீரை சேகரிப்பதற்காக குழிகள் (20 அடி அல்லது அதற்கு குறைவான அளவே துளை அமைக்கப்படுகிறது) மற்றும் பிவிசி பைப்கள் பூமிக்குள் செலுத்தப்படுகிறது, இவை பயனற்றது. மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆன பின்னரும் இதுதொடர்பாக எந்தஒரு புரிதலும் இல்லாமலே உள்ளது,” என்று கூறியுள்ளார்.

ஆழ்துளைக் கிணறு சுற்றி அமைத்த மழைநீர் சேமிப்பு திட்டம்

மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்பு 2.5 அடி அகலமும், 15 அடி ஆழமும் இருந்தால் மட்டுமே பயன்பெறும், அதனையும் வருடம் தோறும் சுத்தமும் செய்ய வேண்டும். “இந்த கிணறுகள் மழைநீரை சேமிப்பை உறுதிசெய்ய இடையூறாக கற்கள் இல்லாமல் காலியாக இருக்க வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.

கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து வரும் நீர் மட்டும் கட்டுமானம் மூலம் சேமிக்கப்பட்டாலும், மற்றப்பகுதியில் விழும் நீர் தெருக்களுக்கே செல்கிறது. அதனை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் வருடம் தோறும் சராசரியாக 140 செ.மீ. மழை பெய்தாலும், அதிகமான நீர் வடிகால் மூலமாக கடலுக்கே செல்கிறது. இம்முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனை சீர்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கோயில் குளங்களை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும். குளங்களுக்கு நீர் வரும் பாதைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
மழை நீர் சேமிப்பு வசதிகள் நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும், வீடுகளிலும் இருக்க வேண்டும். ஆனால், அதை விட முக்கியமாக அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். சேகர் போன்ற வல்லுநர்கள், நகரத்தின் நீர் மேலாண்மை வியூகத்தை மறு ஆய்வு செய்யவேண்டும். மழைநீர் சேமிப்பு திட்டத்திற்கு அரசு வழிகாட்டல் வேண்டும். அரசு கட்டிடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகூட பராமரிப்பு இன்றி உள்ளது. வடிகால் வாயிலாக மொத்த நீரும் கடலுக்கு செல்கிறது. இதனை நீர்நிலைகளுக்கு மாற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

ஒவ்வொரு துளி மழை நீரும் விலை மதிப்பற்றது. இப்போது மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொண்டுள்ளார்கள். எதிர்கால நீர்தேவையை பூர்த்தி செய்ய ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சென்னையில் பல்வேறு இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றிய நிலையில் பலரும் மழைநீர் சேமிப்பு திட்ட கட்டமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இது மிகவும் பாராட்டத்தக்கது. ஒவ்வொருவரும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இப்போது உங்களுடைய வீட்டில் மழைநீர் சேமிப்பு திட்டத்திற்கான கட்டமைப்பு அமைக்கப்படவில்லை என்றால் அதனை முறையாக மேற்கொள்ளுங்கள். அமைத்து இருந்தால் மழைநீர் தடங்கல் இல்லாமல் பூமிக்குள் செல்ல அதனை சுத்தம் செய்துக்கொள்ளுங்கள். மழை நீரை சேமிப்போம் என்ற வாசகத்தை செயலில் நிரூபித்துக் காட்டுவோம்…