ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சி ‘மற்றொரு போராட்டம்’ எதிர்ப்பாளர்கள் எச்சரிக்கை

Read Time:4 Minute, 55 Second

நீதிமன்றம் அனுமதி மறுத்தும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலத்தை வெளியேற்றும் பணிக்கு உதவ 200 பணியாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடுவதற்கு எதிராக வழக்கு தொடர வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து பாத்திமா பாபு தலைமையில் ஆலை எதிர்ப்பு ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையின் விளம்பரங்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் அறிக்கையை குறிப்பிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் மற்றொரு கடுமையான போராட்டத்தை எதிர்க்கொள்ள வேண்டியது இருக்கும் என அரசுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

“மாநில அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மிகவும் வேதனையளிக்கிறது. மே 22 மற்றும் 23 -ல் நடந்த போராட்டங்களில் 15 பேர் உயிரிழந்தும் ஆலை நிர்வாகம் பணிகளை தொடங்குவதை ஏற்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலையால் இப்பகுதியில் நிலத்தடிநீர் மாசுப்பட்டுள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையும் தெரிவித்துள்ளது. கொள்கை முடிவின் அடிப்படையில் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இதில் பின்னடைவாக, பின்வாசல் வழியாக ஆலையை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது,” என பாத்திமா பாபு குற்றம் சாட்டியுள்ளார்.

நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதை தடுக்க போலீசார் அவர்களால் செய்த முடிந்த நடவடிக்கையை மேற்கொண்டனர், ஆனால் ஆலையை திறப்பதற்கு மனு கொடுக்க வருபவர்களுக்கு எந்தஒரு தடையும் கிடையாது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்வலர் ராஜா பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கையை விடுத்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸ் தரப்பில் சம்மன் விடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டு இருந்தாலும் ஆலை நிர்வாகம் தரப்பில் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். “ஆலையை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அரசின் உத்தரவின் மீதான நம்பகத்தன்மை என்ன?” என கேள்வியை எழுப்பியுள்ளார் பாத்திமா பாபு.

இதற்கு பதிலளித்துள்ள மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஆலையை திறப்பதற்கான வாய்ப்புக்கள் கிடையாது,” என்றார்.

ஆலைக்குள் 200 பணியாளர்கள்

நீதிமன்றம் அனுமதி மறுத்தும் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலத்தை வெளியேற்றும் பணிக்கு உதவ 200 பணியாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள சந்தீப் நந்தூரி, உயர்மட்ட நிபுணர்கள் குழுவின் பரிந்துரையின்படியே பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு கடந்த மே மாதம் 23-ந் தேதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. நேற்று விசாரணை நடைபெற்ற போது, ஆலையை நிரந்தரமாக மூடும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெறும் என கூறியுள்ளது.