26 ஆண்டுகளுக்குப் பின் ஆசியாவின் மிகப்பெரிய இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டுகிறது

Read Time:5 Minute, 13 Second

ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை தனது முழுக் கொள்ளளவை எட்ட இருப்பதால் 26 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட உள்ளது. அணையின் நீர்மட்டம் 2,395 அடியை எட்டியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இடுக்கி அணை குறவன் மலை மற்றும் குறத்தி மலை ஆகிய இரு அணைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

ஆசியாவிலேயே கட்டப்பட்ட வளைவு அணைகளில் இடுக்கி அணை மிகப்பெரிய மற்றும் உயரமான அணையாகும். கடந்த 1969-ம் ஆண்டு அணைக் கட்டும் பணி தொடங்கப்பட்டு 1973-ம் ஆண்டுபயன்பாட்டுக்கு இடுக்கி அணை வந்தது. 1981-ம் ஆண்டும், 1992-ம் ஆண்டும் இருமுறை மட்டுமே இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியதால், திறக்கப்பட்டது. இப்போது, கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் இந்த அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து

இடுக்கி அணை

மாலை அணையின் நீர்மட்டம் 2,395 அடியை எட்டிய நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை (Orange alert) விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 2,397 அடியை எட்டும் பட்சத்தில் பரிசோதனை முறையில் ஓரிரு மணி நேரங்களுக்கு ஒரு முறை தண்ணீர் திறந்து விடும் வாய்ப்புகள் அதிகம் என்று கேரள மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணையின் மொத்த உயரம் 550 அடி உயரமாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் மின்சாரம் எடுக்கப்பயன்படுகிறது. இந்த நீர்மின் நிலையத்தில் இருந்து 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. செருதோனி, குலமாவு ஆகிய இரு அணைகளையும் இணைத்து, இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த கொள்ளவு 72 டிஎம்சி ஆகும்.

கடந்த 1992-ம் ஆண்டு இடுக்க அணை தண்ணீர் செருதோனி அணை வழியாகத் திறக்கப்பட்டது கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், இப்போது அணை தனது முழுக்கொள்ளவை எட்ட இருப்பதால், அணை திறக்கப்பட உள்ளது. செருதோனி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், மூவாற்றுப்புழா பள்ளத்தாக்கில் உள்ள வேளாண் நிலங்களின் பாசன வசதிக்குப் பயன்படும் அணையின் பாதுகாப்பு கருதி இங்குச் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி கிடையாது. கிறிஸ்துமஸ், ஓணம் பண்டிகை மட்டும் அணை மக்களின் பார்வைக்காக 15 நாட்கள் திறக்கப்படுகிறது.

மீட்பு பணிகள்

மேலும் அசம்பாவித சம்பவமும் ஏற்படாமல் தவிர்க்க ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை தயார் நிலையில் இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்பு படை ஏற்கனவே எர்ணாகுளம், திருச்சூர் நகரங்களுக்கு வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னொரு குழு இடுக்கி செல்லும் என்றும் மாநில முதல்–மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

இடுக்கி அணையை திறப்பதற்கான ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அணையை திறக்கும் போது செருதோனி ஆற்றில் வெள்ளம் பாயும் என்பதால் தரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவது குறித்தும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம் மூலம் விரைவாக செய்ய விவாதிக்கப்பட்டது. அணை உள்ளபகுதியில் இருந்து 100 மீட்டர் சுற்றியுள்ள பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக நிறுவனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

செயற்கைக்கோள் உதவியுடன் கட்டிடங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இரு நாட்களில் இடுக்கி அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேரள அரசும், இடுக்கி மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.