சென்னை – சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டம் கைவிடப்படாது – மத்திய அரசு

Read Time:3 Minute, 48 Second

சென்னை – சேலம் இடையிலான பசுமைவழிச் சாலைத் திட்டத்தை கைவிடும் எண்ணம் கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் வழியாக சென்னைக்கு 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள், இடிக்கப்பட உள்ளதால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிப்பு தெரிவித்து வருகிறார்கள்.

8 வழி சாலைக்கான நிலத்தை அளவீடு செய்து கல் அமைக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலம் கடந்த மாதமே தொடங்கியது. இதற்கிடையே திருவண்ணாமலையை சேர்ந்த விவசாயி ஒருவர் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். சாலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இவ்விவகாரம் மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது.

மாநிலங்களவையில் சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் தொடர்பாக சசிகலா புஷ்பா எம்.பி. பேசினார். பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பது மத்திய அரசுக்கு தெரியுமா?, அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்திருக்கிறார்கள் அதன் விவரம் என்ன? இந்கடுமையான எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை கைவிடுவது தொடர்பாக மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருகிறதா? என அவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு திங்கள்கிழமை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணையமைச்சர் மன்ஷுக் எல். மாண்டவியா எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்தார். அதில் இந்த விவகாரத்தில் பல்லுயிர் பெருக்கம் மற்றும் வனப் பரப்புக்கு இழப்பு ஏற்படுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எட்டுவழி பசுமைச் சாலையை அமைக்கும் அரசின் திட்டத்திற்காக தங்களது நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக கள அலுவலகம் மூலம் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை கைவிடுவது தொடர்பாக மறுபரிசீலனை ஏதும் அரசு மேற்கொள்ளவில்லை. ஆனால், இந்தப் பசுமை வழி சாலையால் 68 கிலோமீட்டர் தூரம் குறைவதுடன் பல்வேறு பயன்கள் உள்ளன என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பசுமை வழித்தடம் அந்த பிராந்தியத்தில் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.