பாதுகாப்பு சவாலில் பல்ப்! சமூகவலைதளத்தில் பொது மக்கள் ஆதார் எண்ணை வெளியிடக் கூடாது என எச்சரிக்கை

Read Time:2 Minute, 30 Second

சமூகவலைதளம் மற்றும் இணையதளத்தில் பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணை வெளியிடக் கூடாது என்று இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரித்துள்ளது.

சமூக வலைதளத்தில் ஆதார் எண்ணை வெளியிட்டு உங்களால் என்ன செய்யுமுடியும்? என சவால் வெளியிட்ட டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மாவின் மொத்த தகவலையும் அம்பலப்படுத்தி பிரான்ஸ் ஹேக்கர் பதிலடியை கொடுத்தார். ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை அடிப்படையாக வைத்து, அவரது தொலைப் பேசி எண், பான் எண், வங்கி கணக்கு எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டது. இது, ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது என கூறிவந்த மத்திய அரசுக்கு புதிய சவாலாக எழுந்துள்ளது. ஆனால், இது உண்மையில்லை என்று கூறிய சர்மா, சவால் இன்னும் முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆதார் ஆணையம் (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம், யுஐடிஏஐ ) தகவல்கள் எங்களுடைய சர்வரில் இருந்து எடுக்கப்பட்டவை கிடையாது என விளக்கம் அளித்தது.

தற்போது, சமூகவலைதளம் மற்றும் இணையதளத்தில் பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணை வெளியிடக் கூடாது என்று இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) எச்சரித்துள்ளது. இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மக்கள் தங்களது ஆதார் எண்ணையோ, பிறரின் ஆதார் எண்களையோ இணையதளம் மற்றும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு, பிறருக்கு சவால் விடுப்பதை தவிர்க்கவும். இது சட்டத்துக்கு எதிரான செயலாகும்.

இதேபோல், பிறரின் ஆதார் தகவலை மற்றவர்கள் ஏதேனும் நோக்கத்துக்கு பயன்படுத்துவதும் ஆதார் சட்டம், இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின்கீழ் குற்றமாகும். இது மோசடி நடவடிக்கையாக கருதப்படும். இதை மீறி, பிறரின் ஆதார் தகவலை யாரேனும் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்டரீதியில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.