3 சதவித மாணவர்கள் படிக்கும் ஐஐடி, ஐஐஎம், என்ஐடிகளுக்கு மட்டும் 50 % நிதி!

Read Time:8 Minute, 37 Second

மத்திய அரசு உயர்கல்விக்காக வழங்கும் நிதியில் 50 சதவிதவிதத்திற்கும் அதிகமான நிதி இந்தியாவை சேர்ந்த வெறும் 3 சதவித மாணவர்கள் மட்டும் படிக்கும் ஐஐடி, ஐஐஎம், என்ஐடிக்கு செலவு செய்யப்படுகிறது. மீதம் இருக்கும் 97 சதவித மாணவர்கள் 865 கல்வி நிறுவனங்களில் படித்து வருகிறார்கள், அவைகளுக்கு 50 சதவிதத்திற்கும் குறைவான நிதியே கிடைக்கிறது.

அதாவது, 97 சதவித மாணவர்கள் படிக்கும் 865 கல்வி நிறுவனங்களுக்கு பொதுமக்களின் வரி பணம் குறைந்த அளவே செல்கிறது.

இவ்வரிசையில் புகழ்பெற்ற இந்திய அறிவியல் இன்ஸ்டிடியூட் (IISC) மற்றும் 10 இந்திய அறிவியல் கழகம் கல்வி மற்றும் ஆராய்ச்சி (IISER) கல்வி நிறுவனங்களும் அடங்கும்.

மறுபுறம் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் (IIIT) என 97 கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் 50 சதவிதத்திற்கும் அதிகமான நிதி வழங்கப்படுகிறது. இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் பகிர்ந்துக்கொண்ட தகவலின்படி, இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் அதிகமான நிதி ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் மற்றும் ஐஐஐடிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்த நிதியில் 26.96 சதவிதம் நிதி ஐஐடிகளுக்கு செல்கிறது. அங்கு 1.18 இந்திய மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள்.

17.99 சதவிதம் நிதி என்ஐடிக்கு செல்கிறது அங்கு 1.37 சதவிதம் மாணவர்கள் படிக்கிறார்கள். 3.35 சதவிதம் நிதி ஐஐஎம்களுக்கு செல்கிறது. அங்கு 0.12 சதவித மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். 2.28 சதவித நிதி ஐஐஐடிகளுக்கு செல்கிறது, அங்கு படிப்பது 0.05 மாணவர்கள் மட்டுமே.

உயர்கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் மீதம் இருக்கும் 48.9 சதவித நிதி மட்டும் 865 பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறது, அங்குதான் 97.4 சதவித மாணவர்கள் படிக்கிறார்கள். மத்திய அரசின் பாரபட்சமான இந்த அணுகுமுறையை கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மத்திய அரசின் மூன்று வருடக்கால தகவல் இப்படி தெரிவிக்கையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த பல்லம் ராஜூ ‘தி பிரிண்ட்’ செய்தி இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், பல ஆண்டுகளாகவே ஒருதலைப்பட்சமான நிதி ஒதுக்கீடு என்பது விதியாக இருந்து வருகிறது என்கிறார்.

“”தொடக்கத்தில் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது மற்றும் ஐஐடிக்கள் முதன்மையான நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டன. அப்போது நிதியளிப்பு விகிதாசாரமாக இருந்தது, அதேசமயம் மத்திய பல்கலைக்கழகங்களிலும் துறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, அவைகளுக்கும் நிதி குறைய தொடங்கிவிட்டது. இந்த கல்வி நிறுவனங்களை இயக்க ஒரு மாற்று வழிமுறைக்கு நாம் எந்தஒரு பணியையும் மேற்கொள்ளவில்லை, அதுதான் பிரச்சனையை ஏற்படுத்தியது.”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் கொள்கைகளை தீவிரமாக கவனித்த மத்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் சுகுதேவ் தொராட் பேசுகையில், இந்த ஒருதலைப்பட்சமான (உயர்மட்டம், கீழ்மட்டம் என இனம்பிரிப்பது) முறையை விமர்சனம் செய்துள்ளார். “உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியானது ஒருதலைப்பட்சமானது. சில கல்வி நிறுவனங்களுக்கு அதிகமான நிதி வழங்கப்படுகிறது. பிற நிறுவனங்களுக்கு நிதியே வழங்கப்படாமல் விடப்படுகிறது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சமமான நிதியை வழங்க வேண்டும், பின்னர் அரசு கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் சுகுதேவ் தொராட்.

அரசின் கல்வி கொள்கை விவகாரங்களில் பணியாற்றிய மற்றொரு அதிகாரி பேசுகையில், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது அரசு கல்வி நிறுவனங்களுக்கு நிதி அதிகமாக வழங்கப்படுகிறது மற்றும் நிதி வழங்கப்படாமல் விடப்படுகிறது. நிதி கிடைக்காத கல்வி நிறுவனங்கள் அனைத்தும் சுயநிதியின் மூலமாகவே செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு நிலையில் கல்வி முறை வளர்ச்சியடையும் என்று நாம் எதிர்பார்க்க முடியும்?

இந்திய கல்வி நிறுவனங்கள் உலக தரவரிசையில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே ஐஐடி மற்றும் என்ஐடிகளுக்கு அதிகமான நிதி வழங்கப்படுகிறது. அடிப்படையான நிலையில் கல்வி முறையில் கவனம் செலுத்த யாரும் விரும்பவில்லை. சில கல்வி நிறுவனங்களுக்கு அதிகமான நிதி வழங்கப்படுவது, பிற நிறுவனங்களுக்கு குறைவான நிதி வழங்கப்படுவதில் அரசின் நிலைப்பாட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது. இது ஜாதி அல்லது உயர்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையில் என பிரிப்பது போன்றது என்கிறார்.

இதுபோக, கொள்கை வகுப்பிலும் ஐஐடி மற்றும் ஐஐஎம்கள் அரசின் அதிகமான கவனத்தை பெறுகிறது.

சமீபத்தில் மத்திய அரசு டெல்லி மற்றும் மும்பை ஐஐடிக்கு உலகத்தர பல்கலைக்கழகங்களுக்கான தகுதியை வழங்கியது. உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த கல்வி நிறுவனங்களுக்கு அதிகமான நிதிஉதவி வழங்கப்படுகிறது. உலகத்தர பல்கலைக்கழகங்களுக்கான தகுதியை வழங்குவதற்கு முன்னதாக ஐ.ஐ.டி. நிறுவனங்களைச் சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ‘விஸ்வஜீத் திட்ட’த்தை அறிவித்தது.

மத்திய அரசின் கவனம்பெற்ற மற்றொரு குழந்தையாகவே ஐஐஎம் உள்ளது. இதுவும் அதிகமான கவனத்தை மத்திய அரசிடம் பெறுகிறது. அவைகள் சொந்த விருப்பப்படி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது, ஆசிரியர்களை நியமித்தல் மற்றும் அரசாங்கத்தின் எந்தவொரு குறுக்கீடு இல்லாமல் தங்களை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது.

2011-ம் ஆண்டில் ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தரத்தை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவரான அணுசக்தித்துறை விஞ்ஞானி அனில் ககோத்கர் “பட்ஜெட்டை சமப்படுத்துதல்” தீர்வாகாது என்று நம்புகிறார். உயர் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் உள்ளது. ஆனால், அதனை சரிசெய்யும் வழி பட்ஜெட்டை சமம்படுத்துவது கிடையாது. இளைஞர்களின் திறமையிலிருந்து மதிப்பை நீங்கள் உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார்.

பிரச்சனையை சுட்டிக்காட்டிய அவர், கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக சிறிய தொகையே செலவு செய்யப்படுகிறது. “பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு செலவழிக்கின்ற பணத்தை அளவிடுவதற்கு பதிலாக, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கல்விக்கு செய்யப்படும் செலவு எவ்வளவு; மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் கல்வி செலவழிக்கின்றோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.