வங்கதேசக் குடியேறிகள் விவகாரம் என்ன செய்யப்போகிறோம்?

Read Time:6 Minute, 6 Second

வங்கதேசக் குடியேறிகள் விவகாரம்; மனிதாபிமான அடிப்படையில் அணுகுவது அவசியம்!

அசாம் மாநிலத்தில் அசாமியர்களுடன், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும் பெரும் அளவில் வசிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் யார் அசாமியர், யார் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதை அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி அசாமில் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு தயாரிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3.29 கோடி விண்ணப்பதாரர்களில் 2.89 கோடி பேரின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அவர்கள் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், 40 லட்சம் பேரின் பெயர்கள் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லை

40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நேரிடுமோ? என்ற அச்சம் எழுந்தது.

ஆனால், இதனை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டுள்ளன. பா.ஜனதாவிற்கு எதிரான ஆயுதமாக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளது தினமும் வார்த்தை மோதல் தொடர்கிறது. பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது. இப்போதைய அறிக்கையின்படி நடவடிக்கை எதையும் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
அசாமில் வங்காளதேச குடியேறிகள் விவகாரம் சுமார் 50 ஆண்டுகளாக நீடித்துவரும் பிரச்சனையாகும். அசாம் மாநிலத்தின் முதல் முதல்-அமைச்சர் கோபிநாத் பர்தல் சுதந்திர இந்தியாவிற்கு முன்னதாகவே வங்காளதேச குடியேறியவர்களை வெளியேற்றுவேன் என்றார். தேசிய சராசரியைவிட அசாம் மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி வேகமாக இருந்த விவகாரத்தில் அவர் முஸ்லீம் லீக் தலைவர் முகமது ஷாதுல்லாவுடன் அடிக்கடி மோதல் போக்கை கொண்டவர். சுதந்திரம் அடைந்த பின்னரும் அசாமில் மக்கள் தொகை அதிகரிப்பு அதிகரித்துதான் வருகிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பிறகட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக கிழக்கு பாகிஸ்தானான வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை பற்றி கண்களை மூடிக்கொண்டுதான் இருந்தது.

1983-ம் ஆண்டு மத்திய அரசு சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்களை வெளியேற்றும் விதமாக சட்டம் கொண்டுவந்தது, ஆனால் பிரச்சனையை தீர்ப்பதில் இது தோல்வியையே தழுவியது.

அசாமில் உள்ள வங்காளதேச குடியேறிகளை கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்து 1985-ல் அசாம் கண பரிஷத் ஆட்சிக்கு வந்தது. அதே வாக்குறுதியை முன்வைத்து 2016-ல் பாரதீய ஜனதா ஆட்சிப்பொறுப்பு ஏற்றது. வெளிநாட்டவர்களின் ஊடுருவல் ஒருகட்டத்தில் வரம்பு மீறவும் எதிர்ப்பு அதிகரித்தது. இப்போதும் அதே விவகாரம்தான் எழுந்துள்ளது. இப்போது தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் வெளியேற்றப்படுவார்களா? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், முக்கியமான அம்சங்களை கருத்தில் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
90-களின் மத்தியில் தொடங்கிய இந்த பிரச்சனையில் யார் இந்தியர்? யார் இந்தியரல்லாதவர் என்பதை கண்டுபிடிப்பது என்பது மிகவும் எளிதான விஷயம் கிடையாது. ஏனென்றால் அசாமில் குடியேறியவர்களின் மகன் – மகள் மற்றும் பேரன்-பேத்திகளோடு மூன்றாவது தலைமுறையை எட்டியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்தியாதான் தெரியும். இவர்களை இப்போது வெளியேறச் சொன்னால் எங்கே போவார்கள்? திருப்பி அனுப்பினால் வங்க தேசம் ஏற்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் வங்கதேசத்துடன் எந்த ஒப்பந்தத்தையும் இந்தியா செய்துகொள்ளவில்லை. இப்பிரச்சினையை அணுகுவதில் பொறுமை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

2014 பாராளுமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வங்காளதேசத்தில் இருந்து குடியேறியவர்களை வெளியேற்றுவோம் என பா.ஜனதா அறிவித்தது. இந்தியா, வங்காளதேசத்துடன் 4,096 கிலோ மீட்டர் எல்லையை கொண்டுள்ளது. இப்போது ஆக்ரோஷமான அணுகுமுறையை கைவிட்டு வங்கதேசத்துடனான எல்லையை வேலியிட்டு அடைப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றலாம். பணிக்காக இந்தியாவரும் எல்லையோர வங்காளதேசிகளுக்கு பணி அனுமதி அட்டையை கொடுத்து, காலம் முடிந்ததும் சொந்த நாட்டிற்கு திரும்பும் வகையில் நடவடிகையை மேற்கொள்ள வேண்டும். அரசியலுக்காக இருதரப்பும் மோதலான போக்கை கொண்டிருக்கலாம், ஆனால், இப்போது இப்பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுவது மிகமிக அவசியமாகும்.