வங்கதேசக் குடியேறிகள் விவகாரம் ‘ஊடுருவல்காரர்களை வெளியேற்றுகிறோம்’ பா.ஜனதாவின் அரசியல்

Read Time:7 Minute, 32 Second

அசாமில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களை வெளியேற்றுகிறோம் என பெரும் அரசியலை பா.ஜனதா மேற்கொள்கிறது.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவிய வங்காளதேச நாட்டவர்களை வெளியேற்ற காங்கிரஸிடம் தைரியம் கிடையாது என்றார். இருப்பினும் மோடி அரசு மார்ச் மாதம் மாநிலங்களவையில் அளித்த தகவலின்படி சட்டவிரோதமாக குடிபெயர்ந்தார்களை வெளியேற்ற காங்கிரஸ் தைரியத்தை கொண்டிருந்தது என்பதை தெளிவுப்படுத்துகிறது.

மாநிலங்களவையில் கடந்த மார்ச் மாதம் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ வெளியிட்ட எழுத்துப்பூர்வமான தகவலில், இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேச நாட்டவர்களை வெளியேற்றுவது தொடர்பாக வங்காளதேசத்துடன் எந்தஒரு ஒப்பந்தமும் கிடையாது. தேசிய குடிமக்கள் வரைவு பதிவேட்டில் இந்தியர்களின் பெயர் மட்டுமே பதிவு செய்யப்படும். இந்தியாவில் சட்டவிரோதமாக இருப்பவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் தேசியத்தன்மையை உறுதிப்படுத்த அவர்களின் விபரங்கள் வெளியுறவுத்துறையின் வாயிலாக சம்பந்தப்பட்ட வெளிநாட்டின் தூதரகத்துடன் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது.

அவர்களுடைய தேசியத்தன்மை உறுதி செய்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் பயண ஆவணங்களை வழங்கிய பின்னர் நாடு கடத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு 2013-ம் ஆண்டில் (மன்மோகன் சிங் ஆட்சி) மட்டும் 5234 வங்காளதேச வெளிநாட்டவர்கள் அந்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதன் பின்னர் 4 வருடங்களில் பா.ஜனதா ஆட்சியில் அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளின் இடையில் 1,822 பேர் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

வெளியேற்ற கொள்கை 

வங்காளதேசத்தில் இருந்து “சட்டவிரோதமாக குடியேறியவர்கள்” எனக் கூறி லட்சக்கணக்கில் மக்கள் வெளியேற்றப்படுவதாக பா.ஜனதா தலைவர்கள் ஒரு அச்சுறுத்தல் போன்ற வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்கள்.
இதில் முக்கியமான விஷயம் மொத்தமாக வெளிநாட்டவர்களை வெளியேற்றப்படும் போது சம்பந்தப்பட்ட நாடு, முதல் அவர்கள் எங்கள் நாட்டவர்கள்தான் என ஒப்புக்கொள்ள வேண்டும், பின்னர் பயணத்திற்கான ஆவணங்களை வழங்க வேண்டும் என்பதாகும். இப்போது வரையில் வங்காளதேசம் மறுப்புதான் தெரிவிக்கிறது. வங்காளதேச தகவல்துறை அமைச்சர் ஹாசுனல் ஹக் இனு பேசுகையில், “இது அசாம் மற்றும் இந்தியா இடையிலான உள்நாட்டு விவகாரம், இதில் வங்காளதேசத்திற்கு எந்தஒரு பணியும் கிடையாது,” என கூறிவிட்டார்.

பா.ஜனதா அரசியல்

அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு (என்.ஆர்.சி.) விவகாரத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய போது 30-ம் தேதி மக்களவையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில் “ தேசிய மக்கள் பதிவேடு பாரபட்சமற்றது, பெயர் இடம் பெறவில்லையென்று யாரும் அச்சப்பட வேண்டாம். பெயர் விடுபட்டவர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும். பெயர்கள் இடம் பெறாவிட்டாலும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஒரு சில பேர் வேண்டும் என்றே அச்ச உணர்வை உருவாக்க திட்டமிடுகின்றனர்.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது முற்றிலும் பாரபட்சம் இல்லாதது. எந்த தவறான தகவலையும் பரப்பக்கூடாது. இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல” என்று குறிப்பிட்டார்.

ஆனால் மாநிலங்களவையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசுகையில், “பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் ஊடுருவல்காரர்கள், இந்தியர்கள் கிடையாது,” என திட்டவட்டமாக பேசினார்.
மாநிலங்களவையில் ஜூலை 31-ம் தேதி பேசிய அமித்ஷா, “அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு உச்சநீதிமன்ற உத்தரவுடன் மேற்கொள்ளப்பட்டது. பதிவேட்டில் 40 லட்சம் பேர் இடம்பெறவில்லை. அவர்களை பாதுகாக்க விரும்புவது யார்? நீங்கள் சட்டவிரோதமான வங்காளதேச நாட்டவர்களை விரும்புகிறீர்களா?” என்று எதிர்க்கட்சிகளுக்கு கேள்வியை எழுப்பினார். காங்கிரஸை விமர்சனம் செய்த அமித்ஷா, இந்நடவடிக்கையை 10 ஆண்டுகளுக்கு முன்னதாக காங்கிரஸ் எடுத்து இருக்க வேண்டும். ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் எடுக்கவில்லை.

இந்தியாவை விட்டு வங்காளதேச நாட்டவர்களை வெளியேற்ற காங்கிரஸிடம் தைரியம் கிடையாது. உங்களுக்கு வாக்கு வங்கி அரசியல் முக்கியம், தேசத்தின் பாதுகாப்பு முக்கியம் கிடையாது. உங்களுக்கு இந்தியர்களுடைய உரிமை முக்கியம் கிடையாது என்று கடுமையாக பேசினார். சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்தவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மனித உரிமைகள் மற்றும் இந்தியர்களின் உரிமையை பாதுகாக்கவே இந்நகர்வு முன்னெடுக்கப்படுகிறது. இதுபோன்ற தேசத்தை நடத்த முடியாது. சட்டவிரோதமாக வந்தவர்களை உங்களால் இந்தியாவின் ஒரு பகுதியிலும் கொண்டிருக்க முடியாது,” என்றார்.

அசாமில் “சட்டவிரோத ஊடுருவல்காரர்களை” என்ஆர்சி கண்டறிந்ததாக ஷா வலியுறுத்தும் நிலையில், இவ்விவகாரத்தில் முழுமையான பயிற்சிக்கான உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலாவு மழுப்பினார். பிரதீக் ஹஜேலா பேசுகையில், “40 லட்சம்பேரும் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள்,” என்று கூறிவிட முடியாது என குறிப்பிட்டார். வரைவு அறிக்கையில் தவறு இருக்கவும் வாய்ப்பு உள்ளது, எனவே அவர்களை சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் என்று இப்போதே கூறுவது என்பது சரியாக இருக்காது என்று கூறியிருந்தார். இப்போது பா.ஜனதா செய்யும் அரசியலுக்கு திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதி தீனியை போடுகிறது.