பிரியங்கா காந்தி முதல் இளம் வாக்காளர்கள் வரையில்… 2019 தேர்தலுக்கு காங்கிரஸ் வியூகம்

Read Time:7 Minute, 48 Second

2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக தேர்வுச் செய்யும் வகையில் அக்கட்சியின் பிரசாரம் இருக்கும்.

2014 தேர்தலில் அடைந்த படுதோல்வியில் இருந்து மீட்கும் பொறுப்பாக ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி பிரசாரத்தில் இறக்கப்படுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல்-மேயில் நடக்கும். தேர்தல் பணிகளில் முன்னதாகவே தீவிரம் காட்டுவதில் காங்கிரஸ் நம்பிக்கையை கொண்டுள்ளது. இதற்காக கட்சிக்கு 100 நாள் செயல் திட்டம் ஒன்றை காங்கிரஸ் முன்னெடுக்கிறது. பா.ஜனதா கட்சியை தோற்கடிக்கும் வகையில் 300 தொகுதிகளில் தன்னுடைய வலிமையியில் கூடுதல் கவனத்தை செலுத்துவதற்கு காங்கிரஸ் இத்திட்டத்தை முன்னெடுக்கிறது.

பிரியங்கா காந்தி, கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் இளம் வாக்காளர்களை குறிவைப்பது என்ற மூன்றும் காங்கிரஸ் வியூகத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது. காங்கிரசின் பல்வேறு பிரிவுகளுக்கான இலக்கு, அதனை அடைவதற்கான திட்டங்களில் பிரியங்கா காந்தி கவனம் செலுத்த உள்ளார். சில வாரங்களுக்கு முன்னதாக பிரியங்கா காந்தி கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். 2019 தேர்தலுக்கான அடிப்படை கள திட்டத்திற்கு பணியை மேற்கொள்வது சம்பந்தமாக கூட்டம் நடைபெற்றுள்ளது. 100 நாள் செயல் திட்டம் தொடர்பான பணிகளை பிரியங்கா காந்தி கண்காணிக்கிறார்.

100 நாள் செயல்திட்டம்

கல்வியாளர் எம்.பி. ராஜீவ் கவுடா, ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் மகாஜன் மற்றும் சமூக தொழில் முனைவர் விஜய் மஹஜன் ஆகியோரும் கட்சிக்கு அரசியல் ஆய்வு தகவல்களை கொடுக்கிறார்கள். தேசம் எதிர்க்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் கவனம் செலுத்தி பிரசாரத்திற்கான கருப்பொருளை உருவாக்க ஆதரவு அளிக்கிறார்கள். முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்களின் சாதனைகளும் அதில் இடம்பெறும். 100 நாட்களில் தங்களுடைய செயல்திட்ட அறிக்கையை அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் பிரிவுகளிடம் கேட்டுக்கொள்ளப்படும், இறுதி நாட்களில் அறிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

“கட்சியின் அனைத்து பிரிவுகளுக்கு இலக்கு நிர்ணயம் செய்யவதே 100 நாள் செயல்திட்டத்திற்கு பின்னால் இருக்கும் ஐடியாவாகும். 100 நாட்கள் முடிந்ததும் அவை ஆய்வு செய்யப்படும், பின்னர் 100 நாட்களுக்கு திட்டம் வடிவமைக்கப்படும். இது மிகப்பெரிய தேர்தலாகும், கட்சியின் வெற்றியை உறுதிசெய்ய அனைத்து பிரிவுகளும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்,” கட்சியின் மகிளா காங்கிரசின் இலக்கு புதிய பெண் வாக்காளர்களை இணைப்பதில் இருக்கும், அவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமாக பணியாற்ற வேண்டும் என்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர்.

கூட்டணி வியூகம்

காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை அடுத்த சில மாதங்களில் மேற்கொள்கிறது, குறிப்பாக பா.ஜனதாவை காங்கிரஸ் மட்டும் எதிர்க்கொள்ளும் மாநிலங்களில். பா.ஜனதாவிற்கு எதிராக வெற்றிப்பெற முடியும், வலிமையான எதிர்ப்பை கொடுக்க முடியும் என்ற 300 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி முக்கியமான இடம் வகிக்காத மாநிலங்களில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட்டணி அமைக்கப்பட்டது போன்று, இம்மாநிலங்களில் கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கூட்டணி தொடர்பாக முழு முடிவையும் எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டது.

ராகுல் காந்தியை மையமாக பிரசாரம்

காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள வாய்ப்பு இல்லையென தெரிகிறது. ஆனால் எதிர்க்கட்சியின் பிரசாம் முழுவதும் ராகுல் காந்தியை மையமாக கொண்டே நடைபெறும் என தெரிகிறது. பாராளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு வெகுவாக பாராட்டப்பட்டது. பிரசாரத்தின் போது ராகுல் காந்தியின் சமீபத்திய பேச்சுக்களை முன்வைக்கவும் திட்டமிடப்படுகிறது. பலதரப்பட்ட வாக்காளர்களுடனும் ராகுல் காந்தி உரையாடவும் திட்டம் வகுக்கப்படுகிறது.

இளம் வாக்காளர்கள்

காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தில் முதல்முறையாக வாக்களிக்கவுள்ள இளம் வாக்காளர்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படும், கடந்த தேர்தலுக்கு பின்னர் வாக்களிக்க உரிமை பெற்றவர்களை நோக்கி காங்கிரஸ் பயணிக்கும். காங்கிரஸ் கட்சியின் அறிக்கையின்படி 2019 தேர்தலில் 18 முதல் 23 வயதுடைய இளம் வாக்காளர்கள் 150 மில்லியனாக இருக்கிறார்கள். அவர்கள் இத்தேர்தலில் முக்கிய பங்கை பெறுகிறார்கள். தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது 11.72 கோடி இளம் வாக்காளர்கள் இருந்தனர் என மதிப்பிடப்படுகிறது. இதில் எத்தனை வாக்குகள் பா.ஜனதாவிற்கு சென்றது என்பதை கூறுவது எளிதானது கிடையாது, ஆனால் பா.ஜனதாவிற்கு பெரும் வெற்றியை பெற்று தந்ததில் முக்கிய பங்கை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற இளம் வாக்காளர்கள் 50 பேரிடம் உரையாடவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் மற்றும் மதிப்பீடு தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இந்த இளைஞர்கள், கட்சியின் இளைஞர் அணியை சேராதவர்களாக இருக்க வேண்டும் என்பதிலும் காங்கிரஸ் உறுதிக்கொண்டுள்ளது.