மோடி அரசின் நெருக்கடி… ஏபீபி செய்தியாளர்கள் ராஜினாமா!

Read Time:11 Minute, 32 Second

ஏபீபி செய்தி நிறுவனத்தின் மூத்த ஆசிரியர்கள் மிலிந்த் காண்டேகர், புண்ய பிரசூன் பாஜ்பாய் ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதனையடுத்து செய்தி சேனலின் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி மீதான விமர்சனம் இருக்கக் கூடாது எனும் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்துக் கேள்வி கேட்ட மூத்த செய்தித் தொகுப்பாளர் அபிஷார் ஷர்மா விடுப்பில் அனுப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஊடகத் தணிக்கை என்பது புதியது ஒன்றும் கிடையாது. அரசின் விளம்பரங்களை இழக்கக்கூடும், இதனால் தனியார் நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் ஸ்பான்சர்களும் கிடைக்காமல் போக்கும் என ஊடகங்கள் உண்மையை வெளியே கொண்டுவருதில் அரசுக்கு எதிராக தங்களையே சுய தணிக்கை செய்துக்கொள்கிறது. மற்றொரு புறம் அரசினால் தணிக்கை செய்யப்படுகிறது, நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இப்போது இவ்வரிசையில் சிக்கியுள்ளது பிரபல இந்தி செய்தி சேனலான ஏபீபி செய்தி நிறுவனமாகும்.

சத்தீஷ்கார் சர்ச்சை

ஏபீபி செய்தி சேனலில் புகழ்பெற்ற மாஸ்டர் ஸ்டிரோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் புண்ய பிரசூன் பாஜ்பாய். அவருடைய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தனது கிராமப்புறத் திட்டங்களின் வெற்றிக்கதையாக சத்தீஷ்கார் பெண்மணி சந்திராமணி கவுசிக் உதாரணத்தை முன்னிறுத்தியதின் உண்மையை நிலையை வெளிக்கொண்டுவந்தார். அதாவது, பிரதமர் மோடியிடம் பேசிய சந்திராமணி கவுசிக், நெல் பயிரிடுவதை நிறுத்திவிட்டு, சீதா பழச்சாறு பணியில் கவனம் செலுத்தியதால் தன்னுடைய வருமானம் இரட்டிப்பாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
இதில் உண்மைதன்மையை அறிய ஏபீபி செதி நிறுவனம் கவுசிக்கை பேட்டியெடுத்துள்ளது. அப்போது, பிரதமர் மோடியிடம் வீடியோவில் பேசும் போது வருமானம் இரட்டிப்பாகிவிட்டது என்று கூற அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர் என கவுசிக் கூறியதாக செய்தி வெளியானது. இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் உடனடியாக கையில் எடுத்தது, பாஜ்பாய் நிகழ்ச்சியின் முக்கிய தகவலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் டுவிட் செய்தார். இதற்கிடையே MyNation னில் வெளியான செய்தியில் பெண், பிரதமர் மோடியிடம் பேசியது உண்மையானது என்று கூறும் தகவல் இடம்பெற்றது. நெல் பயிரிடுதலுக்கு பதிலாக பழச்சாறு செய்யும் பணியை தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை குறிப்பிட்டு பா.ஜனதா தலைவர்கள், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்யவர்தன் ரதோர் ஆகியோர் ஏபீபி செய்தி நிறுவனத்தை விமர்சிக்கும் வகையில்  #UnfortunateJournalism என்ற ஹேஷ்டேக்டுடன் டுவிட்டரில் தகவல் பதிவிட்டார்கள். இதனையடுத்து ஏபீபி செய்தியாளர்கள் மீண்டும் சந்திரமணி கவுசிக்கிடம் பேசி விளக்கம் வெளியிட்டது. பிரதமர் மோடியிடம் கவுசிக் பேசிய போது “சீதா பழங்களை விற்பனை செய்வதற்கு பதிலாக பழச்சாறு செய்யும் பணியை தொடங்கியதால் தன்னுடைய வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. ரூ. 50, 60தில் இருந்து 700 வரையில் உயர்ந்துள்ளது, கிரிஷ் ஆத்மா பரியோஜனா திட்டத்திற்கு நன்றி,” என தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏபீபி செய்தியாளர்கள் பேசிய போது, கவுசிக் கூறுகையில் இதில் பங்குபெறும் 12 பேரின் வருவாய்தான் ரூ. 700 என்று விளக்கம் கொடுத்துள்ளார். எனவே 700 ரூபாயை 12 ஆக பிரிக்கும் போது ஒரு நபருக்கு ரூ. 59 தானே கிடைக்கும். இதில் அவர் எங்கே இரட்டிப்பு தொகையை எட்டியுள்ளார்? என்று ஏபீபி கேள்வியை எழுப்பியது. இந்த மோதல் விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

பாராளுமன்றத்தில் எதிரொலிப்பு

மாநிலங்களவையில் ஏபீபி செய்தி நிறுவன விவகாரத்தில் எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஒ’பிரையன் கடும் கண்டனம் தெரிவித்தார். மக்களவையில் காங்கிரஸ் எழுப்பியது. ஊடகங்களில் குரலை ஒடுக்கும் மோடி அரசின் முயற்சி என விமர்சனம் செய்தது.
இதற்கு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் பேசுகையில், சத்தீஷ்கார் விவகாரம் தொடர்பாக செய்தி சேனல் வெளியிட்ட தகவல் தவறாகும். இதுதொடர்பாக மத்திய அரசு எந்தஒரு நோட்டீசும் நிறுவனத்திற்கு வழங்கவில்லை,” என்றார்.

ஏபீபி பார்வையாளர்கள் புகார்

இதற்கிடையே கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் பாஜ்பாய் நிகழ்ச்சியைப் பார்க்க முடியவில்லை புகார்களை சமூகவலைதளங்களில் தெரிவித்தனர். மோடியின் திட்டத்தால் சத்தீஷ்கார் பெண்மணி கவுசிக், தனது வருமானத்தை இரு மடங்காக உயர்த்திக்கொண்டதாக வெளியான செய்தியை மறுத்து செய்தி வெளியிடப்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சி முடக்கம் தொடங்கியதாக சேனலுடன் தொடர்புகொண்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறினார் என தி வையர் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தி சேனல் இரவு 9 மணி முதல் 10 மணி வரையில் செயல்படவில்லை என பார்வையாளர்கள் குற்றம் சாட்டினார். அப்போதுதான் பாஜ்யாப் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும். இதுதொடர்பான கேள்விகளையும் டுவிட்டர்வாசிகள் எழுப்பினார்.

கேள்வி கேட்கக்கூடாது?

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரதமர் மோடி பேசுகையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டிருக்கிறது என்று கூறியதை குறிப்பிட்டு, மறுநாளே மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு படுகொலைகளை ஒப்பிட்டு செய்தி வெளியிட்டதே அபிஷார் மீதான நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டதும், ஏபீபி செய்தி நிறுவன சி.இ.ஓ. அடிதெப் சர்கார் நிகழ்ச்சியை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால் நிகழ்ச்சியை உடனே நிறுத்தாததற்காக காண்டேகரை சி.இ.ஓ. சர்கார் கடிந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. செய்தி துவங்கி 5 நிமிடங்களே ஆகியுள்ளதால் அது சாத்தியம் இல்லை எனக் கூறியுள்ளார்.

செய்தி நிகழ்ச்சி முடிந்ததும், மோடியை விமர்சிக்க வேண்டாம் எனத் தொகுப்பாளரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், நிர்வாகம் அவரை 15 நாட்கள் காத்திருப்பில் வைக்க உத்தரவிட்டது. இனி மோடி அரசை விமர்சிக்கக்கூடாது என சேனலின் அனைத்து நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உத்தரவுகளை சர்கார் நேரடியாக பிறப்பித்ததாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என தி வையர் செய்தி வெளியிட்டுள்ளது.

கருப்பு நாள்

மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜ்யவர்தன் ரதோர் ஆகியோர் செய்தி நிறுவனத்திற்கு எதிராக டுவிட் செய்ததை அடுத்துதான் செய்தியாளர்கள் மீதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே “தங்களுடைய பணியை செய்தவதற்காக செய்தியாளர்கள் தண்டிக்கப்படுகிறார்கள், ஏபீபியில் ஊடகத்துறைக்கான கருப்பு நாள்,” என்று அந்நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக தி குயன்ட் செய்தி வெளியிட்டுள்ளது. செய்தி நிறுவனத்திற்கான ஸ்பான்சர் நிறுத்தப்பட்டுள்ளது, அரசிடம் மட்டுமின்றி தனியாரிடம் இருந்தும் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளது என அத்தகவல்கள் தெரிவிப்பதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி அரசின் ஊடகங்களை தணிக்கை செய்கிறது என செய்தியாளர்கள், இணையதள ஊடகங்கள் விமர்சனம் செய்யும் நிலையில், நெருக்கடி நிலைகூட இல்லாத இப்போதைய சூழ்நிலையில் மெயின்ஸ்டீரிம் ஊடகங்கள் வாயை கட்டிக்கொண்டு நிற்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

தமிழ் ஊடகம் மீதான பிரதமர் மோடியின் பாசம்

2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர் ஊடகங்களை சந்திப்பதை தவிர்க்கும் பிரதமர் மோடி சமீபத்தில் தமிழக ஊடகங்களின் தலைவர்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் ஊடகங்களை சந்திப்பதை தவிர்க்கும் மோடி, தமிழ் ஊடகங்கள் மீது அப்படியொரு பாசம் கொண்டிருக்கிறார்?. மிகவும் ரகசியமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் எந்தஒரு பத்திரிக்கையிலும் வெளியாகவில்லை. அமைச்சர் ஒருவருடன் புகைப்படம் எடுத்தாலே பகிரும் செய்தியாளர்களும், பிரதமர் மோடியுடனான சந்திப்பு தொடர்பாக எந்தஒரு தகவலையும் கசியவிடவில்லை. ஒருவேளை ஊடகங்கள் மூலம் தாமரையை மலரச் செய்ய போராங்களா?.

அரசியல் கட்சிக்கு ஊடகங்களின் ஆதரவு முக்கியமானதுதான். நெருக்கடி நிலையின் போது தணிக்கையினால் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில்தான் இருந்தது. ஆனால் 1977 தேர்தலில் என்ன நடந்தது என்பது வரலாறை பார்த்தால் தெரியும். இந்திரா காந்தி வலுவான எதிர்க்கட்சிகள் கூட இல்லாமல் தோல்வியை தழுவினார். இப்போது ஊடகங்களை வைத்து எல்லாம் சாதிக்க முடியும் என்று எண்ணினால் அதைவிட வேடிக்கை எதுவாகவும் இருக்க முடியாது. மக்களை வளைக்கமுடியாது.