மோடி அரசை விமர்சனம் செய்தமையால் நேரிட்ட விளைவுகளை பட்டியலிட்ட செய்தியாளர் பாஜ்பாய்…

Read Time:6 Minute, 10 Second

மோடி அரசை விமர்சனம் செய்தமையால் ஏபீபி செய்தி நிறுவனத்தின் மாஸ்டர் ஸ்டிரோக் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட நேரத்தில் ‘சேட்டிலைட்’ இணைப்பில் இடையூறு ஏற்படுத்தப்பட்டது என்று ராஜினாமா செய்த செய்தியாளர் புண்ய பிரசூன் பாஜ்பாய் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சத்தீஷ்கார் பெண்ணை வருமானம் இரட்டிப்பாகிவிட்டது என கூற அதிகாரிகள் வற்புறுத்தியதாக ஏபீபி சேனல் செய்தி வெளியிட்டதை அடுத்து மூத்த மந்திரிகளிடம் இருந்து விமர்சனங்களை எதிர்க்கொண்டது. இதனையடுத்துதான் ஏபீபியில் இருந்து இரு செய்தியாளர்கள் மிலிந்த் காண்டேகர், புண்ய பிரசூன் பாஜ்பாய் ராஜினாமா செய்தார்கள். மற்றொரு செய்தியாளர் அபிஷார் ஷர்மா விடுப்பில் சென்றார்.

ராஜினாமா செய்த புகழ்பெற்ற மாஸ்டர் ஸ்டிரோக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் புண்ய பிரசூன் பாஜ்பாய், செய்தி நிறுவனத்தின் உரிமையாளர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியையோ, அரசின் கொள்கையையோ விமர்சனம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார் என தி வையரில் எழுதியுள்ளார். மாஸ்டர் ஸ்டிரோக் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் புகைப்படங்கள், வீடியோக்களை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஜூலையில் சத்தீஷ்கார் செய்தியை வெளியிட்ட பின்னர் மத்திய அரசு அதிகாரியிடம் இருந்து விளைவுகளை சந்திக்க நேரிடும் என எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஏபீபி செய்தி நிறுவனம் பிரச்சனையை எதிர்க்கொள்ள தொடங்கியது. முதலில் ‘சேட்டிலைட்’ இணைப்பில் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் விளம்பரங்களும் நிறுத்தப்பட்டது. நான் ராஜினாமா செய்ததும் ஏபீபி சேட்டிலைட் இணைப்பு சரியானது, வழக்கமான முறையில் விளம்பரமும் வரத் தொடங்கியது என கூறியுள்ளார் பாஜ்பாய்.

ஏபீபி உரிமையாளருடன் ஜூலை 14-ம் தேதி மேற்கொண்ட உரையாடலையும் குறிப்பிட்டுள்ளார்.

உரிமையாளர்:- பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தாமல் இருப்பது சாத்தியமா? நீங்கள் விரும்பினால் அவருடைய அமைச்சரின் பெயரை குறிப்பிடுங்கள். நீங்கள் அரசின் கொள்கையில் உள்ள தவறுகளை வெளியிடலாம், அவருடைய அமைச்சர்களுடைய பெயரை பயன்படுத்தலாம், ஆனால் பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்த வேண்டாம்.

நான்:- “எல்லா அமைச்சர்களுக்கும் பணிபுரியும் அனைத்து திட்டங்களையும் பிரதமர் மோடி அறிவிக்கிறார். ஒவ்வொரு அமைச்சரும் எந்தவொரு திட்டத்தையும் அல்லது அரசாங்க கொள்கையையும் குறிப்பிடுகையில் ஒவ்வொரு முறையும் அவரது பெயரைப் பேசும்போது அவரை எப்படி குறிப்பிடாமல் இருக்க முடியும்?”

உரிமையாளர்:- “சில நாட்கள் கழித்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். நீங்கள் சரியான விஷயத்தை செய்கிறீர்கள், தயவுசெய்து இப்போது நிறுத்தி வையுங்கள்,” என்று கூறினார் என குறிப்பிட்டுள்ளார் பாஜ்பாய்.

சத்தீஷ்கார் விவகாரத்தை ஒளிபரப்பு செய்த பின்னர் செய்தி நிறுவனத்தின் ரேட்டிங் தேசிய அளவில அதிகரித்தது. ஆனால் பாரதீய ஜனதா அதனை புறக்கணிக்க தொடங்கியது என குற்றம் சாட்டும் பாஜ்பாய், ஏபீபியின் வருடாந்திர மாநாட்டில் இருந்து விலக அரசு முடிவு செய்தது. இது, அரசை எதிர்த்தால் அவர்களுடைய தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் என எல்லா செய்தி சேனல்களுக்கும் அரசு வழங்கிய செய்தியாகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அரசு, ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. எனவே மீடியாக்கள் அரசை பாராட்டுவதில் இருந்து உண்மையில் என்ன என்பதை வெளிக்கொண்டுவருவதற்கு நகராது.

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் 200 நபர்கள் கொண்ட குழு இந்திய மீடியாக்களில் வெளியாகும் செய்தியை கண்காணிக்கிறது. ஒவ்வொரு செய்தி சேனல்களின் எடிட்டர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அறிவுரை செல்கிறது, அதற்கு அவர்கள் இணங்கவில்லை என்றால் உரிமையாளர்களிடம் செல்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

“சேனல் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டதும் பார்வையாளர்களுக்கு அறிவிப்பை வெளியிட திட்டமிட்டது, ஆனால் சில மணி நேரங்களில் முடிவை நிர்வாகம் திரும்ப பெற்றது. ஒளிபரப்பில் தடங்கலுடன் நெருக்கடி முடியவில்லை, தகவல்களை வெளியிடுவதிலும் தொடர்ந்தது. ஏபீபி மட்டும் கிடையாது 4 பிராந்திய மொழி சேனல்களும் இடையூறுகளை எதிர்நோக்கியது. வெளிநாட்டு பிராண்டுகளுக்கு எதிராக போராடுகிறோம் என்ற கூறும் நிறுவனமும் (பதஞ்சலி) அவர்களுடைய விளம்பரங்களை திரும்ப பெற்றது என்று கூறியுள்ளார் பாஜ்பாய்.