சென்னையின் நீர்நிலைகளை அழிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்…

Read Time:7 Minute, 20 Second

கையில் பையை எடுத்துச் செல்வதை ஒரு வேலையாக கருதியும், அநாகரிகமாக கருதியும் பிளாஸ்டிக் பயன்பாடு அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக மாறி, நிலம், காற்றில் நஞ்சாக கலந்துவிட்டுள்ளது. ஏரி, குளம், வாய்க்கால், கடல் என்று எதையுமே பிளாஸ்டிக் விட்டுவைக்கவில்லை. பிளாஸ்டிக் கழிவுகள் எளிதாக மண்ணோடு மண்ணாக மக்குவது கிடையாது, எரித்து இல்லாமல் ஆக்குவோம் என்று தீயிட்டால், கிளம்பும் புகையை சுவாசிக்க நேரிடும், அதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

2050-ம் ஆண்டில் கடலில் மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் இருக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வாறு பூமிக்கும் நாசம் விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் சென்னை போன்ற நகரங்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. நீர் நிலைகள் மற்றும் வடிகால்களில் தங்கி சுற்றுசூழலுக்கு பெரும் மாசுபாடை ஏற்படுத்துகிறது. நீர் செல்லும் வழியை இவை அடைப்பதால் பருவமழை காலங்களில் வெள்ளமும் நேரிடுகிறது.

சென்னையில் போகும் வழியில் எல்லாம் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை பார்க்கலாம். சென்னையின் நீர்நிலைகளை பிளாஸ்டிக் குப்பைகள் வெகுவாக அழித்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நதிகளில் மிதக்கிறது, கழிவு நீர்ப்பாதைகளை அடைக்கிறது, ஏரிகளில் ஊடுருவ முடியாத ஒரு அடைப்பை ஏற்படுத்துகிறது ஆக்ஸிஜன் கிடைக்காது மீன்கள் மூச்சுத் திணறிச் சாகின்றன, இந்த நீரைக் குடிக்கும் விலங்குகளும் மடிகின்றன. சென்னையில் வணிக நிறுவனங்கள் பருவமழைக் காலத்தில் வடிகால்களான நீர்நிலைகளில் குவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் பாதையை அடைக்கிறது.

நதிகளில் கழிவுநீரைக் கொண்டு செல்லும் சட்டவிரோத கழிவு நீர்ப்பாதைகள் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றது, உணவுப் பொருட்களின் கவர்கள், பிளாஸ்டிக் கோப்பைகள், கவர்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் என பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது.

மாநகராட்சி திடக்கழிவுகளில் தற்போது பிளாஸ்டிக் மற்றும் பேக்கேஜிங் குப்பைகள் 7% பங்களிப்பு செய்கிறது. குப்பைகளை தரம் பிரிக்காதது, தெருக்களில் குப்பைகளை முறையாக அகற்றாமை, குப்பைகளை அவ்வப்போது குப்பைத் தொட்டிகளிலிருந்து அகற்றி சுத்தம் செய்யாதது ஆகியவை இந்த மோசமான நிலைக்கு வித்திடுகிறது. சென்னையில் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கே.கே.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் கால்வாயில் அங்கு குடியிருப்போர் நாளொன்றுக்கு சுமார் 10 டன்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுகின்றனர் என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பெரம்பலூர் ரெயில் நிலையம் அருகே எகாங்கிபுரம் கால்வாயிலும் குப்பைகள் கொட்டப்படுவதும் மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் பேசுகையில் “மழைநீர் கால்வாய்களில் 30 சதவித பிளாஸ்டிக் குப்பைகள் அடைந்து கிடக்கின்றன” என்று கூறியுள்ளார்.

மழை காலங்களில் 471 பேருந்து வழித்தடங்களில் வெள்ள நீர் தங்குவதற்கு மழைநீர் செல்லும் பாதைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தங்குவதே காரணம் என்று பேரழிவு மேலாண்மை நிபுணர் என்.மாதவன் குறிப்பிட்டுள்ளார்.

“இதற்கு உதாரணம் பிராட்வே தேக்கநிலை, மழைநீர்ப்பாதைகள் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைக்கப்பட்டதே காரணம்” என்றும் கூறியுள்ளார்.

இந்தியச் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் அருண் கிருஷ்ணமூர்த்தி, சென்னை நகருக்கு உள்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி நீர்நிலைகள் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக நீர்நிலைகள் அனைத்தும் குப்பைகளை கொட்டும் தளமாகியுள்ளது. பாலித்தீன் பைகள் முதல், காலணிகள், பயன்படாத பிளாஸ்டிக் பர்னிச்சர்கள் என்று அனைத்து வகையான குப்பைகளும் கொட்டப்படுகிறது. குப்பை கொட்டப்படும் இடங்களில் இருந்து நீர் நிலைகளுக்கு செல்கிறது. இதனால் நீர் மற்றும் நலம் அதிகமாக மாசுபடுகிறது, சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது. தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாற்றுகிறது என்று கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதால் ஒரு கட்டத்தில் நீர்நிலைகளை சரிசெய்ய முடியாது என்ற நிலைக்கு தள்ளுகிறது. மேற்பரப்பை ஆக்ரமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளினால் நீர்நிலைகளே மரணித்து விடுகிறது. “அசுத்தமான நிலை மற்றும் ஆக்ஜிஸன் குறைவு காரணமாக மீன்கள், நீர்த்தாவரங்கள் அழிகின்றன,” என கூறுகிறார் சுற்றுச்சூழல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில். பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்யும் சிஸ்டம் தேவை என்று கூறும் அவர், இயற்கையான பொருட்களை பயன்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

“நிலம் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்லும் 7% பிளாஸ்டிக் குப்பைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 1% மட்டுமே மற்றவையெல்லாம் பிஸ்கட், சாக்லெட் கவர்கள், காஸ்மெடிக் டியூப்கள், ஷாம்பூ, எண்ணெய் சாஷேக்கள் ஆகியவையே பெரும்பங்கு வகிக்கின்றன. மறுசுழற்சி முறையை முன்னெடுக்க அரசுடன் இணைந்து பணியாற்ற பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் தயாராக இருக்கின்றனர். நிலம் மற்றும் குப்பைகளை சேகரிக்கும் ஒரு முறைசார்ந்த நடவடிக்கையே தேவை” என்கிறார். தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் பி.சுவாமிநாதன்.